TopBottom

பொய் சொல்லப் போறோம் - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 10 September 2008

நடுத்தர மக்களின் கனவே அரை கிரவுண்டு நிலமும், அதில் சின்னதாக ஒரு குடிசையும்தான்! இந்த கனவு இல்லத்தின் மேல் விழுகிற இடியை, அடிமேல் அடி வைத்து அளந்திருக்கிறார் இயக்குனர் விஜய். சீரியசான கதையை சிரிப்பாகவும், சிறப்பாகவும் கொடுத்திருப்பதால், இரண்டரை மணி நேரம் நொடியாக கரைகிறது.

தனது ரிட்டையர்மென்ட் பணம் முழுவதையும் கொட்டி, லேண்ட் வாங்கிப் போடுகிறார் நெடுமுடி வேணு. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது போல அந்த நிலத்தை நாசர் ஆக்ரமிக்க, அவரோடு சமாதான பேச்சு நடத்துகிறார் வேணு. மேலும் 12 லட்சம் கொடுத்தால், இடம் உங்களுக்கு என்று பேரம் பேசுகிறார் நாசர். தனது இடத்தில் சட்டத்தை மீறி ஆக்ரமிப்பு செய்ததே குற்றம். இதில் மேலும் 12 லட்சமா? முடியாது என்று மறுக்கும் நெடுமுடிக்கு மறுபடி மறுபடி சோதனை. ஒரு கட்டத்தில் போன வரை போகட்டும். நிலமே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்ளும் அப்பாவுக்கு ஆறுதலாக களத்தில் இறங்குகிறார் மகன் கார்த்திக். வேறு படமாக இருந்தால், தன் புஜத்தையே பொக்லைன் எந்திரமாக்கியிருப்பார் ஹீரோ. இது வேறு டைப் படம். யதார்த்தமும், நகைச்சுவையும் இழையோட, இடத்தை மீட்கிறது கார்த்திக் டீம்.

“இன்னும் வீடே கட்டலை. அதுக்குள்ளே குப்பையை கொண்டு வந்து போட்டிருக்கான் பார்” என்று கர்ம சிரத்தையோடு காலி மனையை கவனித்துக் கொள்ளும் அப்பா கேரக்டரில் நெடுமுடி வேணு. மனை வாங்கிய சந்தோஷத்தில் மகன்களுக்கே 'தண்ணி' பார்ட்டி வைக்கும் ஜாலி அப்பாவாக கலக்கியிருக்கிறார். நிலம் நமக்கில்லை என்றதும் கலங்கி நிற்கிறார். பிள்ளைகளிடம் கண்டிப்பும், இயலாமையும் கலந்தோட, பேச இயலாமல் தவிக்கும்போது பதைக்க வைக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகரல்லவா? இவருக்கு ராஜேஷின் பின்னணி குரல் செம மேட்ச்!

இத்தனை காலமாக 'எல்' போர்டாகவே வந்த கார்த்திக்கை நம்பி ஸ்டியரிங்கை ஒப்படைத்திருக்கிறார்கள். வாகாக பற்றிக் கொண்டு ஹாயாக கிளம்பியிருக்கிறார். கோடம்பாக்கத்தின் க்யூ கொஞ்சம் கார்த்திக் வீட்டுப்பக்கமும் நீளும்! தனக்கு வைக்கப்பட்ட உப்பிலி என்ற பெயரை சகிக்க முடியாமல் இவர் தவிப்பது அழகு. “உப்பிலி காந்த் என்று மாற்றிக் கொள்ளேன்” இந்த டைனிங் டேபிள் காமெடி சகிக்காமல் அவர் முகம் சுளிப்பதும் சுவாரஸ்யம். ஆனால் லட்டு மாதிரி ஹீரோயினை வைத்துக் கொண்டு இஞ்சி தின்ற மங்க்கியாக திரிவதுதான் ஏனாம்?

டக்கரான கேரக்டரில் நாசர். கலர் சட்டையும், அந்த மீசையும் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கிறது. இடத்தை பார்வையிடுகிறேன் பேர்வழி என்று வேலைக்கார பெண்ணை நோட்டமிடுவதும், அசால்ட்டாக தனது பேண்டை சரி பண்ணிக் கொள்வதுமாக, நாசரின் பாடி லாங்குவேஜுக்கு தியேட்டரே கலவரமாகிறது. அதிலும் குடித்துவிட்டு அவர் அடிக்கும் லூட்டியில் வயிறு கலங்கி போகிறது.

மௌலியும், அவரது செகரெட்டரி பாலாஜியும் அடிக்கிற லூட்டிகள் மட்டும் என்னவாம்? மீன் வளத்துறைக்கு சொந்தமான இடத்தை நாசரிடம் விற்க முயல்கிற நேரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே ஜீப்பில் அங்குவர, அவர்களை பாலாஜி சமாளிப்பது வெடிச்சிரிப்பு. கொச்சின் ஹனிபா, பாஸ்கி ஆகியோரும் குலுங்க வைக்கிறார்கள். நாயகி பியாவிடம், கொஞ்சூண்டு ஜெனிலியா சாயல். அதுவே ஸ்பெஷல்!

காத்து கருப்பு...,
இல்லைய்யா, நான் முத்துக்கருப்பு.
என்னய்யா பேரு இது? முத்து எப்படிய்யா கருப்பா இருக்கும்?
காத்தே கருப்பா இருக்கும்போது முத்து இருக்காதுங்களா?
-இப்படி போகிற போக்கில் ஜோக் தோரணம் கட்டுகிறது வசனங்கள்.

ரசனையான ஒளிப்பதிவு, ஷார்ப்பான எடிட்டிங், சூழ்நிலைக்கு வலு சேர்க்கும் பின்னணி இசை, இவையெல்லாம் ரசவாத கலவையாக கவர்ந்திழுக்கின்றன. பாடல்களில் 'ஒரு வார்த்தை பேசாமல்...' மியூசிக்கல் ஹிட்! புது இசையமைப்பாளர் எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கு ஒரு ஓஓஓஓ....

முதல் படத்தை விடுங்கள். இந்த இரண்டாவது படத்தில்தான் 'கிரீடம்' சூடியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

பின் குறிப்பு- டைட்டிலில் விஜய் காட்டும் அழகான பொய்களுக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்!

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments