ஐ போன் புதிய ஓ.எஸ். தரம் எக்கச்சக்க வசதிகள்


ஆப்பிள் நிறுவனம் தன் ஐ–போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினை வெளியிட்டுள்ளது. iPhone OS 3.o என அழைக்கப்படும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் நூற்றுக் கணக்கான புதிய பல வசதிகளைத் தருவதாக ஆப்பிள் பட்டியலிட்டுள்ளது. அவற்றை மக்களுக்குக் காட்டவும் செய்துள்ளது. இந்த புதிய வசதிகள் ஐ–போன் மற்றும் ஐ–பாட் டச் சாதனங்களுக்கானவை என ஆப்பிள் அறிவித்துள்ளது. இந்த புதிய ஓ.எஸ். ஐ–போன் பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாகவும் ஐ–பாட் டச் வைத்திருப்பவர்களுக்கு ஏறத்தாழ ரூ.500 கட்டணமாகப் பெற்றுக் கொண்டு தர உள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தந்துள்ளவற்றில் முக்கிய சில வசதிகளை இங்கு காணலாம். அவை தர மறந்து போன சிலவற்றையும் இங்கு குறிப்பிடலாம்.


1. Cut Copy – Paste: ஐ–போன் வந்த நாள் முதலாய் இந்த வசதியினைத் தான் இதன் வாடிக்கையாளர்கள் கேட்டு வந்தனர். திரையில் இருமுறை தட்டி டெக்ஸ்ட்டை காப்பி செய்திடலாம்; பின் பேஸ்ட் செய்திடலாம். படங்களைக் கூட செலக்ட் செய்து பின் காப்பி செய்து பின் பேஸ்ட் செய்திடலாம்.


2. மேம்படுத்தப்பட்ட எஸ்.எம்.எஸ்.: சென்ற ஜூலை 2007ல் ஐ–போன் வந்ததிலிருந்து எஸ்.எம்.எஸ். செய்திகளை பார்வேர்ட் செய்வதும் டெலீட் செய்வதும் முடியாததாக இருந்தது. இப்போது வந்துள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த வசதியினை வழங்குகிறது. அத்துடன் எஸ்.எம்.எஸ். செய்திகளை அமைக்க மற்றும் படிக்க லேண்ட்ஸ்கேப் தோற்றத்தில் திரையினை அமைத்துக் கொள்ளலாம்.


3. MMS: Multimedia Messaging Service. இந்த வசதி 3ஜி ஐ–போன் களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் ஓ.எஸ். அமைக்கப்பட்டுள்ளது. இனி எம்.எம்.எஸ். வழியில் இந்த வசதியைப் பயன்படுத்தி படங்கள், பைல்கள், மற்றவர் தொடர்பு எண்கள், முகவரிகள் ஆகியவற்றை அனுப்பலாம். வீடியோ பைல்கள் அனுப்ப முடியுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


4. Voice Memo: இது முற்றிலும் புதியதொரு வசதி. ஐ–போனில் உள்ளாக அமைக்கப்பட்டுள்ள மைக் மற்றும் ஐ–பாட் டச் சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள மைக்கினைப் பயன்படுத்தி நம் ஒலியைப் பதிவு செய்திடலாம். பின் அதனை எம்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் அனுப்ப பைலைச் சுருக்கலாம். இந்த் வசதியும் வாய்ஸ் மெமோ ரெகார்டர் வசதியும் சென்ற ஆண்டு முதல் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.


5. Calendar: மேக் ஓ.எஸ். மற்றும் ஐ–கால் புரோகிராம்களில் உள்ள தரப்படுத்தப்பட்ட காலண்டர் கூகுள், யாஹூ, ஆரக்கிள் மற்றும் பலரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது ஐ–போனுடன் இது தரப்படுவதால் ஸ்போர்ட்ஸ், தேசிய விடுமுறை நாட்கள் மற்றும் பல விடுமுறை மற்றும் பணி நாட்களை நினைவு படுத்தும் வகையில் செட் செய்திடலாம். இவை ics பார்மட்டில் அமையும்.


6. ஸ்பாட் லைட் சர்ச் (Spotlight Search): மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இதனை அறிந்திருப்பார்கள்.அதில் பயன்படுத்தப்படும் Spotlight Searchதொழில் நுட்பத்தினை ஆப்பிள் நிறுவனம் இப்போது தன் ஐ–போனுக்குக் கொண்டு வந்துள்ளது. போனில் உள்ள காண்டாக்ட், மெயில், ஐபாட் அப்ளிகேஷன், காலண்டர் மற்றும் நோட்ஸ் ஆகியவற்றில் தேடுதலை இந்த வசதி அளிக்கிறது.

7. சிம்ஸ் 3 கேம்ஸ் (The Sims 3):: ஐ–போன் மற்றும் ஐபாட் சாதனங்களில் இந்த கேம்ஸ் விளையாடும் வசதி இப்போது தரப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோர் மூலம் இதனை கட்டணம் செலுத்தி (ரூ.50) டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

8. லைப் ஸ்கேன்: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் துணைப் பிரிவான லைப் ஸ்கேன் நிறுவனம் ஒன் டச் என்னும் அப்ளிகேஷனை நீரிழிவு நோயாளிகளுக்காக வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த நோயாளிகள் தங்கள் நோய் குறித்த தகவல்களைப் பதிவு செய்து அவற்றை சார்ட்ஸ் மூலம் காட்டலாம். முந்தைய மற்றும் தற்போதைய ரத்த சர்க்கரை அளவுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


மேலும் சில வசதிகளை இங்கு பட்டியலிடலாம். தனி மெசேஜ்களை பார்வேர்ட் மற்றும் டெலீட் செய்திடும் வசதி, ஸ்டீரியோ புளுடூத், டெக்ஸ்ட் அன்ட் நோட்ஸ், சபாரி பிரவுசருக்கு லாக் இன் பாஸ்வேர்ட், போனை அசைத்து அதன் மூலம் அடுத்த பாடல் அல்லது படம் இயக்குவது, யு–ட்யூப் அக்கவுண்ட் மற்றும் சப்ஸ்கிரிப்ஷன், டிவி காட்சிகளுக்கு கட்டுப்பாடு, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து திரைப்படங்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களை பெறல், வை–பி இணைப்புள்ள இடங்களில் தானாக இணைப்பு பெறுதல், வாய்ஸ் மெமோ அமைத்தல், வீடி யோ மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங், பிஷ்ஷிங் மெயில்களிலிருந்து பாதுகாப்பு, பலரும் எதிர்பார்த்து ஆனால் ஆப்பிள் தராத சில வசதிகளும் உள்ளன. அவற்றை இங்கு பட்டியலிடலாம்.


ஐ–போனில் பிளாஷ் சப்போர்ட் வசதியினை அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால் பிளாஷ் அடிப்படையில் இயங்கும் பல இணையப் பக்கங்களை ஐ–போனில் காண இயலவில்லை. கடந்த ஆண்டு இது குறித்து தெரிவிக்கையில் ஆப்பிள் இது குறித்து முயற்சிகளை எடுத்து வருவதாக அறிவித்தது. ஆனால் அந்த வசதி இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இல்லை. பிளாஷ் வசதிக்குப் போட்டியாகத் தன் சில்வர் லைட் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னிறுத்துவதால் பிளாஷ் வசதியினை ஆப்பிள் தன் சாதனங்களில் தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


ஒரு அப்ளிகேஷன் இயக்கத்தில் இருக்கையில் இன்னொரு அப்ளிகேஷனை இயக்கும் வசதியினை ஆப்பிள் தர விரும்பவில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் இது பேட்டரியின் சக்தியை வீணாக்கும் என அறிவித்துள்ளது. ஆப்பிள் இன்னும் தன் சாதனங்களில் வீடியோ ரெகார்டிங் வசதியைத் தரவில்லை. இது ஒரு குறையே. ( ஆனால் பல வாடிக்கையாளர்கள் இந்த தடையை உடைத்து சைகார்டர் (Cycorder) என்னும் அப்ளிகேஷனைப் புகுத்திப் பயன்படுத்தி வருகின்றனர்.)

ஐ–பாட் டச் மற்றும் ஐ–போனில் இயக்கப்படும் சபாரி பிரவுசரில் தேடுதல் வசதியை அனைவரும் எதிர்பார்த்தனர். இது தரப்படவில்லை. சாதாரண தொடக்கநிலை போன்களில் உள்ள வாய்ஸ் டயலிங் ஆப்பிள் சாதனங்களில் இல்லாததும் பெரிய குறையே. மற்றபடி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வசதிகளைத் தந்துள்ளது. மேலே குறிப்பிட்டவை அவற்றில் சிலவே. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் வெகுநாள் எதிர்பார்த்த பல விஷயங்கள் இதில் தரப்பட்டுள்ளன. தற்போது ஆப்பிள் சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் டெவலப்பர்களுக்கு மட்டும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. விரைவில் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

கருத்துரையிடுக

2 கருத்துகள்