TopBottom

2008 ல் இருக்கிற இரண்டு சைபர்களும் முழி போல் பிதுங்கியதுதான் 'மேற்படி' வருடத்தின் மெகா சாதனை! உலக்கை தேய்ஞ்சு லட்டியான கதையாக புஷ்டி நிறுவனங்கள் கூட, நோஞ்சானாகிப் போனது இந்த வருடத்தில்தான்.

சிவப்பு கார்ப்பரேட் விரித்து வரவேற்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் கார்ப்பரேஷன்லாரி போல கவலைக்குள்ளாயின. இந்த ஆர்டிஎக்ஸ் தாக்குதலுக்கு உலக பொருளாதார சந்தையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காரணம் காட்டினாலும், ரஜினி, அஜீத் போன்ற திரையுலக தாவூத்துகளும் முக்கிய பங்காற்றினார்கள். 'டைட்டில் விஷயத்தில் பாசிட்டிவாக யோசிங்க' என்று படத்தின் தயாரிப்பாளர்களே அட்வைஸ் பண்ணுகிற அளவுக்கு, 'குசேல' ஆட்டம் குருரமாக இருந்தது.

இறுக்கி பிடிச்சு உம்மா தருகிற அளவுக்கு அன்புதான். இன்னும் இறுக்கி பிடிச்சு மூச்சுக்கே மோசம் வைக்க பார்த்தார்கள் ரசிகர்கள். "ஆரம்பிச்சா வழக்கு தொடுப்பேன்"னு இவரும், "தொடுத்தா பரவால்லே" என்று ரசிகர்களும் மாற்றி மாற்றி அறிக்கை விட்டபின் ஒருவழியாக உதயம் ஆனது, ரஜினி கட்சி!

கட்சி தலைவருக்கும், காமெடி நடிகருக்கும் நடுவிலே எழுந்த மோதல் இன்னொருசினிமாவானது மக்களுக்கு. இந்த இலவச சினிமாவில் அதிகம் பேசியது காமெடி நடிகர்தானே தவிர, பஞ்ச் டயலாக் கூட பேசவில்லை கட்சி தலைவர். "வீட்டிலே கல்லெறிஞ்சவங்களை சும்மாவிட மாட்டேன்" என்று விடாமல் சொல்லெறிந்து கொண்டே இருக்கிறார் காமெடி நடிகர். அடுத்த வருடத்திலாவது இருவரும் ராசிக்கு வருவார்களா என்று ராசிபலன் பார்க்க வேண்டும். "கோடம்பாக்கம் ஜோதிடர்களே, வாயை திறங்கப்பா" இந்த விஷயத்தில். அது கோஷ்டி சண்டை என்றால், இது குடும்ப சண்டை! யுவன் சங்கர் ராஜாவை டு விட்டுப் பிரிந்தார் அவரது மனைவி சுஜயா. நல்லவேளை இன்னும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின் கேட்காமல், இப்போதே விவாகரத்து கேட்டு பிரிந்தார்கள் ஊர்வசியும் மனோஜ் கே ஜெயனும். துக்கம் இது என்றால், சந்தோஷம் இன்னொன்று. திமிரு படத்தில் தன்னுடன் பின்னி பிணைந்து ஆடிய ஸ்ரேயா ரெட்டியை அண்ணியாக்கிக் கொண்டார் விஷால். (புதுசு புதுசா கலாச்சாரம், விடுங்க இது பெரிய இடத்து சமாச்சாரம்.)

குளித்துவிட்டு அவசரத்தில் அப்படியே வந்துவிட்டாராம்! முதல்வர் விழாவுக்கு ஆபாசமாக வந்த ஸ்ரேயா சொன்ன பதில்தான் இது. (நல்லவேளை, சோப்பு நுரையை துடைத்துக் கொண்டு வந்தாரே?) பின்னாளில் ஸ்ரேயா ரசிகர்கள் கட்சி ஆரம்பித்தால் குட்டை பாவாடையை சின்னமாக கேட்கலாம். அதையும் சின்னதாக கேட்பார் ஸ்ரே! கடந்த வருடத்தின் பெரும் பரபரப்பு இந்த மேட்டர்தான் என்பதால், ஸ்ரேயாவின் முகத்தில் ஸ்பெஷல் சிரிப்பு.

என் பையன் மேல திட்டமிட்டு ஒரு கேரக்டர் அசாசினேஷன் நடக்குது. ஏன்? என்றுதலையை சிலுப்பிக் கொண்டு கேள்வி கேட்டார் விஜய டி.ராஜேந்தர். அதையே சாந்தமாக கேட்டார் சிம்பு. கார் திருட்டு போன விவகாரத்தில் இன்னமும் மர்மமாக இருப்பது சிம்பு பேசிய ஒரே விஷயம்தான். நான் இதுவரைக்கும் தண்ணியடிச்சதே இல்லை! (பணக்கார வீட்டு புள்ளையாச்சே, குழாயிலே தண்ணியடிக்க வேலைக்காரி இருந்திருப்பாங்க)

ஆடி மாசத்திலே கூழ் ஊத்துவாங்களா தெரியாது. கூடி கும்மாளமடிக்க வசதியாக நமீதாம்மன், நயன்தாரம்மன்களுக்கு கோவில்கள் கட்டுவதற்காக உழவார திருப்பணிகளை மேற் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இதற்கு இரு அம்மன்களும் சம்மதித்திருப்பதுதான் கடந்த வருடத்தின் காஸ்ட்லி வரம்!

தமிழ்நாட்டு
மண்ணை மிதித்துவிட்டு ஒரு கிசு கிசு கூட ஒட்டாமல் போனால் எப்படி? ஆணானப்பட்ட ஜாக்கி சானையே ஜாக்கியை விட்டு து£க்கி நிறுத்தினார்கள் பத்திரிகையாளர்கள். பிரபல நட்சத்திர ஓட்டல் சமையல்காரரை நம்பவில்லை.தண்ணீர் கூட அங்கேயிருந்து வந்ததுதான் என்றெல்லாம் கதை எழுத, இங்கே குடித்த தண்ணீரை அங்கே போய் கண்கள் வழியாக வெளியேற்றினார் நிஜ உலகநாயகன். தனது வெப்சைட்டில், "நான் இந்தியாவில் தண்ணீர் குடிக்காமல் போனேனா?" என்பதற்கு பெரும் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது. "முதல்வர் விழாவில் சிக் உடை? ஏன்?" என்று விளக்கம் கேட்டு மல்லிகா ஷெராவத்தையும் கோர்டுக்கு இழுக்க பார்த்தார்கள் சொக்கனாம்பட்டி சொக்கலிங்கங்கள்! இன்னொரு ஸ்ரேயா ஆவதற்கு முன் தப்பித்தார் மல்லிகா.

வரப்போகிற பெண்டாட்டிக்கு கவிதை எழுதி, அதை ஊருக்கெல்லாம் கொடுத்தார் பாடலாசிரியர் யுகபாரதி. (அதை அவரு பெண்டாட்டிக்கு கொடுத்தாராங்கிறதை நேரில் பார்க்கும்போது மறக்காம கேட்கனும்)

சில ஆறுதல்களும் அங்கங்கே... ஸ்டார் அந்தஸ்தை நம்பி கோடிகளை கொட்டி, தெருக் கோடிக்கு போன தயாரிப்பாளர்களுக்கு அட்வைஸ் பண்ணுகிற மாதிரி, 45 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் படமான சிலந்தி பெரும் வசூலை குவித்தது. (இந்த படத்தின் பட்ஜெட்டில்தான் பல பெரிய தலைகளின் படங்களுக்கு டிஜிட்டல் இமேஜே செய்கிறார்கள்)

ஊர் மக்களின் கண்களுக்கு பத்து அவதாரம் எடுத்திருந்தாலும், தயாரிப்பாளர் கண்களுக்கு மட்டும் பதினொன்றாக எமன் அவதாரம் எடுத்து நின்றார் உலகநாயகன். நல்லவேளை, தசாவதாரத்தின் வெற்றிக்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் வியாபார நுணுக்கமும் ஒரு முக்கிய காரணம்!

'கண்கள் இரண்டால்' என்ற மெலடியையும், 'நாக்க முக்க' என்ற அதிரடியையும் ஒரே தட்டில் தாங்கினார்கள் ரசிகர்கள். பேசாமடந்தை சசிக்குமார், ஊர் உலகமே பேசுகிற மாதிரி ஒரு படத்தை இயக்கி விநியோகஸ்தர்களுக்கு மத்தியில் குபேரக் கடவுளாக விஸ்வருபம் எடுத்து நின்றார். படம் சுப்ரமணியபுரம்.

எல்லாவற்றுக்கும் மேல் தமிழன் ஸ்மரணை அற்றுப் போய்விடவில்லை என்பதை பறைசாற்றியது திரையுலகம். இலங்கை தமிழர் பிரச்சனையில் நெல்லிக்காய் மூட்டையாக சிதறி நின்றாலும், எதிர்ப்புகுரலை ஒரே டெசிபலில் பதிவு செய்திருந்தது கலையுலகம். அமீரும், சீமானும் சிறைசென்று நிருபித்தார்கள் தமிழுணர்வையும், இன உணர்வையும்!

மறைந்த பிரபலங்கள்..:

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்கள் சிலர் இந்த ஆண்டில் மறைந்து திரையுலகை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினர்.

பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் மறைவு அனைத்து திரை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 1000 படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகரான நம்பியார் உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகத்தால், நவம்பர் 19ம் தேதி மரணமடைந்தார்.

மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதர், அக்டோபர் 20ம் தேதி மரணமடைந்தார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் காதலுக்குப் புது மொழியும், புது வடிவும் கொடுத்த சிறந்த இயக்குநர் ஆவார்.

எழுத்தாளர், அறிவாளி, அறிவியலாளர், தமிழார்வலர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டா சுஜாதாவும் இந்த ஆண்டுதான் மறைந்தார். பிப்ரவரி 27ம் தேதி சுஜாதா இறந்தபோது, எழுத்துலகும், இலக்கிய உலகும், திரையுலகும் சேர்ந்து வருந்தின.

வித்தியாசமான வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்ட ரகுவரன் மார்ச் 19ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

அதேபோல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா, ரஷ்யாவுக்கு தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக போன இடத்தில் உயிரிழந்தார்.

நடிகர் பாண்டியன், குணால், குன்னக்குடி வைத்தியநாதன், பூரணம் விஸ்வநாதன், தேனி குஞ்சரம்மாள், தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள், பிரபு தேவாவின் மகன் விஷால், பழம்பெரும் தெலுங்கு நடிகர் சோபன்பாபு ஆகியோரும் 2008ல் மறைந்த திரையுலகினர்.

திருமணங்கள்..:

கோபிகாவுக்கும், அகிலேஷுக்கும் கேரளாவில் திருமணம் நடந்தது.

நடிகை கனிகா, கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஷியாவை மணந்தார்.

இசையமைப்பாளர் இமான், மோனிகாவை கரம் பிடித்தார்.

நடிகர் சிபிராஜ் தனது நீண்ட நாள் காதலியான ரேவதியை பெற்றோர் சம்மதத்துடன் கைப் பிடித்தார்.

நடிகை மகேஸ்வரிக்கும், ஜெய் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நடந்தது.

நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபி கிருஷ்ணாவை கரம் பிடித்தார் நடிகை விந்தியா.

விஷாலின் அண்ணனும் முன்னாள் ஹீரோவுமான விக்ரம் கிருஷ்ணா, நடிகை ஷ்ரேயா ரெட்டியை கரம் பிடித்தார்.

நடிகை ரூபஸ்ரீ, திணேஷை மணந்தார்.

விவாகரத்துக்கள்...:

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மனைவி சுஜயா சந்திரனை விவாகரத்து செய்தார்.

நடிகை ஊர்வசிக்கும், கணவர் மனோஜ் கே. ஜெயனுக்கும் விவாகரத்து கிடைத்தது.

நடிகை மீரா வாசுதேவன், கணவர் விஷாலை விவாகரத்து செய்தார்.

சரிதா, முகேஷ் விவாகரத்து வழக்கு சென்னை கோர்ட்டில் இழுபறியில் உள்ளது.

போராட்டங்கள்...:

திரையுலகில் இந்த ஆண்டு வித்தியாசமான போராட்டங்களும் இடம் பெற்றன.

முதல் போராட்டம் ஓகனேக்கலை மையமாக வைத்து அமைந்தது. ஓகனேக்கல் விவாகரம் தொடர்பாக பெங்களூரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் தாக்கப்பட்டன. இதைக் கண்டித்து சென்னையில், ஏப்ரல் 4ம் தேதி தமிழ்த் திரையுலகினர் திரண்டு வந்து உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பைக் காட்டினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்பட பெரும்பாலான நடிகர் நடிகைகள் இதில் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 19ம் தேதி இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நவம்பர் 1ம் தேதி இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் பிரமாண்ட உண்ணாவிரதம் நடந்தது. ரஜினிகாந்த் , கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

நவம்பர் 5ம் தேதி பெப்சி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

நவம்பர் 8ம் தேதி சின்னத் திரை நடிகர் , நடிகையர் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

நவம்பர் 16ம் தேதி நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

காமெடி Vs அதிரடி:

தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பரபரப்பில் ஆழ்த்திய சம்பவம் நடிகர் வடிவேலுவின் சென்னை வீடு மற்றும் அலுவலகம் மீதான தாக்குதல்.

விஜயகாந்த்துக்கும், அவருக்கும் முன்பே சிறு சிறு பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 11ம் தேதி வடிவேலுவின் சாலிகிராமம் வீட்டிலும், அலுவலகத்திலும் ஒரு கும்பல் கல்வீசித் தாக்கி ரகளையில் இறங்கியது.

இந்த சம்பவத்தால் வடிவேலு கொதிப்படைந்தார். விஜயகாந்த் ஏவி விட்ட கும்பல்தான் தன்னை வந்து தாக்கியது என்று ஆவேசமாக பேட்டி அளித்தார்.

விஜயகாந்த்துக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து மோதட்டும். அடுத்த தேர்தலில் விஜயகாந்த் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் முதல்வர் கருணாநிதிதான். அவர் தூண்டி விட்டுத்தான் வடிவேலு பேசுகிறார் என்று விஜயகாந்த் மறுப்பு தெரிவித்தார்.

விஜயகாந்த் - வடிவேலு இடையிலான பூசலின் உச்சகட்டமாக இந்த அதிரடி, ஆக்ஷன், அட்டாக் நிகழ்ச்சி நடந்தது.

சர்ச்சைகள்..:

- சென்னையில் ஜனவரி 11ம் தேதி நடந்த சிவாஜி பட விழாவில் நடிகை ஷ்ரியா குட்டைப் பாவாடையும், அரை குறை மேலாடையும் அணிந்து வந்து முதல்வர் கருணாநிதி இருந்த மேடையில் அமர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஷ்ரியாவின் இந்த குறைச்சலான ஆடை அலங்காரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் தான் அப்படி வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் ஷ்ரியா.

- வல்லமை தாராயோ பட விழாவின்போது அம்மன் சிலைகளுக்கு அருகில் செருப்புக் காலுடன் இருந்ததாக குஷ்பு மீது சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக வழக்குகளும் போடப்பட்டன.

- இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், ராஜீவ் காந்தி படுகொலையை ஆதரித்தும் பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

- கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் எழுத்தாளர் சுஜாதாவின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை சேலம் போலீஸார் கைது செய்து ஜீ்ப்பி்ல் இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

- நடிகை ஷோபனா எனது கணவரை அபகரித்துக் கொண்டார். எனது கணவரை ஷோபனா விடாவிட்டால் அவரது வீடடு முன்பு குழந்தைகளுடன் மறியல் போராட்டம் செய்வேன் என்று டெல்லியைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

- நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொண்டு விட்டு ஏமாற்றியதாக ஸ்டெபி என்ற பெண் புகார் கூறினார்.

- ராமன் தேடிய சீதை படம் தொடர்பான நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களைப் பார்த்து 'பாடு' என்று மெட்ராஸ் தமிழில் திட்டி செய்தியாளர்களின் கோபத்திற்கு ஆளானார் இயக்குநர் சேரன்.

- போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக கைது செய்யப்பட்டார் நடிகை புளோரா.

நமீதாவுக்குப் புதுப் பெருமை...:

கவர்ச்சி திலகமாக கோலிவுட்டை குளிர்வித்து வரும் நமீதாவுக்கு 2008ம் ஆண்டு புதுப் பெருமை கிடைத்தது. கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்களில் இந்தியாவிலேயே 3வது இடம் நமீதாவுக்குக் கிடைத்தது.

அதேசமயம், தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களில் நமீதாவுக்கே முதலிடம்.

சின்னத் திரைக்குப் போன திரையுலகம்...:

இந்த ஆண்டும் சின்னத் திரைக்கு நிறைய திரையுலகினர் இடம் பெயர்ந்தனர்.

பாரதிராஜா, முதல் முறையாக சின்னத் திரைக்காக ஒரு சீரியலை இயக்கத் தொடங்கினார். தெக்கித்தி பொண்ணு என்ற அந்த சீரியலில் நெப்போலியன்தான் நாயகன். அவருக்கும் இதுதான் முதல் டிவி அறிமுகம். ஆனால் தற்போது நெப்போலியன் அதிலிருந்து விலகி விட்டார்.

நடிகை சோனியா அகர்வால், குஷ்புவின் தயாரிப்பில் கலைஞர் டிவியில் நாணல் என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதேபோல பெரிய திரையைக் கலக்கிய முன்னாள் நாயகி சிம்ரனும், இந்த ஆண்டு ஜெயா டிவியில் ஒளிபரப்பான சிம்ரன் திரை மூலமும், அதற்கு முன்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கேம் ஷோ மூலமும் டிவிக்கு வந்தார்.

முன்னாள் நாயகியான சங்கவியும் டிவிக்கு வந்து விட்டார். அவரது நடிப்பில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

3 Comments

 1. V Says,

  சூப்பர்ர்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍..............வீ.காயத்திரி,தின்டுக்கல்

   
 2. Reply To This Comment
 3. Anonymous Says,

  நல்ல் சொன்னேங

   
 4. Reply To This Comment
 5. தேவையானவர்களுக்கு..நிறைய செய்திகள்.

   
 6. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments