TopBottom

பூ - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 02 December 2008

பதினெட்டு வயசு காதலும், பருவம் கொள்ளாத சங்கோஜமும் கொண்ட ஒருத்தி, தனது மாமன் மேல் வைத்திருக்கும் கொள்ளாத காதல்தான் பூ. இதற்கு முன்பு வந்த காதல் படங்களையெல்லாம் 'ப்பூ' என்று ஊதித்தள்ளுகிறது இந்த பூ! இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டுக்கு போய்விட்டால், அதுவரை மனசில் வைத்திருந்த காதல் போய்விடுமா? இந்த மெல்லிய கேள்வியை சுத்தியல் வேகத்தோடு இறக்கி படத்தை முடிக்கிறார் சசி.

தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் கூடவே வருகிறார்கள் மாரியும், தங்கராசும், கிடையில் சிக்கிக் கொண்ட அந்த கருப்பு ஆட்டிக்குட்டியும், இரட்டை பனை மரங்களும் கூட!

பாவாடை சட்டை காலத்திலிருந்தே மாமன் தங்கராசு மேல் காதலாய் திரிகிறாள் மாரி. எந்தளவுக்கு? நீ படிச்சு என்னவாக போறே? என்ற வாத்தியாரின் கேள்விக்கு தங்கராசுவுக்கு பொண்டாட்டி ஆகப் போறேன் என்று பதில் சொல்கிற அளவுக்கு! (இதே கேள்விக்கு அநேக பெண் பிள்ளைகள் பதில் சொல்லாமல் தவிக்கிற இடங்களில் டைரக்டரின் சமூகக்கவலை எட்டிப்பார்க்கிறது)

“பட்டணத்தில் படிக்கும் உன் மாமன் படிக்காத உன்னையா கட்டிக்குவான்?” என்று யதார்த்தமாக கேட்கும் சினேகிதியின் நெற்றியை கல்லால் பதம் பார்க்கிற அளவுக்கு தங்கராசு மீது காதல் வைத்திருக்கும் மாரி, அவனை வேறொருத்திக்கு தாரை வார்க்கிற மாதிரி அமைகிறது வாழ்க்கை. இவளும் வேறொருவனை மணந்து கொண்டு போய்விட, அதுவரை அவள் மாமன் மேல் கொண்டிருந்த காதல் என்னவாயிற்று? இதுதான் முடிவு.

மாறி மாறி பாராட்டிக் கொண்டேயிருக்கலாம் மாரியாக நடித்திருக்கும் புதுமுகம் பார்வதியை. சகல உணர்ச்சிகளும் முகத்தில் தாண்டவம் ஆடுகிறது. மத்தாப்பூ நகரத்தில் மாரிப் பூவாக மலர்ந்திருக்கும் இவருக்கு அவார்டு என்ன, அதற்கு மேல் ஏதாவது இருந்தாலும் கொடுத்து கௌரவிக்கலாம்.

தோழியை கல்லால் அடித்துவிட்டு அம்மாவிடம் விளக்குமாறு அடி வாங்குவது, மாமனின் கல்யாணத்துக்கு போக மாட்டேன் என்று அடம்பிடிக்கும் குடும்பத்தினரை சம்மதிக்க வைக்க தூக்கு கயிற்றில் தொங்க முயல்வது, மாமனை கவர தனது செல்ல ஆட்டுக்குட்டியை விற்றுவிட்டு அந்த பணத்தில் சுடிதார் வாங்குவது, இப்படி படம் முழுக்க பார்வதி ராஜ்ஜியம். விட்டால் 16 ரீலையும் எழுத வேண்டியிருக்கும். அட, பார்வதிதான் இப்படி கவர்கிறார் என்றால், சிறுவயது மாரியாக நடித்திருக்கும் அந்த சிறுமியின் முகத்தில் கூட யதார்த்தம் கரை புரண்டு ஓடுகிறது.

படம் முழுக்க 'பார்வதி பதே நமஹ'தான் என்று தெரிந்தே நடிக்க ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்தையும் பாராட்டியே ஆக வேண்டும். நல்லவேளையாக இவரது நடிப்புத் திறமைக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சசி. மனம் கவர்ந்த மாரிக்கு முன்பாகவே மனைவியிடம் வசைபடும் ஸ்ரீ, அது மாரிக்கு தெரிந்துவிடக் கூடாதே என்று தவிக்கும்போது அப்ளாஸ்...

உதிரிப்பூக்கள் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து பூ அலங்காரம் செய்திருக்கிறார் சசி. வீட்டிற்கு வரும் தங்கராசுவுக்கு தோசை மீது ரகசிய முத்தம் வைத்து கொடுக்கிறாரே பார்வதி, இனிப்பு! சரவெடி போனில் தங்கராசுவிடம் மாரி பேசும் கற்பனை, பட்டாசுக் கவிதை! அதுமட்டுமா? தங்கராசுவிடம் மன்னிப்பு கேள் என்று போர்மேனை அடித்து துவைக்கும் மாரி, தங்கராசுவாக நினைத்து காட்டுவது ஒரு பனைமரத்தை. இப்படி படம் முழுக்க கொட்டிக்கிடக்கிற ஹைக்கூக்கள் ஏராளம்...

மாரியின் அண்ணனாகவும் நடித்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் வீரசமர். கதையின் பயணத்தில் இவரது கேரக்டர் அழகென்றால், அதைவிட அழகு இவரது ஆர்ட் வொர்க். குறிப்பாக பாடல் காட்சியன்றில் வரும் அந்த மரக்குதிரைகள். பேனாக்காரராக வரும் அந்த பெரிசு ரசிகர்கள் மனசில் அழியாத ஆட்டோகிராப் போடுகிறார்.

காமெடிக்காட்சிகள் குறைவுதான். வைக்கப்பட்ட ஒன்றிரண்டு டீக்கடை காட்சிகளிலும் ஆயாசம். ஆனாலும் அந்த ஆடுமேய்க்கும் சிறுவனின் செல்போன் காமெடி கலகல. முத்தையாவின் ஒளிப்பதிவு, பல வருடங்களுக்கு பிறகு புத்துணர்ச்சி தருகிற குமாரின் இசை, நிதான கட்டிங் கொடுத்திருக்கும் எடிட்டர் இப்படி எல்லாரும் ஒன்று சேர்ந்து,

'பூ-மாரி' பொழிந்திருக்கிறார்கள்!

1 Comment

 1. Anonymous Says,

  :X

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments