TopBottom

ஆஸ்கர் - வெற்றியும் சில விடுபடல்களும்

எழுதியவர் : Karthikan Karunakaran 25 February 2009


இந்தியாவில் உருவான ஸ்லம்டாக் மில்லியனர் எட்டு ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றியிருக்கிறது. ப‌ரிந்துரைக்கப்பட்ட ஒன்பது பி‌ரிவுகளில் ஒலித் தொகுப்பு - சவுண்ட் எடிட்டிங் - தவிர்த்து அனைத்துப் பி‌ரிவுகளிலும் இப்படம் விருது வென்றிருப்பது அ‌ரிய சாதனை.

இந்த எட்டில் மூன்று விருதுகளை கைப்பற்றியிருப்பவர்கள் இந்தியர்கள். சிறந்த இசை, சிறந்த பாடல் ஆகிய இரு பி‌ரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மானும், சிறந்த ஒலிக் கலவைக்காக கேரளாவைச் சேர்ந்த ரெசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது கைநழுவிச் செல்லும் கனவாகவே இந்தியர்களுக்கு இருந்து வந்திருக்கிறது. அந்தக் கனவை கைகூடச் செய்திருக்கிறார்கள் ரஹ்மானும், ரெசூல் பூக்குட்டியும். இது சாதாரண வெற்றியல்ல. ஒரே இரவில் நிகழ்ந்துவிட்ட அதிசயமும் அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாட வேண்டிய, பெருமைப்பட வேண்டிய அபூர்வ வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் இந்திய திரையிசைக்கு சர்வதேச அரங்கில் ம‌ரியாதையை ஏற்படுத்தி தந்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இந்திய சினிமாவின் மீது, அதன் கலைஞர்களின் மீது மேற்குலகு கொண்டிருந்த பார்வையை திருத்தியமைத்திருக்கிறது இந்த வெற்றி. தா‌ஜ்மஹால், காந்தி, ஆயுர்வேதம் போல நவீன இந்தியாவின் புதிய அடையாளமாகியிருக்கிறார் ரஹ்மான்.


குறிப்பாக ரஹ்மான் அந்த மேடையில் தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொன்னது உலகத்தமிழர்கள் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. ரஹ்மானுடைய அந்த தன்னடக்கமும் பணிவும் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. தன்னை தமிழகத்தையும் தமிழையும் மறக்காமல் தமிழில் சொன்னது எல்லோர் கண்களையும் ஆனந்தத்தில் ஈரமாக்கிவிட்டது.

ரஹ்மானின் திறமையை நாம் - இந்தியர்கள் - ஏற்கனவே உணர்ந்து பரவசப்பட்டிருக்கிறோம். ரோஜா, பம்பாய், உயிரே, ரங்கீலா, லகான், ரங் தே பசந்தி என பல படங்களில் ரஹ்மானின் இசையும், நுட்பமும் உச்சம் தொட்டிருக்கின்றன. ஆனால், ஸ்லம்டாக் மில்லியனர் படம்தான் சர்வதேச ரசிகர்கள் முழுமையாக கேட்டு பரவசப்பட்ட முதல் படம்.

டேனி பாயல் இயக்கியிருக்கும் இப்படம் மும்பையின் சே‌ரி வாழ்க்கையை சொல்கிறது. குரோர்பதி நிகழ்ச்சியில் சாதாரண சே‌ரி இளைஞன் அனைத்து கேள்விகளுக்கும் ச‌ரியான பதிலளிக்கிறான். கடைசி ஒரேயொரு கேள்வி மட்டும் பாக்கி. அதற்கும் பதில் சொன்னால் ஒரு கோடி ரூபாய் ப‌ரிசு.

இந்நிலையில் சே‌ரியில் வாழ்கிற ஒருவனுக்கு கஷ்டமான கேள்விகளுக்கு எப்படி பதில் தெ‌ரிகிறது என்ற சந்தேகம் வலுக்கிறது. போலீஸ் அந்த இளைஞனை அடித்து உதைத்து உண்மையை கேட்கிறது. வறுமையும், வன்முறையும் நிறைந்த சே‌ரி வாழ்க்கை‌யினூடாக கேள்விக்கான பதில்களை அவன் அறிந்து கொண்ட கதை பிளாஷ்பேக்கில் வி‌ரிகிறது.

இந்தியாவைப் பற்றி இந்தியாவில் தயாரான படம் என்றாலும் ஸ்லம்டாக் மில்லியனர் இங்கிலாந்து படம் என்பதை நினைவில் கொள்க. அதனாலேயே இந்தப் படம் ஒன்பது பி‌ரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டது. இல்லையெனில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஒரேயொரு பி‌ரிவில் மட்டுமே இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கும். ரஹ்மானுக்கும், பூக்குட்டிக்கும் விருது பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல்
போயிருக்கும்.

இதையே வேறு கோணத்தில் சொல்வதென்றால், ரோஜாவும், பம்பாயும், ரங்கீலாவும், ரங் தே பசந்தியும் இந்திய தயா‌ரிப்பாக இல்லாமல் இங்கிலாந்து தயா‌ரிப்பாகவோ, அமெ‌ரிக்க தயா‌ரிப்பாகவோ இருந்திருந்தால் இந்நேரம் ரஹ்மானின் கணக்கில் நான்கைந்து ஆஸ்கர் விருதுகள் வரவாகியிருக்கும்.


இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை என்னவெனில், ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை ஆஸ்கர் விருதை வைத்து எடைபோட வேண்டிய அவசியம் இல்லை. உலகில் நூற்றுக்கணக்கான நாடுகள் படங்களை தயா‌ரிக்கின்றன.
அதில் இரண்டேயிரண்டு நாடுகளில் தயாராகும் படங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை கலையுலகின் உச்சமான விருதாக கொண்டாடுவது கலையையும், கலைஞர்களையும் சிறு வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம். இதன் பொருள் ஆஸ்கர் விருது துச்சமானது என்பதல்ல. அதுவே இறுதியானது அல்ல என்பதுதான்.

இந்த வருடம் ஆஸ்கர் விருதுபெற்ற இன்னொரு படம் ஸ்மைல் பிங்கி. ஆவணப்படமான இது சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. ஸ்லம்டாக் மில்லியனர் போலவே இதுவும் இந்தியாவை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

கருவில் இருக்கும் குழந்தையானது, முகத்தின் இரு பாகங்களும் ச‌ரியாக இணையும்முன் பிறந்துவிட்டால், உதடுகள் பிளவுண்டு காணப்படும். பிளவன்னம் எனப்படும் இந்த குறைபாட்டை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கலாம்.

மருத்துவ வசதியில் பின்தங்கியிருக்கும் இந்தியாவில் இந்த குறைநீக்கு அறுவை சிகிச்சை பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. அதனால் பள்ளியிலும் பிற இடங்களிலும் இந்தக் குழந்தைகள் கேலிக்குள்ளாகி மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். வெளிநாடுகளில் இந்தக் குறை பிறந்த உடனேயே பெரும்பாலும் ச‌ரி செய்யப்பட்டு விடுகிறது.

இந்தியாவில் உள்ள பிளவன்ன குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறது அமெ‌ரிக்காவைச் சேர்ந்த ஸ்மைல் ட்ரெய்ன் என்ற தொண்டு நிறுவனம். அந்நிறுவனம் பிங்கி என்ற சிறுமியை கண்டுபிடித்து அவளுக்கு பிளவன்ன அறுவை சிகிச்சை செய்வதை ஆவணப்படாக்கியிருந்தார் மெகன் மைலன். ஸ்மைல் பிங்கி என்ற அந்தப் படத்துக்குதான் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.

இந்தியர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும் இந்த கொண்டாட்டமான சூழலில் நாம் கவலைப்பட வேண்டிய சில விஷயங்களை இவ்விரு படங்களும் நினைவுப்படுத்துகின்றன.

ஸ்மைல் பிங்கி ஆரோக்கியத்தைப் பற்றியது என்றால், ஸ்லம்டாக் மில்லியனர் அறிவைப் பற்றியது. வளர்ந்த நாடுகள் அனைத்திலும் கல்வியும், மருத்துவமும் அரசின் பொறுப்பு. சமூகத்தில் பெ‌ரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதே கல்வி அடிமட்டத்தில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கும் கிடைக்கிறது. மருத்துவமும் அப்படியே. பொருளாதார தடை கழுத்தை இறுக்கும் கியூபாவில்கூட அனைத்து மருத்துவ சிகிச்சையும் இலவசம். ஆனால், நமது நாட்டில்?

கல்வியும், மருத்துவமும் தனியார்வசம். பொருளாதார நெருக்கடியில் அனைத்து துறைகளும் தள்ளாடிக் கொண்டிருக்கும் இன்று எவ்வித பாதிப்பும் இன்றி இந்தியாவில் கொழுத்துக் கொண்டிருக்கும் இரண்டே துறைகள் கல்வியும், மருத்துவமும்.

மக்கள் தொகையில் 80 சதவீதம் இருக்கும் அடித்தட்டு ஜனங்களின் குழந்தைகள் கரும்பலகைகூட இல்லாத பள்ளிகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். 20 சதவீதம் பேர் நவீன கல்வியின் அனைத்து விளைச்சலையும் அனுபவிக்கிறார்கள். சமகல்வியே இல்லாத நாட்டில் மருத்துவத்தைப் பற்றி சொல்வதற்கில்லை.

பல கோடி செலவ‌ழித்து சில நாட்கள் உயிரை‌‌க் காப்பாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் நிறைந்த இதே நாட்டில் சில ஆயிரங்கள் செலவ‌ழிக்க முடியாமல் தினந்தோறும் மடிந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை எத்தனை? சிந்தித்ததுண்டா நாம்?

வளர்ந்த நாடுகளில் காணப்படாத அல்லது மிகக் குறைவாகக் காணப்படுகிற இந்த முரண்பாடுகள்தான் ஸ்லம்டாக் மில்லியனர் இயக்குனர் டேனி பாயலையும், ஸ்மைல் பிங்க் இயக்குனர் மெகன் மைலனையும் இந்தியாவை நோக்கி ஈர்த்திருக்கிறது. ஆஸ்கர் விருதுக்காக வாழ்த்துகள் சொல்லும் அரசியல்வாதிகள் வெட்கி தலைகுனிய வேண்டிய உண்மையல்லவா இது?

2 Comments

 1. //இந்தியாவைப் பற்றி இந்தியாவில் தயாரான படம் என்றாலும் ஸ்லம்டாக் மில்லியனர் இங்கிலாந்து படம் என்பதை நினைவில் கொள்க. அதனாலேயே இந்தப் படம் ஒன்பது பி‌ரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டது. இல்லையெனில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஒரேயொரு பி‌ரிவில் மட்டுமே இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கும். //

  அயல்நாட்டினர் தங்களின் படத்தில் பணியாற்ற இந்திய கலைஞர்களை அழைப்பது என்பது அந்த கலைஞர்களின் திறமைக்கு சான்று

   
 2. Reply To This Comment
 3. //மருத்துவ வசதியில் பின்தங்கியிருக்கும் இந்தியாவில் இந்த குறைநீக்கு அறுவை சிகிச்சை பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. அதனால் பள்ளியிலும் பிற இடங்களிலும் இந்தக் குழந்தைகள் கேலிக்குள்ளாகி மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். வெளிநாடுகளில் இந்தக் குறை பிறந்த உடனேயே பெரும்பாலும் ச‌ரி செய்யப்பட்டு விடுகிறது.//

  மன்னிக்கவும்

  http://www.ularal.com/httpjakartananbanblogspotcom20090/ பாருங்கள்

   
 4. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments