TopBottom

மும்பையில் கொலைவெறி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

பொதுவாக, தீவிரவாதிகள்
குண்டுகளை வைத்து விட்டு பதுங்கி விடுவதையும், அந்த குண்டுகள் வெடித்து சேதம் ஏற்படுவதையும் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போல் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானில் இருந்து 23 தீவிரவாதிகள் ஒரு கப்பலில் வந்து,
நடுக்கடலில் இருந்து 3 படகுகள் மூலமாக மும்பைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து, நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணியில் இருந்து இரவு 10.50 மணிவரை அடுத்தடுத்து 10 இடங்களில் இயந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும், கை எறிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

முதலில் லியோபோல்டு கபே என்ற
ஓட்டலில் தொடங்கிய தாக்குதல், நாரிமன் ஹவுஸ், சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ்மகால் பேலஸ் ஓட்டல், டிரைடண்ட் (ஓபராய்) ஓட்டல், வில்லே பார்லே, காமா ஆஸ்பத்திரி, மெட்ரோ சினிமா தியேட்டர், வாடி பன்டர், கிர்காம் சவுபாத்தி ஆகிய இடங்களில் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல்களில் 125 பேர் பலியானார்கள். 327 பேர் காயம் அடைந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த தாக்குதல்களால்
மும்பை ரத்தக்களறி ஆனது. போலீசாரும், அதிரடிப்படை கமாண்டோக்களும் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் முடுக்கி விடப்பட்டனர். காமா ஆஸ்பத்திரியில் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர். சவுபாத்தி-கிர்காம் கிராசிங் என்ற இடத்தில் 2 தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.

இதற்கிடையே, கேட்வே ஆப் இந்தியா பகுதியில் உள்ள நூறாண்டு பழமை மிக்க தாஜ் ஓட்டல் மற்றும் நாரிமன் பாயிண்டில் உள்ள டிரைடண்ட் ஆகிய ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அங்கிருந்த 200-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களாக பார்த்து பணய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

இந்த ஓட்டல்களில் தங்கி இருந்த வேறு சிலர், பீதியில் தங்களது அறையை உள்பக்கமாக பூட்டி உள்ளேயே இருந்து கொண்டனர். சிலரை ஓட்டல் நிர்வாகமே ஒரு பெரிய அறையில் பத்திரமாக தங்க வைத்தது. இதனால் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவிப்போர் எத்தனை பேர் என்று உறுதியாக தெரியவில்லை. தாஜ் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்ற பா.ஜனதா எம்.பி. புபேந்திரசிங் சோலங்கி, மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. என்.கிருஷ்ணதாஸ், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. மணி திரிபாதி உள்பட 4 எம்.பி.க்களும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து போலீசாரும், அதிரடிப்படையினரும் இரண்டு ஓட்டல்களையும் சுற்றி வளைத்தனர். அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே விடிய விடிய கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், நேற்று பொழுது விடிந்தது. தீவிரவாதிகளை
வெளியேற்ற புனே மற்றும் டெல்லியில் இருந்து கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டனர். 800 ராணுவத்தினர், 400 கறுப்பு பூனைப்படை கமாண்டோக்கள், 40 கடற்படை கமாண்டோக்கள், 600 அதிவிரைவுப்படை கமாண்டோக்கள் மற்றும் மும்பை தீவிரவாத தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். குறிப்பாக, குறி பார்த்து சுடுவதில் தேர்ச்சி பெற்ற வீரர்கள், இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மொத்தம் இதுவரை 11 தீவிரவாதிகள்
கொல்லப்பட்டுள்ளனர். 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்து வருவதாகவும், அதில் முக்கிய துப்பு கிடைத்து இருப்பதாகவும் மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீல் தெரிவித்துள்ளார்.

தாஜ் ஓட்டலில் நேற்று மாலைக்குள் அனைத்து பணய
கைதிகளையும் ராணுவத்தினர் மீட்டனர். சில உடல்களையும் வெளியே கொண்டு வந்தனர். ராணுவத்தினர் முன்னேறி வருவதை தடுக்க, தீவிரவாதிகள் அவ்வப்போது கை எறிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். நேற்று பகல் 2.30 மணிக்கு 4 பணய கைதிகளை ராணுவத்தினர் மீட்ட சில நிமிடங்களில் தீவிரவாதிகள் ஒரு குண்டை வெடிக்கச் செய்தனர்.

இதனால் தாஜ் ஓட்டலின் 5-வது மாடியின் பின்பகுதி தீப்பிடித்து எரிந்தது. தீப்பிழம்பு வெளியேறியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீயில் சிக்கி தாஜ் ஓட்டல் பொது மேலாளர் கரம்பிர் கங்-ன் மனைவியும், 2 குழந்தைகளும் இறந்து விட்டனர். அவர்களின் உடல்கள், அடையாளம் காண முடியாதபடி கருகி கிடந்தன. கரம்பிர் கங் உயிர் தப்பினார்.

மாலை நேரத்தில் சண்டை சூடு பிடித்தது. 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. நேற்று இரவு தாஜ் ஓட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வண்டி மீது தீவிரவாதிகள் கை எறிகுண்டை வீசி எறிந்தனர். இதனால் அவ்வாகனம் வெடித்து சிதறியது. ராணுவத்தினர் தாஜ் ஓட்டலுக்குள் நுழைந்து ஒவ்வொரு அறையாக தீவிரவாதிகளை தேடினர். இந்த சண்டைக்கு நடுவே, போலீசார் காயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் ஆம்புலன்சு வாகனங்களில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர். ஆஸ்பத்திரிகளில் உடல்களை அடையாளம் கண்டறியும் பணி நடந்து வருகிறது.

மேற்கு இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா, தாஜ் ஓட்டலுக்கு நேரில் வந்தார். இறுதி தாக்குதலுக்கு ராணுவம் தயாராகி வருவதாக அவர் கூறினார்.

டிரைடண்ட் ஓட்டலில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை கறுப்பு பூனைப்படை மற்றும் கடற்படை கமாண்டோக்கள் ஏற்றனர். அங்கு தீவிரவாதிகள் புகுந்தபோது, 385 பேர் தங்கி இருந்தனர். அவர்களில் 60 பேரை கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டனர்.

இருப்பினும், நேற்று இரவு நிலவரப்படி, சுமார் 200 பேர் பணய கைதிகளாக சிக்கி தவித்தனர். ஓட்டல் ஊழியர்கள் 6 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். கமாண்டோக்கள் முன்னேறி வருவதை தடுக்க 5 தடவை கை எறிகுண்டுகளை வீசி எறிந்தனர். குண்டு வெடிப்பால் ஓட்டலின் 4-வது மாடி தீப்பிடித்து எரிந்தது.

டிரைடண்ட் ஓட்டலின், முதல் 3 மாடிகளில் கறுப்பு பூனைப்படை கமாண்டோக்கள் அறை அறையாக புகுந்து தேடினர். இதில் அபு இஸ்மாயில் என்ற தீவிரவாதி பிடிபட்டான். இவன் பாகிஸ்தானில் பரித்கோட் பகுதியைச் சேர்ந்தவன். தொடர்ந்து கமாண்டோக்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது, ஓட்டலுக்கு உள்ளேயே மற்ற தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடந்தது.

நாரிமன் பாயிண்டில் உள்ள நாரிமன் ஹவுஸ் என்ற ïத குடியிருப்பு பகுதியிலும் 5 தீவிரவாதிகள் புகுந்து 5 இஸ்ரேல் நாட்டினரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். அங்கும் அவர்களுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை நடத்தினர்.

தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 125 பேர் பலியாகி இருப்பதாகவும், 327 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் மராட்டிய மாநில முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போலீசாரின் எதிர் தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் தீவிரவாதிகள் யாரையும் பணயக் கைதியாக பிடித்து வைக்கவில்லை என்றும், ஓட்டல்களில் உள்ள சிலர், தாங்களாகவே அறையை பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பதாகவும் அவர் கூறினார். தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் துப்பாக்கி சண்டையில் பலியானோரில் 14 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

மும்பை தீவிரவாத தடுப்பு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே, `என்கவுண்ட்டர்' சிறப்பு அதிகாரி விஜய் சலஸ்கர், கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் பலியானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வெளிநாட்டினர் 9 பேரும் பலியாகி உள்ளனர்.

காயம் அடைந்தவர்களில் 25 போலீசாரும், 7 வெளிநாட்டினரும் அடங்குவர்.

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று மராட்டிய மாநில போலீஸ் டி.ஜி.பி. ஏ.என்.ராய் அறிவித்துள்ளார். தீவிரவாதிகள் அனைவரையும் உயிருடனோ, பிணமாகவோ விரைவில் பிடிப்போம் என்றும் அவர் கூறினார்.

தீவிரவாதிகள் பணய தொகை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அத்தகைய கோரிக்கை எதுவும் வரவில்லை என்று துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு `டெக்கான் முஜாகிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதுதொடர்பாக, சில டி.வி. சேனல்களுக்கு இ-மெயிலில் தகவல் அனுப்பி உள்ளது.

இந்த அமைப்பு, இந்தியாவில் எண்ணற்ற குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய `இந்தியன் முஜாகிதீன்' இயக்கத்தின் துணை அமைப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

துப்பாக்கி சண்டை நடைபெற்று வரும் தாஜ் ஓட்டல் அமைந்துள்ள கேட்வே ஆப் இந்தியா பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பீதி காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. மும்பை பங்குச்சந்தையும் இயங்கவில்லை. புறநகர் ரெயில்கள் மற்றும் நகர பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனால் வழக்கமான நெரிசல் இல்லை. 3 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மும்பைக்கான உள்நாட்டு விமான போக்குவரத்து வழக்கம்போல் இயங்கியது.

இருப்பினும், மும்பை நகரம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments