TopBottom

யானை மீது ஊர்வலம்? அலறிய ஆஸ்கர் நாயகன்!

எழுதியவர் : Karthikan Karunakaran 28 February 2009

தமிழனின் எண்பது ஆண்டுகால 'பிளாக் அண் ஒயிட்' கனவில், தன்னையே வண்ணமாக நிரப்பி, நமது நீண்டகால 'கன்னித்தீவு' கனவை நிறைவேற்றியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

கோடம்பாக்கத்திலிருந்து 'கொடாக்' (ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம்) வரைக்கும் பயணித்த ரஹ்மான், உலகமே கவனித்து வந்த அந்த மேடையில் தமிழில் பேசியதுதான் ஹைலைட்!

"நான் இங்கு ஒருவித அச்சத்துடனும், அதே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியுடனும் வந்தேன். ஏதோ எனது திருமணத்திற்கு வருவது போல படபடப்பாக இருந்தது. இந்த விருதுக்கு காரணம் என் தாயின் ஆசிர்வாதம். எனக்கு தாயை தவிர வேறு எதுவும் பெரிதில்லை. இந்த அரங்கில் அவரும் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நன்றி. அவரது ஆசிர்வாதத்துக்கு நன்றி"

"இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்ற ரஹ்மான், நான் தமிழில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என்று கூறிவிட்டு 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தனது தாய் மொழியில் பேசினார். புரியாவிட்டாலும் கைதட்டி ரசித்தது உலகம்!

ஆரம்பகாலங்களில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக ரஹமான் வாங்கிய சம்பளம் வெறும் ஐம்பது ரூபாய். இன்றைய தேதிக்கு ஆஸ்கர் விருதின் மதிப்பு என்னவென்று தெரியுமா? கிட்டதட்ட நு£று கோடிகள்! (இதில் ஒரு ரூபாயை கூட வரியாக வசூலிக்க கூடாது என்று முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. அதுமட்டுமல்ல, இசைப்புயலுக்கு நிரந்தர வரிவிலக்கு அளிக்கவும் யோசித்து வருகிறது)

பணமாக இவ்வளவு என்றால், பிற சலுகைகள் அம்மாடியோவ்... மூன்று வருடங்களுக்கு இலவசமாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும், எந்த ஃபிளைட்டில் வேண்டுமானாலும் பறக்கலாம். உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் எத்தனை ஸ்டார் அந்தஸ்து உள்ள ஹோட்டலில் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். மொத்த பில்லையும் ஆஸ்கர் கமிட்டியே ஏற்றுக் கொள்ளும்! அதுமட்டுமல்ல, உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் வைக்கப்படுவார் ரஹ்மான்! செல்லும் நாடுகளில் எல்லாம் கவுரவ பிரஜையாக அங்கீகரிக்கப்படுவார்! இப்படி சலுகை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரராகிவிட்ட ரஹ்மானின் ஆரம்ப காலமும் சரி, வெற்றியின் உச்சத்தில் இருக்கும் போதும் சரி, அவர் ஒரே மாதிரிதான் என்று வியக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இசைஞானி இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு பிளேயராக இருந்தவர் ரஹ்மான். ஆஸ்கர் நாயகனின் ஆரம்பகாலங்கள் பற்றி நம்மிடம் பேசினார் எஸ்.ஏ.ராஜ்குமார். "சின்னப்பூவே மெல்லப் பேசு, புது வசந்தம், மனசுக்குள் மத்தாப்பூ போன்ற படங்களுக்கு நான் இசையமைத்தபோது என் குருப்பில் கீ போர்டு வாசித்தார் ரஹ்மான். புதுமையான சிந்தனையுள்ளவர். எல்லாவற்றையும் புதுசா செய்யனும் என்ற நோக்கம் அவரிடம் அப்பவே இருந்திச்சு. நாங்க ஏழு மணியிலிருந்து ஒரு மணிக்குள்ளே ரெக்கார்டிங் செய்வோம். ஆனால் அவரு வருவதே பதினொரு மணிக்குதான். அவரு மேலே கோபமே வராது. ஏன்னா, அவரது திறமைக்கு முன்னாடி இந்த லேட் பெரிய விஷயமா தெரியவே தெரியாது. அவரு உச்சத்துக்கு போன பிறகும் கூட, விடிய விடியதான் ரெக்கார்டிங் செய்வார். அவர் ஒரு இரவு பறவை" என்றார் மலரும் நினைவுகளோடு.

தொடர்ந்து ரஹ்மானின் நினைவுகளில் மூழ்கிய எஸ்.ஏ.ராஜ்குமார், "நான் இப்போ திரை இசை கலைஞர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கேன். கோடம்பாக்கத்தை சேர்ந்த இசைக்கலைஞர்களுக்கான சங்கம் இது. இதில் ஆரம்ப காலத்திலிருந்தே உறுப்பினராக இருக்கிறார் ரஹ்மான். எந்த இசையமைப்பாளர் ரெக்கார்டிங் செய்தாலும், சங்கத்திற்கென்று குறிப்பிட்ட தொகையை கட்டணும்ங்கிறது எங்க சங்கத்தோட சட்டம். ஆச்சர்யம் என்னவென்றால், அவர் பாலிவுட், ஹாலிவுட் வரைக்கும் போனாலும், ஒவ்வொரு ரெக்கார்டிங்குக்கும் எங்களுக்கு பணத்தை கரெக்டாக அனுப்பி வைத்துவிடுவார்"

"ஓரளவுக்கு வளர்ந்திட்டாலே, வளர்ந்த இடத்தை மறந்துவிடுகிறவர்களுக்கு மத்தியிலே ரஹ்மானின் இந்த செயலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? நாங்க எல்லாரும் சேர்ந்து திரை இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக மார்ச் ஒன்றாம் தேதி சென்னையில் அவருக்கு பாராட்டு விழா வச்சிருக்கோம். கோல்டன் குளோப் வாங்கிய அன்னிக்கு அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு அப்படியே இந்த விழாவுக்கும் தேதி வாங்கினோம். அப்போது "யானை மீது உங்களை உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்போறோம்" என்று சொன்னதற்கு அவர் வெட்கப்பட்டு பதறியதை பார்க்கணுமே! இந்த விழாவில் பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, ஏவிஎம்.சரவணன் ஆகியோர் கலந்துக்கிறாங்க" என்றார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

இசையை பற்றி பேசுகிறபோது இசைஞானி இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே ஒரு ஒப்பீடு எப்போதுமே இருந்து வருகிறது மக்கள் மத்தியில். அப்படியிருக்க, இளையராஜா ஒப்புக் கொண்டாரா? இந்த கேள்வியை ராஜ்குமாரிடம் வைத்தோம்.

"மற்றவர்கள் நினைப்பது போல அல்ல ராஜா அண்ணன். அவரது திருவாசகம் இசை வெளியீட்டு விழா பென்ஸ் பார்க் ஹோட்டலில் நடந்தது. அவரை மேடையில் கொண்டு போய் உட்கார வைக்க இரண்டு இசையமைப்பாளர்கள் போக வேண்டும். எல்லாருக்குமே ஆசை இருந்தது. ஆனால், இசைஞானி விரும்பியது என்னையும் ரஹ்மானையும்தான். நாங்கள் கைபிடித்து அவரை அழைத்து சென்று அமர வைத்தோம். இந்த விழாவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் அழைத்தபோது முகமெல்லாம் மலர, "கண்டிப்பா வரேன்" என்று அவர் சொன்னது இப்போதும் என் கண்களில் நிற்கிறது" என்றார் ராஜ்குமார்.

'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்ற உங்கள் நம்பிக்கை தன்னம்பிக்கையை குறைப்பதாக இல்லையா? என்று கேட்கப்பட்டது ரஹ்மானிடம். அதற்கு அவர் சொன்ன பதில், "தன்னம்பிக்கையே இறைவன் கொடுத்ததுதான்!"

ரஹ்மானின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன் அந்த இறைவனும்தானே!

1 Comment

 1. Anonymous Says,

  :X

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments