TopBottom

அபியும் நானும் - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 24 December 2008

குண்டு குழிகள் நிறைந்த கோலிவுட் நெடுஞ்சாலையில், நின்று நிதானமாக நடை போடுபவர் ராதாமோகன். காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும், ராதாமோகன் பேசும் 'மொழி'யில் எப்போதும் இருக்கும் ஒரு தாலாட்டின் அழகு! அப்படி ஒரு தாலாட்டுதான் அபியும் நானும்...

'குழந்தை பிறக்கும் போதே கூடவே ஒரு அப்பாவும் பிறக்கிறான். ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றன. அப்பா மட்டும் அப்படியே வளராமலே இருக்கிறான்'. க்ளைமாக்சில் வரும் இந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். தனது பெண் குழந்தை மீது இவர் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம்தான் கதை.

முன்று வயது குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பிச்சைக்காரனையே வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் வளர்ந்து பெரியவளாகி காதல் என்ற பெயரில் வாலிபன் ஒருவனோடு வந்து நிற்க, அதிர்ந்து போகிறார்.
தேவையில்லாமல் எதிர்க்கிறார். முடிவு? கசாப்பு நாற்றத்தையும் ரோசாப்பூ வாசத்தோடு கொடுக்க தெரிந்தவராயிற்றே ராதா மோகன். எல்லா துயரங்களையும் நகைச்சுவை கலந்தே கொடுக்கிறார். ரசிகனின் மனசுக்கு பிடித்த சுபம்தான்!மகளை எல்கேஜியில் சேர்த்துவிட்டு கண்கள் பனிக்க டாடா சொல்லும் பிரகாஷ்ராஜ், சைக்கிளில் போகும் மகளை ஜீப்பில் பின்தொடரும் அக்கறையான பிரகாஷ்ராஜ், அதே மகள் தான் ஒரு பையனை காதலிப்பதாக கூறியவுடன், பொங்கி வெடிக்கும் பிரகாஷ்ராஜ் என்று நிமிடத்திற்கு நிமிடம் விஸ்வருபம் எடுத்துக் கொண்டேயிருக்கிறார். தான் அலட்சியமாக நினைத்த மாப்பிள்ளை, பிரதமரிடமே சர்வசாதாரணமாக பேசுகிற அளவுக்கு பெரிய மனிதர் என்பதை தெரிந்து கொண்டதும் அதிர்ச்சியடைகிற காட்சியை விடுங்கள், அதே பிரதமரிடம் இவர் பேசுகிற காட்சி நெத்தியடி சாரே... (ஆனாலும் திட்டக்குழு உறுப்பினர் ஒருவரிடம் பிரதமரே போனில், 'மச்சான் சௌக்யமா' ரேஞ்சுக்கு பேசுவது டு மச் வாத்யாரே) பஞ்சாபி குண்டு மனிதரிடம் சிக்கிக் கொண்டு இவர் படுகிற அவஸ்தை ஸ்பெஷல் காமெடி ஷோ! கொஞ்சம் 'கிராக்' அப்பாவாக இருப்பாரோ என்ற அதிர்ச்சியை சில காட்சிகளில் கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ். தவிர்த்திருக்கலாம்.

இது போல் இன்னும் இரண்டு படங்களில் நடித்தால் போதும், தமிழக மக்களின் ரேஷன் கார்டுகளில் த்ரிஷாவின் பெயரும் நிச்சயம்! ஊட்டி குளிரில் அப்பாவின் சட்டையை கழற்றி மனநேயாளிக்கு மாட்டியதோடல்லாமல், அவரை அப்படியே விட்டு விட்டு அந்த மனநோயாளியோடு ஹோமுக்கு ஓடுகிற காட்சி உருக்கம். "நாங்க 16 ந்தேதி மேரேஜ் பண்ணிக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்" என்று அதிர்ச்சியூட்டுவதுதான் கதையின் போக்கை லேசாக சுரண்டுகிறது. அவ்வளவு தோழமையான அப்பாவிடம் கூட திருமண தேதியை டிஸ்கஸ் பண்ண மாட்டாரா என்ன?

யாருடைய நடிப்புக்கும் சளைத்தவன் அல்ல என்பதாக அமைந்திருக்கிறது குமரவேலுவின் ஆக்டிங். பிச்சைக்காரனாக இருந்தாலும் சர்வ அலட்சியத்தோடு தான் டி.வி யில் கிரிக்கெட் பார்க்கிற விஷயத்தை சிலாகித்து சொல்லும் போது கலகலக்கிறது தியேட்டர். தனக்கு வாழ்வு கொடுத்த த்ரிஷாவை படம் நெடுகிலும் இவர் அம்மா என்று உச்சரிப்பது நெகிழ்ச்சி. ஸ்டார் ஹோட்டல் விருந்தில், "வழக்கமாக வெளியிலே நிக்க வைச்சு சாப்பாடு போடுவாங்க. இப்போதான் இது உள்ளாற நுழையுறேன்" என்கிறாரே கண்கலங்குகிறது. இவர் பாடும் 'ஒரே ஒரு ஊரிலே...' கம்பீர கான மழை!

புதுமுகம் கணேஷ் வெங்கட்ராமன், பிரஷ்ஷோ பிரஷ்! தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உண்டு. யதார்த்தமான அம்மாவாக ஐஸ்வர்யா. வெல்டன்! ஈகோவை கேரளாவிலேயே விட்டு விட்டு தமிழ் சினிமாவில் அதிகம் பில்டப் இல்லாத கேரக்டரில் வந்து போக ஒரு தைரியம் வேண்டும். தைரியசாலி பிருத்விராஜுக்கு ஒரு வெரிகுட்!

வித்யாசாகர் இசையில் 'ஒரே ஒரு ஊரிலே' பாடலும், மனசை பிழியும் பின்னணி இசையும் அற்புதம். பிரீத்தாவின் ஒளிப்பதிவில் கண்ணாடி பாத்திரத்தை கழுவி வைத்த அழகு!

வசனம் எழுதியிருக்கும் இரட்டையர்களை (பெயரை பார்ப்பதற்குள் டைட்டில் பாசிங்) கை வலிக்கும் வரை குலுக்கி குலுக்கி பாராட்டலாம். வசனங்களில் இழையோடும் நகைச்சுவை முந்தைய பிரகாஷ்ராஜ் பட வசனகர்த்தா விஜியை நினைவுபடுத்துவது இனிமையான ரிசம்ப்ளன்ஸ்!

அபியும் நானும்,

நிலவும் வெளிச்சமும் மாதிரி நிம்மதி!

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments