TopBottom

ஜெயம் கொண்டான் - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 03 September 2008


உறுத்தாத கதை, குழைக்காத திரைக்கதை என கிளின் பிச்சர் வகையறா லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய படம் இது.



லண்டனில் இன்ஜினியராக இருக்கும் வினையை சென்னைக்கு அழைத்து வருகிறது அப்பாவின் இறப்பு. இதுவரை சம்பாதித்து அனுப்பிய பணத்தை வைத்து கன்ஸ்ட்ரக்ஸன் தொழிலில் பெரியாளாக வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

இதற்கான முதலீட்டுக்காக மதுரையில் இருக்கும் சொத்தை ( வீடு ) விற்பதற்கான முயற்சியில் இருப்பவருக்கு அங்கே காத்திருக்கிறது அதிர்ச்சி. அப்பாவின் இரண்டாந்தாரத்து மகளான (தங்கை) லேகா வாஷிங்டன் வழக்கு, தாதாவின் மிரட்டல் என அடுக்கடுக்கான தொல்லைகளை தர, நொந்து நூலாகிறார்.இதற்கிடையே வில்லனுடன் ஏற்படும் கைகலப்பில் வில்லனின் மனைவி எதிர்பாரா வகையில் இறந்துவிட, அவனது கொலைவெறி கோபத்திற்கும் ஆளாக நேரிடுகிறது.



துஷ்டனை கண்டால் தூர விலகு பாலிசியில் ஓடும் வினையை துயரம் மட்டும் விடுவதாயில்லை. ஒரு பக்கம் வில்லனின் துரத்தல்,மறு பக்கம் தங்கையுடனான சொத்து மற்றும் பாசப் போராட்டத்தில் ஜெயம் கிட்டுகிறதா வினைக்கு என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது மீதி கதை.

படத்தில் வினையைத் தவிர மேலும் இரண்டு ஹீரோக்கள் உண்டு. ஒருவர் இயக்குனர், மற்றொன்று திரைக்கதை. ஒன்றிரண்டு ஐந்து எண்ணுவதற்குள் சொல்லி முடித்துவிடும் கதையில் அழகான முடிச்சுகள், அருவருப்பு இல்லாத காட்சிகள் என திரைக்கதை வழங்கிய விதத்தில் நயத்தையும் நாகரிகத்தையும் கடைப்பிடித்திருக்கும் இயக்குனர் கண்ணனுக்கு ஜெயம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.



அதிகபிரசங்கித்தனம் எட்டிப்பார்க்காத எதார்த்த நடிப்பு வினய்க்கு சுலபமாக வருகிறது. மற்ற ஹீரோக்களிடம் இல்லாத தனித்துவத்தையும் இவரிடம் காணமுடிகிறது.வில்லனுக்கு எதிராக வீரத்தை காட்ட முஷ்டி மடக்கும் வழக்கமான கதாநாயகர்களிடமிருந்து சற்று விலகி நிற்கும் பக்குவம் மிக்க பாத்திரத்தில் பொருத்திக்கொள்ளும் திறமையும் இவரிடம் நிறைந்தே உள்ளது.



அடம்பிடிக்கும் தங்கை, திடீரென நிராகரிக்கும் நண்பர்கள், லட்சிய நினைப்பில் விழும் கீறல் என தன்னை சூழ்நிலை பருந்துகள் குதறும் இடங்களில் வினையுடன் சேர்ந்து நாமும் உருகமுடிகிறது. வேறு சில சமயங்களில் குழந்தை பருவத்து தோழியான பாவனாவுடன் உண்டாகும் காதல் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.

வேறொரு விஷயமாக வீட்டுக்கு வரும் நாயகனை தன்னை பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிளையாக கருதும் பாவனாவின் நடவடிக்கைகள் ரசனை. தன் பங்குக்கும் ப்ளாஷ்பேக் புருடாவை அவிழ்த்துவிட்டு வினய்யின் மனசுக்குள் இடம் பிடிக்கும் இடங்களில் ஆஹா... பிரமாதம் பாவனா. இவரது தங்கையாக வரும் சரண்யாவின் சுட்டித்தனங்களும் சுவாரஸ்யம்.



பிடிவாதத்துடன் கூடப் பிறந்தவராக வரும் வினய்யின் தங்கை லேகா வாஷிங்டனும் நல்லத் தேர்வு. அம்மாவின் சடலம் பார்த்து அழாமல் இருப்பவர், பிரிதொரு முறை தனியாக அமர்ந்து உடைந்தழும் காட்சியில் கைத்தேர்ந்த நடிப்பை காட்டியிருக்கிறார்.



காது சவ்வை கிழித்தெடுக்காத சைலண்ட் வில்லனுக்கும் சின்னதா ஒரு கதை வைத்திருப்பதிலும் தனது கெட்டிக்காரத்தனத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர். விவேக், சந்தானத்தின் காமெடியும் திரைக்கதையிலிருந்து விலகாமல் இருப்பதும் பாராட்டுக்குரியது.



பாலசுப்ரமணியத்தின் துல்லியமான லைட்டிங் திறமைக்கு எல்லா காட்சிகளுமே சாட்சியம் கூறுகின்றன.குறிப்பாக வீட்டிற்குள் படம் பிடித்த விதம் நமக்கு பிடிக்கிறது. வித்யாசாகரின் இசையில் 'நான் வரைந்து வைத்த ஓவியம்...' பாடலும் யுகபாரதியின் வரிகளும் கவர்ந்திழுக்கின்றன. க்ளைமாக்ஸில் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், தலைத்தட்டி உணர்த்தும் உண்மைக்காக அவருக்கும் ஒரு சபாஷ். இயக்குனரின் எண்ணத்தை சிதைக்காத எடிட்டர் வி.டி.விஜயனுக்கும் பாராட்டுக்கள்.



இத்தனை சிறப்புகளுக்கும் காரணகர்த்தாவான இயக்குனர் ஆர். கண்ணன் நல்ல படம் கொடுத்துவிட்டோம் என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டாலும் கைகுலுக்கி பாராட்டலாம் தப்பில்லை.

'ஜெயம்கொண்டான்' வென்றான்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments