TopBottom


1000 படங்களில் நடித்த பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரிய மகா கலைஞன் நாகேஷ்.

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சிகரம் தொட்டன.

நடிப்பு வாழ்க்கை:

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார்.

சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை.

ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.

அதன் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார்.

நீங்காத இடம் பெற்ற தருமி ...


ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ள போதிலும் இன்றும் திருவிளையாடல் படத்தில் அவர் நடித்த தருமி வேடம் எல்லோர் மனத்திலும் நீங்காத இடம்பெற்றது.

பிழைப்புக்காக அவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார் (பின்னாளில் இதுவே சர்வர் சுந்தரமானது).

எம்ஜிஆருடன்...

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரது பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ்.

குறிப்பாக வேட்டைக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் என அவர் எம்ஜிஆருடன் நடித்த படங்களின் பட்டியல் மிகப் பெரியது.

இடையில் சில காலம் இருவருக்கும் ஒரு பிரிவு வந்தாலும், மீண்டும் நாகேஷை அரவணைத்துக் கொண்டார் எம்ஜிஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நாகேஷுக்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் அப்படத்தின் இயக்குநரான எம்ஜிஆர்.

குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மிகவும் உடல் பாதித்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வர உதவியவர் எம்ஜிஆர்.

'அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் சேர்த்து இப்பவே குடிச்சேன். அதனால நான் பிழைப்பேனான்னே தெரியாத நிலை. ஆனால் மருத்துவர்களும் அண்ணன் எம்ஜிஆரும் எனக்கு புதுப்பிறவி கொடுத்துட்டாங்க' என்று ஒரு முறை கூறியிருந்தார் நாகேஷ்.

திரையுலகில் தாம் சம்பாதித்த செல்வத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தார். ஆனால் பின்னர் பெரும் நஷ்டத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. தி.நகர் பாண்டிபசாரில் அவரது நாகேஷ் தியேட்டர் பிரச்சனையில் சிக்கிய போது பகையை மறந்து எம்ஜிஆர் அவருக்கு உதவி செய்தார்.

கேபி... ஸ்ரீதர் பட்டறையில்...


எம்ஜிஆர், சிவாஜி (திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் விதிவிலக்கு!) படங்களில் காமெடியனாக நடித்துப் புகழ்பெற்றாலும், நடிகர் நாகேஷ் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜெலித்தது கே. பாலச்சந்தர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரது படைப்புகளில்தான்.

எதிர்நீச்சல் படத்தையும், நீர்க்குமிழி படத்தையும் நடிக்க வரும் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக வைக்கலாம். சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கையை நாகேஷ் பிரதிபலித்த அளவுக்கு வேறு யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவு பிரமாதமாக நடித்திருப்பார் நாகேஷ்.

காதலிக்க நேரமில்லை படம், நாகேஷ் நகைச்சுவையில் ஒரு மைல்கல். ஒரு சாதாரண காட்சியை, வெறும் பாவனைகளில், உச்சரிப்பின் மூலம் த்ரில்லர் காட்சியாக எப்படிக் காட்டுவது என திரைப்பட இயக்குநர்களுக்கே பாடம் நடத்தியிருப்பார் நாகேஷ் (ஸ்ரீதரின் கைவண்ணம்!).

ரஜினி-கமல் யுகத்திலும்...

ரஜினி - கமல் யுகத்திலும் கலக்கியவர் நாகேஷ்.

ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் மிகச் சிறந்த நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவில், நடிகர் நாகேஷாகவே வந்து அசத்தியிருப்பார்.

பின்னர் படிக்காதவன் படத்தில் ரஜினியின் வளர்ப்புத் தந்தையாக நடித்து நெகிழ்ச்சி தந்தார்.

ஆனால் கலைஞானி கமலுடன் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நெருக்கம் இருந்தது, கடைசி வரை.

கமல் ஹாசனின் பிற்காலப் படங்கள் அனைத்திலுமே நாகேஷுக்கு மறக்க முடியாத பாத்திரங்கள். அபூர்வ சகோதரர்கள் மூலம் ஒரு விதத்தில் நாகேஷின் பைனல் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தவரே கமல்தான் என்றாலும் மிகையில்லை.

மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் 'நடித்த' ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷுக்குக் கிடைத்தது.

சொந்த சோகங்கள்...


திரையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், நாகேஷின் சொந்த வாழ்க்கை தனிமையில் சேகமாகவே கழிந்தது.

வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.

புதிதாக வெளிநாட்டுக் கார் ஒன்றை வாங்கிக் கொண்டு தன் தாயை சந்திக்க அவர் ஆசையுடன் சென்றார். ஆனால் அவரால் தாயை சந்திக்க முடியவில்லை. அவர் சென்ற போது அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்த நாகேஷ், மகனை பெரிய நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என விரும்பினார். இதற்காக மகன் ஆனந்தபாபுவை வைத்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால் தான் சேர்த்த பணத்தையெல்லாம் இழக்கும் படமாக அது அமைந்துவிட்டது.

பின்னர் சில படங்கள் நன்றாக ஓடின. ஆனால் அந்த வெற்றிகளை ஆனந்தபாபு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், போதைக்கு அடிமையாகி பாதை மாறிப்போனது நாகேஷுன் இதய நோயை இன்னும் தீவிரப்படுத்திவிட்டது.

நாகேஷ் நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார்.
அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

திரையுலகினர் அஞ்சலி

நாகேஷின் மறைவுச் செய்தி அறிந்ததும் திரையுலகினர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாகேஷ் காலத்து நடிகர்களான மனோரமா உள்ளிட்டோர், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வாலி உள்ளிட்டோர் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மனோரமா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க கூட முடியாமல் சோகத்தில் காணப்பட்டார். அவருக்கு ஆறுதலாக அவருக்கு அருகே அமர்ந்திருந்த கமல்ஹாசனாலும் ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியவில்லை.

நாகேஷின் மறைவு தமிழ் திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

8 Comments

 1. :(

   
 2. Reply To This Comment
 3. Anonymous Says,

  :((

  Puduvai siva

   
 4. Reply To This Comment
 5. Anonymous Says,

  நாகேஷ் மிகப்பிடித்த நடிகர். அவக்காலத்திலே அவமற்ற அவம். இவர் இறப்பை வைத்தே, அய்யா, அம்மா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், பதிவர்கள் முத்துக்குமாரை மற(றை)ப்பர்கள்.

   
 6. Reply To This Comment
 7. அடடா...... என்ன ஒரு அருமையான நபர் & நடிகர்.

  'ஏண்டா காமேஸ்வரா' இங்கே இல்லே அங்கே வந்து சொல்லு.......
  மை.ம.கா.ராஜன் கணக்கு வழக்கில்லாமப் பார்த்தேன்.


  அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

   
 8. Reply To This Comment
 9. ஆழ்ந்த அனுதாபங்கள்...

  இன்னொரு நாகேஷ் நம் திரையுலகிற்கு கிடைப்பாரா?..

  தருமியும், எதிர் நீச்சலும், நீர் குமிழியும் படைப்பதற்கு இனி யாரும் வரப்போவது இல்லை...

   
 10. Reply To This Comment
 11. நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்!

  எதிர்நீச்சல், நீர்க்குமிழி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை!

  அவரின் குடும்பத்தாருக்கு ஆழந்த அனுதாபங்கள்!

   
 12. Reply To This Comment
 13. Ravi Says,

  அருமையான நடிகர், அவர் சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல.சிறந்த வில்லன் நடிகரும் கூட. அவர் வில்லனாக நடித்த அபூர்வசகோதரர்கள் மற‌க்க முடியாத படம்.

  அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :( :((

   
 14. Reply To This Comment
 15. அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போமாக...! :(

  அவர் வாழும் காலத்தில் விருதுகள் எதுவும் கொடுத்து கௌரவப்படுத்த தமிழ் சினிமாவும் இந்திய அரசும் தவறிவிட்டது.இனியாவது அவர் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்துவதுதான் அந்த விருதுக்கு கௌரவம்.

   
 16. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments