TopBottom


பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ரிலீஸ் பண்ண என் படம் கரும்போ பட்டாசோ அல்ல. நான் நினைக்கும் வித்த்தில் படம் வந்தால்தான் ரிலீஸ் செய்வேன் என்கிறார் இயக்குநர் பாலா.

உலக சினிமாவுக்கு இணையாகப் பேசப்படும் படங்களைத் தரும் பாலா பொதுவாக யாருக்கும் பேட்டி தருவதில்லை. வெகு அரிதாகவே பேசியிருக்கிறார். இப்போதும் பேட்டி எதுவும் யாருக்கும் தர முடியாது என்று கறாராக்க் கூறிவிட்டார் பாலா.

இந்த தருணத்தில் முன்பு அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியிலிருந்து சில பகுதிகளைத் தருவது இப்போது பொருத்தமாக இருக்கும்...

யார் கடவுள்?

இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திக-நாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கைகளையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரீகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!
ரெண்டரை அடி உயரமே இருக்கிற என் பரமசிவனுக்கு 54 வயசு. அதுக்கும் கம்மியா இருக்கிற என் 30 வயசு பார்வதி, இதயக் கோளாறு உள்ள குழந்தை. உடம்பு போலவே, மனசும் இன்னும் குழந்தையாவே இருக்கு. இப்படி இன்னும் ரெண்டு டஜன் மனிதர்களை இதில் நடிக்க வெச்சிருக்கேன்.

பொறந்ததில் இருந்து இன்னும் வீட்டு வாசலைத் தாண்ட முடியாத கடவுளின் குழந்தைகளை, ஊர் உலகம் எல்லாம் பார்க்கட்டும்னு கூட்டிட்டு வந்திருக்கேன். மேனி அழகைச் சிவப்பாக்க சிவப்பு க்ரீம் பூசுகிற உலகமே, வந்து பாருங்கடா இவங்களையும்னு காட்ட வந்திருக்கேன்.

ஊனத்தோடு பொறக்கிறது சாபம் இல்லை; சத்துக் குறைச்சல். சரி, நல்ல சாப்பாடு நாலு வேளை சாப்பிட்டிருந்தா, ஊட்டச் சத்தோடு இருக்கலாம். ஒருவேளைச் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஆத்தாளுக்குப் பொறந்தா, ஓரமாக் குழி தோண்டிப் பொதைச்சிரலாமா? உடம்பு, மனசு, மூளைன்னு எல்லாமே சிதைஞ்சிருக்கிற அந்த உயிர்களின் சிரிப்பே, இந்தப் பிரபஞ்சத்துக்கான ஆன்மிகம்!

''ஒருமுறையா இருமுறையா பலமுறை
பல பிறப்பெடுக்கவைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனைத்
துடிக்கவைத்தாய்
பிண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
ஐயனே... எம் ஐயனே!''

ராஜாவின் பாடல் மனசை அறுக்கிறது.

'ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத்துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங்களை ஒதுக்கிடுறோம்.

'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சிருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா?

அப்பனோ ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!

நரகலைத் திங்கிற நாய் மாதிரி ஒரு ஈனப் பொழப்பு. ஆனா, அந்த எளிய மனிதர்களிடம் இருக்கிற பண்பு, படிச்ச பல பெரிய மனுஷங்களிடம்கூட இல்லை என்பது நான் உணர்ந்த உண்மை!''

ஆர்யாவின் தோற்றமும் பூஜாவின் மாற்றமும் பற்றி...

ஆங்... ருத்ரனா வர்றான் ஆர்யா. அவனை ஒரு ஜாலியான பையனா தான் பார்த்திருக்கு தமிழ் சினிமா. இதுல ஆர்யா, அவன் சினிமா வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு வந்துட்டான். உன்னதம், உன்மத்தம்னெல்லாம் சொல்வாங்கல்ல... அப்படி ஒரு உழைப்பு. ரெண்டு வருஷத்தில் வேற ஒரு ஆளா உருமாத்திட்டேன். க்ளைமாக்ஸ் ஃபைட் ஒண்ணை ஒரு முழு மாசமும் எடுத்தேன். ரெண்டே பேரு... காத்துல கை வீசுறதெல்லாம் கிடையாது. அடி ஒவ்வொண்ணும் நிஜமாவே விழும். மூஞ்சி முகரைஎல்லாம் பொளந்து, முட்டி பேந்துன்னு இதுவரைக்கும் சினிமா பார்த்திராத ஆக்ஷன்!

அம்சவல்லியா வருது பூஜா. சின்சியரான பொண்ணு! சிரிச்ச முகமாவே மொத்தப் படமும் முடிச்சுக் கொடுத்துச்சு. கடைசி வரைக்கும் தன் கஷ்டங்கள் எதையுமே காட்டிக்கலை. வலியும் ஜீவனுமான ஒரு கேரக்டரை, அப்படி ஒரு எனர்ஜியோடு செய்திருக்கு. தான் சினிமாவில் இருந்தேன்னு பெருமிதமா சொல்லிக்கிறதுக்கு, அதோட ஆயுசுக்கும் இந்த ஒரு படம் போதும்!

ஆர்யா, பூஜா போல என் கனவு மொத்தத்தையும் தன் கண்களில் சுமந்தவர் கேமராமேன் ஆர்தர் வில்சன். காசியில், ராஜாவின் பாடல் நாகராவில் ஓடியபோது, வந்து உட்கார்ந்த ஒரு வடநாட்டுச் சாமியார்... அந்த ஏழரை நிமிஷங்களும் வானம் வெறித்து, அருவி போலக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். பாடல் முடிந்ததும், என் தலையை தொட்டு, 'இதோட அர்த்தம் எனக்குப் புரியும்' என்று சொல்லிட்டுப் போனார்.

மொழி தெரியாத உலகத்தையும் விழி கசியவிடுகிற இளையராஜா என்னோடு இருக்கார். அது போதும் எனக்கு!

15 வருடங்கள்... மூன்றே படங்கள். நாலாவது படமான 'நான் கடவுள்' உருவாக்கத்திலும் இவ்வளவு காலம் எடுத்துக்கறீங்களே, உங்க ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலே இதுதானா?

''தீபாவளி, பொங்கல்னு படம் ரிலீஸ் பண்ண நான் தர்றது பட்டாசோ, கரும்போ இல்லை. எந்த விஷயத்தை எடுத்துக்கணும், அதை எப்படிச் செய்து முடிக்கணும்னு எனக்குத் தெளிவு கிடைக்காம, அதை நான் செய்ய மாட்டேன். இருநூறு லாரி, முன்னூறு கார்களை வெச்சு சேஸிங் படம் எடுக்கிற பரவசத்தை, படபடப்பைவிட, ரெண்டு மனிதர்களைத் திண்ணையில உட்காந்து பேசவெச்சே பிரமாதப்படுத்திட முடியும்னு நினைக்கிறேன். அது நான் நினைச்சவிதத்தில் கிடைக்கும் வரை, அந்த ரெண்டு பேரையும் திண்ணையைவிட்டு எழுந்திருக்க விட மாட்டேன். அவ்வளவுதான் விஷயம்!

இதோ, 'நான் கடவுள்' படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப்பரைக் கொடுத்து, 'பேசுப்பா!'னு படம்பிடிக்க முடியாது. அவங்களோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும்பம்.

இன்னொரு பக்கம் காசி சாமியார்கள். அகோரின்னு சொல்லப்படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன்.

இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தியாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!''

சரி, கடவுளை எப்போ கண்ணுல காட்டுவீங்க?'

''கூடிய விரைவில்னு பொதுவான வார்த்தைகளில் பொய் சொல்ல விரும்பலை. விஷயம் என்னன்னா, வித்தை பழகின அளவுக்கு நான் வியாபாரம் பழகலை. ஒரு வியாபாரி போலப் பேரம் பேசவும் எனக்குத் தெரியாது. இந்தப் படத்துக்கான செலவு, நினைச்சதைவிட, அதிகமாகிப் போச்சு! அத்தனையும் தவிர்க்க முடியாத செலவு. என் தரப்பில் இருந்து சில கோடிகளை வாங்கிப் போட்டு, படத்தை முடிச்சிருக்கேன்.

'ஹே ஜென்ம மாத்ரம் நா
ஹிதா அபி ஜென்ம நபவிஷ்யதி'னு சொல்வான் என் ருத்ரன்.

அப்படி ஒரு விடுதலையை வேண்டிக்கிற அளவுக்கு, இந்தப் படத்தை உருவாக்குவதில் உழைச்சிருக்கோம். இயல்பின் ஆழத்தையும் அதன் அர்த்தத்தையும் பிடித்துவிட்டேன் என்பதுதான் என் பெருமிதம்!

நன்றி : தட்ஸ்தமிழ்

2 Comments

 1. Anonymous Says,

  தோழரே நான் கடவுள் பாடல் வரிகள் வேண்டும் கிடைக்குமா

   
 2. Reply To This Comment
 3. பாலா மாதிரி தைரியமான இயக்குனர்கள் தமிழ்
  சினிமாவில் இன்னும் நிரைய பேர் வரனும்.

   
 4. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments