TopBottom

சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது. இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் ரத்தம் சொட்ட, சொட்ட அடித்த கொடூர காட்சி நெஞ்சை பதை பதைக்க வைத்தது.

சென்னை பாரிமுனையில் டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வரும் அவர்களில் இரு குழுவினருக்கு இடையே சமீபத்தில் அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கல்லூரியின் செமஸ்டர் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்து வெளியே வரும் ஒரு பிரிவினரை தாக்குவதற்காக மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஏறத்தாழ 50 பேர் கல்லூரி வளாகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர்.

மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்து மாணவர்கள் வெளியே வந்தபோது ஏற்கனவே தயாராக காத்திருந்த கோஷ்டியை சேர்ந்த மாணவர்களுக்கும், எதிர் தரப்பு மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கத்தி, உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, மண்வெட்டி, டிïப் லைட், கற்கள் போன்ற கையில் கிடைத்த ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் ரத்தம் சொட்டச்சொட்ட கடுமையாக தாக்கிக்கொண்டனர்.


சினிமாவில் வரும் சண்டை காட்சிகளை மிஞ்சும் வகையில், இரு தரப்பினருக்கு இடையே நடந்த இந்த மோதலால் கல்லூரி வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஆறுமுகம் என்ற மாணவரை சில மாணவர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியபோது அவரை காப்பாற்றுவதற்காக பாரதி கண்ணன் என்ற மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு ஓடினார்.

உடனே எதிர் தரப்பினர் பாரதி கண்ணனை ஓட ஓட விரட்டி விரட்டி தாக்கினார்கள். இதனால், வெளிகேட்டை நோக்கி ஓடிவந்த பாரதிகண்ணனை கேட் அருகிலேயே சரமாரியாக உச்சி முதல் உள்ளங்கால் வரை சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள்.

மயங்கி விழுந்த அந்த மாணவர் மூச்சு பேச்சு இன்றி அசைவற்ற நிலையில் கிடந்தபோதும் சரமாரியாக அவர் தாக்கப்பட்டது நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதில் ஆறுமுகம், பாரதிகண்ணன் ஆகிய 2 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 3-ம் ஆண்டு மாணவர்கள். அவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.


அய்யாத்துரை என்ற மாணவர் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மற்றொரு மாணவரான சித்திரை செல்வன், காதில் அடிபட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆறுமுகம், பாரதி கண்ணன் ஆகியோர் தாக்கப்பட்டபோது மாணவர் பாரதிகண்ணன் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே ஓடி வர முயற்சித்தார். கல்லூரி வாசலிலேயே விழுந்து மயக்கமான அவரை மற்றொரு தரப்பினர் தொடர்ந்து தாக்கியதை பார்த்து ரோட்டில் நடந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததால், சட்டக்கல்லூரி நுழைவு வாசலில் ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில்தான் அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் இந்த சம்பவத்தை கண்டும் காணாதது போல அவர்கள் இருந்தனர். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள், தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் என்று கெஞ்சியும் போலீசார் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் வந்தால் மட்டுமே தங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

அதைத் தொடர்ந்து அங்கு கூடிய பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் கூச்சல் போடவே, பாரதி கண்ணன் மீது தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து சென்றது. அடிபட்ட மாணவர்களை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகுதான் போலீசார் சட்டக்கல்லூரி வளாகத்திற்குள் வந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், துணை கமிஷனர் ஆசியம்மாள், உதவி கமிஷனர் நாராயண மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கே.கே.தேவ், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினார்.

கடந்த 30-ந் தேதி அன்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஒரு பிரிவினர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து உள்ளனர். இதையொட்டி அடிக்கப்பட்ட போஸ்டரில் கல்லூரியின் பெயரில் அம்பேத்கார் பெயர் இடம்பெறவில்ல என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்துதான் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோதல் தொடர்பாக ரவீந்திரன், மணிமாறன், சித்திரை செல்வன், குபேந்திரன், வெற்றி கொண்டான், பிரேம்குமார், ரவிவர்மன் ஆகிய 7 மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப் என்ற இரண்டாம் ஆண்டு மாணவரை கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய மற்ற மாணவர்கள் இரவுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றைய தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்கள் 3-ம் ஆண்டு படித்து வந்தவர்கள். அவர்களை தாக்கிய மாணவர்களில் பெரும் பகுதியினர் விடுதியில் தங்கி படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

கத்தி, உருட்டுக்கட்டை இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களை கல்லூரிக்குள் கொண்டு வர அனுமதி இல்லை என்றும், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் கே.கே.தேவ் நிருபர்களிடம் கூறினார்.

மாணவர்களின் மோதல் சம்பவத்தை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் குவிக்கப்பட்டனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சட்டக்கல்லூரி மாணவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக இரவு 8 மணியளவில் வதந்தி பரவியது. இதனால், ஆஸ்பத்திரி முன் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அரசு பெரிய ஆஸ்பத்திரி முன் குவிந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்டிரல் ரெயில் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும், போலீஸ் துணை கமிஷனர் ஆசியம்மாள், உதவி கமிஷனர் பாலசந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் அமர்ந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஏறக்குறைய 1/2 மணி நேரம் ஸ்தம்பித்தது. ரெயிலுக்கு செல்ல வேண்டிய பயணிகள் தவித்துப்போனார்கள். வேலைக்கு சென்று வீடுகளுக்கு திரும்பியவர்கள் பஸ்களில் தவித்துக்கொண்டு இருந்தனர்.

பிராட்வே மற்றும் உயர்நீதிமன்றம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற பஸ்கள் மாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டன.

இந்த சம்பவம் காரணமாக சென்னை பெரிய ஆஸ்பத்திரி முன்பகுதியிலும், சென்டிரல் ரெயில் நிலையம் அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போக்குவரத்து சீரானபிறகும் அந்தப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்தது.

3 Comments

 1. Anonymous Says,

  இந்த ஜாதி சனியன ஒழிக்கவே முடியாதா..? மாவட்டம், போக்குவரத்துக் கழகம் மாதிரியே இனி அரசு கல்லூரிகளுக்கும் தலைவர்கள் பேர் வைக்கறத தடை செய்யணும்.. சமுதாயம் எப்படியும் ஜாதிய விடப்போறதில்ல.. சட்டம் படிக்கற மாணவர்களே.. இப்படியிருந்தா மத்தவங்கள பத்தி சொல்லவே வேணாம்.. அதனால இவனுங்கள திருத்தறத விட்டுட்டு.. ஜாதி மோதல் ஏற்படாம இருக்க என்னென்ன பண்ணனுமோ அத பண்ணினா போதும்..

  அதெல்லாம் இருக்கட்டும்.. ஐநிலப்பிரிவு தவிர வேறு பிரிவில்லாத தமிழ் சமுதாயத்துக்குள்ள எப்படிங்க இத்தன ஜாதிப்பிரிவு புகுந்துச்சு.. தயவுசெஞ்சு யாராவது விளக்குங்க..

   
 2. Reply To This Comment
 3. Anonymous Says,

  இந்திய அரசியல் சட்டப்படி தண்டனைக்குரியவர்கள் . அப்படிபட்ட தண்டனை வழங்கவோ இல்லை வாங்கி தரவோ தான் இவர்கள் சட்டக் கல்லூரியில் படிக்க சென்றவர்கள். இப்படி வன்முறையில் இறங்கினால் என்னதான் செய்வது. போலீஸ் இருந்தும் அவர்களை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. படித்தால் அறிவு பெற்று நல்லவழி செல்வர்கள் என்றால் இவர்கள் படித்த முட்டாள்கள் போல் செயல்படுகின்றனர். போலீஸ் இருந்தும் ஏன் தடுக்கவில்லை? அவர்களுக்கு பயமா ? இப்படி கொலை வெறி தாக்குதல் நடப்பதை இவர்களுக்கு எதற்கு போலீஸ் உடை. விபரிதம் கண் முன் நடந்தாலும் அதை வேடிக்கை பார்த்துவிட்டு விபரிதம் நடந்துமுடிந்த இடத்துக்கு பலத்த பாதுகாப்பு போடவா ? இந்த வீடியோ மூலம் யார் யார் என்று கண்டறிந்து தண்டனை வழங்கப்படுமா?

   
 4. Reply To This Comment
 5. ashar Says,

  சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதல்.. அதை மோதல் என்று கூறுவதை விட காட்டுமிராண்டித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.

  என்ன தவறு வேண்டுமானாலும் அந்த இருவர் செய்திருக்கட்டும்... அதற்காக இப்படி காட்டுத்தனமாக அடிப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம்..

  இரண்டு மாணவர்களை நான்கு மாணவர்கள் அடித்தால் 40 மாணவர்கள் தடுத்திருக்கலாம்.. 40 மாணவர்கள் தாக்கினால் 400 மாணவர்கள் தடுத்து நிறுத்தி இருக்கலாம்...

  ஆனால் அதை ஓடி ஒதுங்கி நின்று தெலுங்கு பட சூட்டிங் பார்ப்பது போல் பார்த்துவிட்டு.. இன்று காலை மைக்கை பிடித்து வேடிக்கை பார்த்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வசனம் பேசினார்கள்..

  கல்லூரி வளாகத்திற்கு உள்ளே நடந்த இந்த செயலை காவல்துறை வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்று கூறும் சக மாணவர்கள் கண்களில் தங்கள் பிறப்புறுப்பை சொருகிக்கொண்டு இருந்ததால் இந்த காட்சியை பார்க்க முடியவில்லையோ என்ற ஐயம்தான் ஏற்பட்டது..

  மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான்.. யூத்து,யூத்து என்று மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் சக மாணவனை அவர்களில் ஒருசாரார் (8பேர் மட்டுமே..) மிருகத்தனமாக அடிப்பதை தடுக்க துப்பில்லாத இவர்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்.. என்ன செய்வது..??

  போலிஸ்.. இவர்கள் நேற்று செய்ததை/செய்யாததை பற்றி எழுதி இந்த பக்கங்களை கறையாக்கி கொள்ள விரும்பவில்லை என்றாலும்...

  மிக சாதாரண,சாமான்யனுக்கு இருக்கும் பொறுப்போ தார்மீக கடமையோ எதுவும் இல்லாமல், மரக்கட்டை போல் அதுவும் அந்த காக்கிச்சட்டையை அணிந்தால் வரும் ஒருதுளி வீரம் கூட இல்லாமல் மீடியாக்களின் கேமராவை தவிர்ப்பதற்காக மொபைல் போனையே நோண்டிக்கொண்டிருந்த சமூக காவல்த்துறை.. அதுவும் கிட்டத்தட்ட 40 பேருக்கு மேல்.. காவல்துறையின் அடிப்படை கடமையை செய்ய தவறி.. காட்டுத்தனமாக அடிக்கும் மாணவர்களை எந்த வித உணர்சியையும் காட்டிக்கொள்ளாமல் கொன்ற இவர்கள் யாருடைய கட்டளைக்காக காத்திருந்தார்கள்?? அல்லது யாருடைய கட்டளையின் பேரில் அந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு காவல் இருந்தார்கள்..

  அந்த மாணவனின் தாயாரின் கண்ணீரை பார்த்த பின்பும் இவர்களால் இயல்பான வாழ்க்கையை தொடர முடிந்தால்.. காவலர்களே.. உங்களைப் போன்ற உறுதியான கடமை வீரர்களை எண்ணி பெருமை படுவதை தவிர வேறு நாதி இல்லை...

  (மிகத்தொளிவாக கேமராவில் பதிந்த அந்த காட்டுமிராண்டி மாணவர்களை தேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களின் பெற்றோர்கள் சிறை வளாகத்தில் அமர்தப்படவேண்டும்..அம் மாணவர்களின் அனைத்து கல்வித்தகுதியும் ரத்து செய்யப்பட வேண்டும்.. இனி ஒரு சம்பவம் இது போல கனவிலும் நடக்காதவாறு தண்டனைகள் அளிக்க வேண்டும்...

  ஆனால் இன்றைய முதல் பக்க செய்தி இன்னும் மூன்று நாளில் 7வது பக்க 9வது பாராவில் 4 வரிச்செய்தியாக மாறிவிடும்..

  "செம காட்டு காட்டுனம்ல மச்சான்.. லா காலேஜுன்னா சும்மாவா" என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு திரி(றி)வார்கள் இந்த 8 பதர்கள்..

   
 6. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments