வானவெளியில் ஏற்பட்ட திடீர் விபத்து 2 செயற்கை கோள்கள் மோதி நொறுங்கின; விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆபத்து

வானிலை ஆய்வு மற்றும் தகவல் தொடர்புக்காக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் செயற்கை கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி உள்ளன. இவ்வாறு செலுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் தொலை தொடர்பு நிறுவனம் கடந்த 1997-ம் ஆண்டு ``இரிடியம் - 33'' என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. 560 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 790 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த செயற்கைகோள் மூலம் அமெரிக்க தொலைதொடர்பு நிறுவனம் 3 லட்சம் செல்போன் சேவைகளை அளித்து வருகிறது. இதில் அமெரிக்க ராணுவம் முக்கிய சந்தாதாரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது சுற்றிக் கொண்டிருந்த அதே சுற்றுப் பாதையில் ரஷ்யாவின் ``காஸ்மாஸ் 2251'' என்ற பழுதடைந்த செயற்கைகோளும் சுற்றிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பகல் 11.55 மணியளவில் சைபீரியாவுக்கு மேல் சுற்றுப்பாதையில் வந்த போது திடீரென இரிடியம் செயற்கைகோள் மீது காஸ்மாஸ் செயற்கைகோள் பயங்கரமாக மோதியது. இதில் அவை வெடித்து சிதறின.

விண்வெளி வரலாற்றில் செயற்கைகோள்கள் இப்படி விபத்துக்குள்ளானது இதுவே முதல்முறை. இதனால் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களுக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மோதி சிதறிய செயற்கைகோள்களின் பாகங்கள் விண்ணில் மேக கூட்டம் போல் சுற்றி திரிகின்றன. இவைகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று நாசா உள்ளிட்ட உலக விண்வெளி ஆய்வு மையங்களின் விஞ்ஞானிகள் கவலையடைந்து உள்ளனர்.

நாசா வருகிற 22-ந் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 7 விண்வெளி வீரர்களுடன் விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த ஆராய்ச்சி மையத்தில் ஏற்கனவே 2 அமெரிக்க மற்றும் ஒரு ரஷ்ய விஞ்ஞானிகள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

நாசா விண்கலம் விண்வெளியில் நுழையும் போதோ அல்லது பூமிக்கு திரும்பும் போதோ உடைந்த செயற்கைகோள்களின் பாகங்கள் அதன் மீது மோதும் அபாயம் உள்ளது.

மேலும் அமெரிக்காவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் சிதறிய பாகங்களுக்கு மிக அருகில் உள்ளது.

இவற்றின் மீது உடைந்த பாகங்கள் மோதாமல் இருக்க நாசா விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

சாலை விபத்துபோல் விண்வெளியிலும் விபத்து ஏற்படும் அபாயம் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்