தி காட் ஃபாதர்

மார்லன் பிராண்டோவுக்கு அகாதமி அவார்ட் கிடைத்த பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் தி காட் ஃபாதர் 1972 ஆம் ஆண்டு வெளியானது. அமெ‌ரிக்க நிழல் உலக சாம்ரா‌‌ஜ்யத்தில் இத்தாலி குடும்பங்களின் ஆதிக்கத்தை இதில் நுட்பமாக பதிவு செய்திருந்தார் கப்போலா.

மார்லன் பிராண்டோவுக்கு இதில் கார்லியோன் குடும்பத்தின் தலைவர் கதாபாத்திரம். விட்டோ கார்லியோன். நண்பர்களுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் அவர் காட் ஃபாதர். கார்லியோன் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து மாஃபியா குடும்பங்கள் அமெ‌ரிக்காவின் நிழல் உலக வியாபாரத்தை கட்டுப்படுத்தின.

Mario Puzo 1961ல் எழுதிய தி காட் ஃபாதர் நாவலை தழுவி இந்தப் படத்தை எடுத்தார் கப்போலா. படத்துக்கான திரைக்கதையை ம‌ரியோவும், கப்போலாவும் இணைந்து எழுதினர். இத்தாலியிலுள்ள கார்லியோன் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் விட்டோ கார்லியோன். இவரது தந்தை உள்ளூர் தாதா ஒருவருடனான மோதலில் கொல்லப்படுகிறார். அவரது சவ அடக்கத்தின் போது அதே தாதாவின் ஆட்களால் அவரது மூத்த மகனும் சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்த குடும்பத்தில் எஞ்சியிருப்பது தாயும், ஒன்பது வயது விட்டோ கார்லியோனும் மட்டுமே.

ஒன்பது வயது விட்டோ கார்லியோனால் எந்தப் பிரச்சனையும் வராது, அவனை ஒன்றும் செய்யாதீர்கள் என தாதாவிடம் முறையிடுகிறாள் விட்டோவின் தாய். மறுக்கிறார் தாதா. தனது உயிரைக் கொடுத்து தாய் மகனை காப்பாற்றுகிறாள். சிலரது உதவியினால் அமெ‌ரிக்காவுக்கு வந்து சேர்கிறான் சிறுவனான விட்டோ கார்லியோன்.

விட்டோ கார்லியோனின் இளமைப் பருவமும், அவர் படிப்படியாக அமெ‌ரிக்காவின் நிழல் உலகை கட்டுப்படுத்தும் டானாக உயர்வதும் காட் ஃபாதர் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. இதில் இளவயது விட்டோ கார்லியோனாக நடித்திருந்தவர் ராபர்ட் டி நீரோ.

முதல் பாகத்தில் போதை மருந்து வியாபாரம் செய்ய வருகிறவன், விட்டோ கார்லியோனிடம் (மார்லன் பிராண்டோ) நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை கேட்கிறான். போதை மருந்து வியாபாரம் செய்வது தெ‌ரிந்தால் அரசாங்கத்தில் உள்ள தனது நண்பர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என மறுக்கிறார் பிராண்டோ. இதனைத் தொடர்ந்து பிராண்டோ கடைவீதியில் வைத்து சுடப்படுகிறார். மருத்துவமனையில் அவரை கொலை செய்ய நடக்கும் சதியை முறியடிக்கிறான், கடற்படையில் வீரனாக இருக்கும் அவரது இளை மகன் மைக்கேல் (அல்பசினோ).

தொடர்ந்து நடக்கும் கேங் வா‌ரில் தனது மூத்த மகனை இழக்கிறார் பிராண்டோ. உடல்நிலை காரணமாக தனது அதிகாரத்தை இளையமகன் மைக்கேலிடம் ஒப்படைக்கிறார். பிராண்டோவின் வயோதிகம் பேரக் குழந்தையுடன் கழிகிறது. வீட்டில் உள்ள உருளைக்கிழங்கு தோட்டத்தில் பேரனுடன் விளையாடும்போது அவரது உயிர் பி‌ரிகிறது.

கேங்ஸ்டர் படங்களின் புதிய அத்தியாயம் தி காட் ஃபாதர் படத்திலிருந்து தொடங்குகிறது. கொலையை மட்டும் காட்சிப்படுத்தாமல் கொலைக்கான முகாந்திரம், மனநிலை, நிழல் உலக குடும்பங்களின் நிலைமை, அவர்களின் கொண்டாட்டங்கள், துக்கங்கள் என அனைத்தையும் நெருங்கி ஆராய்கிறது தி காட் ஃபாதர். விட்டோ கார்லியோன் கதாபாத்திரத்தை தனது அற்புதமான நடிப்பால் என்றும் அழியாத காவியமாக்கியிருந்தார் பிராண்டோ.

இந்தப் படத்தில் பிராண்டோவை நடிக்க வைப்பதற்காக ஏறக்குறைய ஒரு வருடம் காத்திருந்தார் கப்போலா. படத்தை தயா‌ரித்த பாராமவுண்ட் ஸ்டுடியோ, பிராண்டோ கார்லியோன் கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்கவில்லை. அன்று ஹாலிவுட், ஸ்டுடியோக்களின் அதிகார கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் அதிகார மையமாக ஸ்டுடியோக்கள் விளங்கின. இயல்பிலேயே கலகக்காரரான பிராண்டோ இந்த அதிகாரத்துக்கு ஒருபோதும் கட்டுப்பட்டதில்லை. இதன் காரணமாக பிராண்டோவை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அன்றைய எல்லா ஸ்டுடியோக்களும் மேற்கொண்டன.

ஒருவருட நீண்ட போராட்டத்துக்குப் பின் கப்போலாவின் கோ‌ரிக்கையை பாராமவுண்ட் ஏற்றது. அப்போதும் அது ஒரு நிபந்தனை விதித்தது. படப்பிடிப்புக்குமுன் பிராண்டோ மேக்கப் டெஸ்ட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும். அறிமுக நடிகர்களுக்குதான் படத்தில் நடிப்பதற்குமுன் மேக்கப் டெஸ்ட் வைப்பார்கள். பிராண்டோவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனையை பாராமவுண்ட் விதித்தது. அது எதிர்பார்த்தது போலவே இந்த நிபந்தனைக்கு பிராண்டோ ஒத்துக் கொள்ளவில்லை. கப்போலாவின் வேண்டுகோளை ஏற்று இறுதியில் பிராண்டோ மேக்கப் டெஸ்டுக்கு ஒத்துக் கொண்டார்.

ஸ்டுடியோவின் மேக்கப்மேனை தவிர்த்து தானே ஒரு மேக்கப்மேனை வரவழைத்து பஞ்சு உருண்டைகளை தாடையினுள் வைத்து கப்போலாவுக்காக காத்திருந்தார் பிராண்டோ. அவரது கெட்டப்பைப் பார்த்த ஸ்டுடியோ நிர்வாகிகளால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. பிராண்டோவை விட அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் யாருமில்லை என்பதை அந்த கெட்டப்பே அவர்களுக்கு உணர்த்தியது.

மார்லன் பிராண்டோ பிறந்தது அமெ‌ரிக்காவிலுள்ள நெப்ரஸ்காவில். வருடம் 1924 ஏப்ரல் 3ம் தேதி. அப்பாவின் மார்லன் பிராண்டோ என்ற பெயரையே மகனுக்கும் வைத்தனர். தாய், டோரதி ஜூலியா பென்னிபேக்கர். இவரொரு நடிகை. பிராண்டோவின் நடிப்பு மீதான காதல் அவரது அம்மாவிடமிருந்து தொடங்குகிறது.

பிராண்டோவின் 11வது வயதில் தாயும், தந்தையும் பி‌ரிகிறார்கள். அம்மா, மற்றும் பாட்டியுடன் அவரது இளமைப் பருவம் கழிகிறது. பிராண்டோவின் தாய் பெரும் குடிகாரர். அவரது குடிப் பழக்கம் பிராண்டோவை சிறு வயதில் மிகவும் பாதித்தது.

நாடகத்திலிருந்தே சினிமாவுக்கு வந்தார் பிராண்டோ. அவரது முதல் படம் தி மென். ஐம்பதுகளில் எலியா கசன் இயக்கத்தில் வெளியான எ ஸ்ட்‌‌ரீட் கார் நேம்டு டிஸையர், ஆன் தி வாட்டர் பிரெண்ட் ஆகிய திரைப்படங்கள் பிராண்டோவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. வாட்டர் ‌ப்ரெண்டில் பிராண்டோவின் மெத்தட் ஆக்டிங் தமிழக ரசிகர்களையும் ஆகர்ஷித்தது. அசோகமித்ரன் போன்ற தமிழ் இலக்கியவாதிகள் பிராண்டோவின் நடிப்பு குறித்து வியந்து எழுதியுள்ளனர்.

சமூக நீதிக்கான போராட்டங்களில் தன்னையும் விரும்பி இணைத்துக் கொண்டார் பிராண்டோ. அதிகாரம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்க்கும் குணம் அவ‌ரிடம் இருந்தது. அமெ‌ரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் மூன்றாம் குடிகளைப் போல் நடத்தப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார். ஒரு பேட்டியின் போது கேள்வியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் செவ்விந்தியர்களைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தா‌ர் பிராண்டோ.

திறமையான இயக்குனர்களை தேடிப் பிடித்து அவர்களின் படங்களில் நடித்தார் பிராண்டோ. பெர்னார்டோ பெர்ட்லூசியின் லாஸ்ட் டாங்கோ இன் பா‌ரிஸ் திரைப்படத்தில் நடித்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது, பெர்ட்லூசி படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு இன்றும் தெ‌ரியாது. ஆனால் ஏதோ முக்கியமான ஒன்றை அவர் சொல்லியிருக்கிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். இந்தப் படத்தில் அப்பட்டமான உடலுறவுக் காட்சிகள் இடம்பெற்றன. அவை மிகப்பெ‌ரிய சர்ச்சையை கிளப்பியது. இந்தக் காட்சிகளுக்காகவே பல நாடுகளில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

பெண்கள் விஷயத்தில் தானொரு ப்ளேபாயாக இருந்ததை பிராண்டோவே ஒப்புக் கொண்டிருக்கிறார். நாடகத்தில் நடிக்கும் போது, நாடகம் முடிந்ததும் பிராண்டோவைப் பார்ப்பதற்கு பெண்கள் மேடைக்கு பின்புறம் காத்திருப்பார்கள். தனது சுயச‌ரிதையில், அப்படி காத்திருக்கும் பெண்களில் மிக அழகானவள் நான் வீட்டிற்கு திரும்பும்போது என்னுடைய பைக்கின் பின்புறம் அமர்ந்திருப்பாள் என்று எழுதுகிறார்.

பிராண்டோவுக்கு மூன்று மனைவிகள். அவர்களுக்குப் பிறந்தவர்கள் போக மூன்று குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார். அவரது ஹவுஸ்கீப்பருடன் ஏற்பட்ட உறவில் பிறந்தவர்கள் மூன்றுபேர். மர்லின் மன்றோவுடனான இவரது உறவு பிரசித்திப் பெற்றது. தானொரு ஓ‌ரினச் சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தார் பிராண்டோ. இவையெல்லாம் அவர் ஒரு மோசமான நபர் என்ற பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில், எந்த ஒழுக்க நியதிகளுக்குள்ளும் கட்டுப்படாமல் சுதந்திரமாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயன்றார் பிராண்டோ. தனது செயல்பாடுகளை மறைத்து போலியான மதிப்பீடுகளை உருவாக்க அவர் விரும்பவில்லை. மேலும், தன்னைப் பற்றி எவ்விதமான மதிப்பீடுகள் உருவாவதையும் அவர் வெறுத்தார்.

தன்னைப் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் தனது அற்புதமான நடிப்புத் திறமையால் கடந்தவர் பிராண்டோ. இன்றைய ஹாலிவுட்டின் மிகப் பெரும் நடிகர்களான அல்பசினோ, ராபர்ட் டி நீரோ போன்றவர்கள் பிராண்டோவால் இத்துறையில் ஊக்கம் பெற்றவர்கள். ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் இறுக்கமான அதிகார மையத்தை உடைத்த முதல் கலைஞன் அவர். மைக்கேல் ஜாக்சனுடன் தனது மரணம் வரை நல்ல நட்பை பேணினார் பிராண்டோ.

அபி‌ரிதமான ரசிகர் செல்வாக்கு இருந்தபோதும் அவரது மனம் தடுமாறியதில்லை. தன்னை அளவுக்கதிகமாக நேசிக்கும் ரசிகர்கள் குறித்து பேசும்போது, ஒருவரை அளவுக்கதிகமாக நேசிப்பது என்பது அதே அளவுக்கு இன்னொருவரை வெறுப்பதுடன் தொடர்புடையது என்றார்.

நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்த மார்லன் பிராண்டோ 2004 ஜூலை ஒன்றாம் தேதி மரணமடைந்தார். க‌ட‌ந்த ஏப்ரல் 3ஆம் தேதி அவருக்கு 85 வது பிறந்தநாள்.

கருத்துரையிடுக

11 கருத்துகள்

  1. நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்த மார்லன் பிராண்டோ 2004 ஜூலை ஒன்றாம் தேதி மரணமடைந்தார். க‌ட‌ந்த ஏப்ரல் 3ஆம் தேதி அவருக்கு 85 வது பிறந்தநாள்

    பதிலளிநீக்கு
  2. நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்த மார்லன் பிராண்டோ 2004 ஜூலை ஒன்றாம் தேதி மரணமடைந்தார். க‌ட‌ந்த ஏப்ரல் 3ஆம் தேதி அவருக்கு 85 வது பிறந்தநாள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு!

    நுணுக்கமாக ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு