TopBottom

1.எந்திரன்- தி ரோபோ:

ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள இந்தப் படம் இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் உருவாகும் முதல் படம். ரூ.150 கோடி பட்ஜெட் என்கிறார்கள். பிரமாண்டங்களுக்குப் புகழ்பெற்ற இயக்குநர் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் செய்திகள்தான் 2008-ம் ஆண்டை ஆக்கிரமித்திருந்தன.

இந்த 2009-ம் எந்திரன் ஆண்டாகவே மலர்ந்திருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை பெரும் எதிர்ப்பார்புக்குள்ளாகியிருக்கும் படங்களில் முதலிடம் ரஜினியின் எந்திரனுக்கே.

2.நான் கடவுள்:

ஒரு சூப்பர் ஸ்டார் இல்லாவிட்டாலும், அவர் நடித்த படத்துக்கு நிகரான பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ள படம் பாலா- இளையராஜா கூட்டணியில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நான் கடவுள்.

மூன்று வருடங்கள் ஒரு தவம் மாதிரி இருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார், கோடம்பாக்கத்தின் 'திரைஞானி' பாலா. அவரது படைப்புக்கு உயிர் கொடுத்திருக்கிறது இசைஞானியின் ஆர்மோனியம். 'பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ரிலீஸ் பண்ண என் படம் கரும்போ, பட்டாசோ அல்ல... ஜீவனுள்ள ஒரு படைப்பு. அது முழுமையடையும்போதுதான் வெளியாகும்' என்ற ' மிஸ்டர் பர்பெக்ஷனிஸ்ட்' பாலாவின் பிடிவாதத்துக்கு விருதுகள் காத்திருப்பது நிஜம்.

இந்தப் படத்தைக் காண தமிழகம் மட்டுமல்ல... பிறமொழி ரசிகர்களும்கூட ஆவலாக இருப்பதாக நடிகர் விக்ரம் நேற்று கூறினார். அது மிகையான வார்த்தையில்லை.

ஆர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ, வெளியான முதல் நாளிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல கடைகளில் ஆடியோ சிடி கிடைக்காத நிலை. எஃப்எம்கள் புண்ணியத்தால் ஆடியோ மார்க்கெட்டே விழுந்து கிடக்கும் இந்தச் சூழலில், வருடத்தின் முதல் நாளே நான் கடவுள் ஆடியோ சாதனை படைக்க ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறியாகவே படுகிறது.

3.கந்தசாமி:

விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இன்னொரு படம் கந்தசாமி. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சாம்பிள் பாடல்களே கலக்கலாக வந்திருந்தன.

விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட உள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு சம்மர் ட்ரீட் இந்தப் படம்.

4.சுல்தான்- தி வாரியர்:

இந்தப் படத்தை மக்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்ற சந்தேகம் ரஜினியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... இந்தப் படத்துக்கு ரூ.70 கோடியை செலவழித்திருக்கும் ஆக்கர்- வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோக்களுக்கும் உண்டு. ஆனால் அனிமேஷன் படங்களுக்கு உள்ளூர் மார்க்கெட்டை விட உலக மார்க்கெட் ஸ்ட்ராங்க் என்பதால் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் எஸ்.ராமகிருஷ்ணன். பாபா படத்தின் வசனகர்த்தா. சர்வதேச அளவில் மிகச் சிறப்பான வரவேற்பை சுல்தான் பெறும் என நம்புகிறார்கள்.

ரஜினியை அனிமேட் செய்திருக்கும் விதம் இங்குள்ள ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஹ்மானின் இசையில் 5 பாடல்கள். விரைவில் இசை வெளியீடு நிகழ உள்ளது.

5.ஆயிரத்தில் ஒருவன்:

இதுவும் ஒரு பிரமாண்டப் படம்தான். செல்வராகவன் தன் பாணியிலிருந்து விலகி, ஒரு பேண்டஸி படம் தரவேண்டும் என விரும்பியதன் விளைவு இந்தப் படம். பருத்தி வீரன் படத்துக்குப் பின் கார்த்தி நடித்துள்ள படம். ரீமா சென், ஆண்ட்ரியா நாயகிகள். இந்தப் படத்தில் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மற்றும் செல்வராகவன் மனைவி சோனியா அகர்வால் ஆகியோர் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

யுவன் இசையமக்க ஒப்புக் கொண்டு பின்னர் செல்வாவுடன் ஏற்பட்ட பிணக்கில் வெளியேற ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குசேலன் பாடல்களில் செய்த சொதப்பலை இந்தப் படத்தில் சரிகட்டுவார் பிரகாஷ் என நம்புகிறார்கள். பார்க்கலாம்.

6.வில்லு:

இளைய தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்க்கு மட்டுமல்ல, தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் ஐங்கரன் நிறுவனத்துக்கும் இந்தப் படத்தின் வெற்றி மிகவும் முக்கியம். பிரபு தேவா இயக்கத்தில் இன்னும் சில தினங்களில் (ஜனவரி-9) வெளியாகவுள்ள வில்லு, இன்னும் ஒரு போக்கிரியாக வசூலில் வெற்றிக் கொடி நாட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரபு தேவா.

படத்தின் பாடல்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல பிக்கப் ஆகியுள்ளன. பார்க்கலாம்.

7. அசோகவனம் அல்லது ராவணன்:

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ராவணன் இந்திப் படத்தின் தமிழ் வடிவத்துக்கு தற்காலிகமாக அசோகவனம் என்று பெயர் சூட்டியுள்ளனர். ஆனால் இது முடிவான பெயரா, தெரியவில்லை.

கிட்டத்தட்ட எந்திரன் பட ரேஞ்சுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தால் பட்ஜெட் போடப்பட்ட படம். ஆனால் சர்வதேச நிதி நெருக்கடியால் ரிலையன்ஸ் விலகிக்கொள்ள இப்போதைக்கு மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸே இந்தப் படத்தை திட்டமிட்டபடி ரூ.120 கோடியில் தயாரித்து வருவதாகக் கூறப்படுக்கிறது.

ஐஸ்வர்யா ராய், விக்ரம், அபிஷேக் பச்சன் என இந்தியாவின் டாப் கிளாஸ் நடிகர்கள் பங்கேற்கும் இந்தப் படத்தையும் நாடே எதிர்பார்க்கிறது.

8. அயன்:

பேரழகன் பிரச்சினையால் ஏவிஎம் காம்பவுண்ட் பக்கமே வரமாட்டேன் என கோபித்துக் கொண்டு போன சூர்யா மனம் மாறி அதே ஏவிஎம்முக்கு செய்து தரும் பிரமாண்ட படம் இது. தமன்னா நாயகியாக நடிக்கும் முதல் பெரிய பட்ஜெட் படமும் இதுதான்.

கேவி ஆனந்தின் இயக்கத்தில் படம் சிறப்பாக வந்திருப்பதாக முதல் தகவல்கள் கூறுகின்றன. சிவாஜிக்குப் பிறகு ஏவிஎம் தயாரிக்கும் படம் இது. அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வார்களா... பார்ப்போம்.

9.படிக்காதவன்:

மாமனாரின் தலைப்புகளை வைத்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் தனுஷ் தேர்வு செய்த தலைப்புகளில் ஒன்று இந்த படிக்காதவன். அதைவிட பெரிய நம்பிக்கை இப்போது படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி இருப்பது.

காதல், ஆக்ஷன், காமெடி என சகல மசாலாக்களையும் மணக்க மணக்க சேர்த்திருக்கிறாராம் இந்தப் படத்தில் இயக்குநர் சுராஜ்.

பட்டையக் கிளப்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். படம் பொங்கலுக்கு ரிலீஸ்

10. கோவா:

சென்னை 28, சரோஜா என இரண்டு வெற்றிப் படங்கள் மூலம் முன்னணி இயக்குனராகியிருக்கும் வெங்கட் பிரபு, சௌந்தர்யா ரஜினிகாந்துக்காக இயக்கும் படம் கோவா. இதில் ஹாலிவுட் புகழ் ஜெஸிகா ஆல்பாவும் நடிக்கிறாராம். இன்றைய இளைஞர்களின் நாடித் துடிப்பை நன்கு புரிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு இந்தப் படத்திலும் தன்னை நிரூபிப்பார் என நம்புகிறார்கள்.

இந்த 10 படங்களைத் தவிர, அமீர் நடிக்கும்ம் யோகி, ஜெயம் ரவி நடிப்பில் ஜனநாதன் உருவாக்கி வரும் பேராண்மை, மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் தயாராகி நிற்கும் நந்தலாலா, வசந்த பாலன் இயக்கும் அங்காடித் தெரு, விஷ்ணுவர்தனின் சர்வம், அஜீத்தின் பெயரிடப்படாத சிவாஜி பிலிம்ஸ் படம், பாக்யராஜின் புதிய வார்ப்புகள், சரத்குமார்-ஸ்ரேயா நடிக்கும் ஜக்குபாய், லிங்குசாமியின் பையா (இந்த வருஷம் முடிச்சிருவாரா...!) என மேலும் சுவாரஸ்யமான படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டை விட இந்த ஆண்டு மிகச் சிறப்பான வருடமாக கோலிவுட்டுக்கு அமையப்போகிறது. வருடம் முழுவதும் நடக்கப் போகும் இந்த திரைத் திருவிழாவுக்கு இப்போதே தயார்படுத்திக்கோங்க!!

நன்றி : தட்ஸ்தமிழ்

3 Comments

 1. பட்டியல் நன்றாக இருந்தது.
  பார்க்கலாம் படங்கள் எப்படி வருகின்றன என்று.

   
 2. Reply To This Comment
 3. பட்டியல் நன்றாக இருந்தது.

  பார்க்கலாம், படங்கள் எப்படி வருகின்றன என்று.

   
 4. Reply To This Comment
 5. பேராண்மை

   
 6. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments