இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8

பல்வேறு சோதனைத் தொகுப்புகளுக்குப் பின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 தொகுப்பினை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புபவர்கள் www.microsoft.com என்ற இணைய முகவரியில் உள்ள தளத்தை அணுகலாம்.

இந்த பதிப்புயர்பாக்ஸ் பதிப்பு 3க்கு சரியான போட்டியைத் தருகிறது எனச் சொல்லலாம். அடிப்படை பிரவுசிங் மற்றும் சார்ந்த கூடுதல் வசதிகள் என்று பார்த்தால் டேப்களை சிறப்பான முறையில் கையாளுதல், எளிதான சர்ச் பார், பலவிதங்களில் கூடுதல் பயன்தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அட்ரஸ் பார், இணையத் தளங்களிலிருந்து நேரடியாகத் தகவல்களைத் தரும் பல டூல்கள் எனப் பலவற்றைக் கூறலாம். சென்ற ஜனவரியில் வெளியிட்ட சோதனைத் தொகுப்பிலிருந்து இது மாறுபட்டுள்ளது. இயங்கும் வேகம் கூடியுள்ளது. பல பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன.

இயங்கும் வேகம் கூடுதல் என்பது உண்மையே என்றாலும் இதனை மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இதற்கும் பயர்பாக்ஸ் தொகுப்பிற்கும் இடையே வே வித்தியாசம் அரை நொடிதான் இருந்ததாக ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர். வெவ்வேறு நாட்களில் ஒரே தளங்களை வெவ்வேறு நேரத்தில் டவுண்லோட் செய்து இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.


பிரவுசிங்கிற்குத் துணை செய்திடும் வகையில் பல முன்னேற்றமான வடிவமைப்புகள் பதிப்பு 8ல் தரப்பட்டுள்ளன. குறிப்பாக டேப்கள் அமைக்கப்படுவதனைக் கூறலாம். ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள தளத்தினுள்ளாக அதே பொருள் சார்ந்த இன்னொரு தளம் திறக்கப்பட்டால் அதன் டேப் தொடர்பான தளத்தின் டேப்பின் ஏற்கனவே திறக்கப்பட்ட டேப்பிற்குள்ளாக வலது ஓரமாக அமைக்கப்படுகிறது.


இரண்டிற்கும் ஒரே வண்ணம் அமைக்கப்படுகிறது. இதனால் பிரவுசிங் பணி எளிதாகிறது. எடுத்துக் காட்டா ஒரு பொருள் குறித்து கட்டுரை எழுதுகையில் குறிப்பிட்ட பொருள் சார்ந்த தளங்கள் அனைத்தும் ஒரே டேப்பில் அமைக்கப்படுவதால் மாற்றி மாற்றி தளங்களைப் பார்வையிட்டு பொருள் தேட நாம் வரிசையாக பின் நோக்கியோ முன் நோக்கியோ செல்ல வேண்டியதில்லை. குரூப் செய்யப்படுவதாலும் குறிப்பிட்ட டேப்களை ஒரே வண்ணத்தில் அமைவதாலும் தளங்களைத் தேடும் பணி எளிதாகிறது.


இதில் இன்னும் ஒரு வசதியும் உள்ளது. திறக்கப்பட்ட ஒரு புதிய தளம் ஏற்கனவே திறக்கப்பட்ட தளம் சார்ந்தது என நாம் கருதினால் புதிய தளத்தின் டேப்பை மவுஸ் கர்சர் மூலம் இழுத்து வந்து சார்ந்த டேப்பினுள் விட்டுவிட்டால் அதன் உள்ளாக இதுவும் அமைந்து விடும். பின் இது தேவை இல்லை என உணர்ந்தால் இதனை விலக்கியும் வைக்கலாம். வேலை முடிந்து போனால் மொத்த தளங்களையும் மூட இந்த டேப்பினை ஒரு குரூப்பாக மூடிவிடலாம். இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு அனைத்து வசதிகளையும் தருகிறது.


இவ்வகையில் இன்னொரு வசதியும் தரப்படுகிறது. அண்மையில் இறுதியாக மூடப்பட்ட தளத்தை மீண்டும் திறக்க பயன்படுத்துகிறோம். இதற்குப் பதிலாக அண்மையில் திறக்கப்பட்ட அனைத்து தளங்களின் டேப்களையும் பார்த்து அதில் நமக்குத் தேவையான தளத்தை மீண்டும் திறக்கும் வசதி இப்போது தரப்பட்டுள்ளது. எந்த ஒரு டேப்பிலும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Recently Closed Tabs தேர்ந்தெடுத்து பின் அதில் நாம் விரும்பும் தளத்திற்கான டேப்பில் கிளிக் செய்திடலாம்.

புதிய டேப்கள் திறக்கப்படுகையில் அதில் இவ்வகையான பல்வேறு தொடுப்புகள் (Links) தரப்படுகின்றன. ஹிஸ்டரி பட்டியலில் சிக்காமல் பிரவுசிங் பணி மேற்கொள்ள In Private Browsing பிரிவு தரப்படுகிறது. இதில் கிளிக் செய்து பிரவுசிங் மேற்கொண்டால் நாம் பார்க்கும் தளங்களின் பட்டியலை அடுத்தவர் அறிய முடியாது. (இது குறித்து கீழே தகவல் தரப்பட்டுள்ளது). "Accelerator" என்றும் ஒரு பிரிவு உள்ளது. இதன் மூலம் இணைய தளங்களில் நமக்குத் தேவைப்படும் பொருளை வேகமாகப் பெற முடிகிறது.

மேலும் இன்டர்நெட் சைட்டிலிருந்தே இமெயில் அனுப்பும் வசதிக்கென ஒரு பிரிவும் உள்ளது. ஒவ்வொரு டேப்பும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால் ஒரு டேப்பில் உள்ள தளம் கிராஷ் ஆனால் பிரவுசரே மூடப்படும் நிகழ்வெல்லாம் இனி நடக்காது.

அட்ரஸ் பாரிலும் புதிய மாற்றங்களும் வசதிகளும் தரப்பட்டுள்ளன. இந்த பார் தளங்களின் முகவரி அடிக்க மட்டுமல்ல; பயர்பாக்ஸ், குரோம் பிரவுசர்களில் உள்ளது போல இதனை தேடுதல் செயல்பாட்டிற்கான விண்டோவாகவும் கொள்ளலாம். ஒரு சிறிய சொல்லை டைப் செய்தவுடனேயே அது சார்ந்த தளங்களும் பட்டியலிடப்படும். அதே நேரத்தில் நாம் ஏற்கனவே சென்று பார்த்த சார்ந்த தளங்களும் பட்டியலிடப்படும்.



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் மிகச் சிறந்த வசதியாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அது Accelerators and Web Slices என்னும் வசதி ஆகும். இதன் மூலம் இணைய தளங்களைத் திறந்து பார்க்காமலேயே அதிலிருந்து தகவல்களைப் பெறும் வசதி தரப்பட்டுள்ளது. இன்னொரு தளத்திலிருந்து தகவல்கள் தற்போது பார்க்கும் தளப் பக்கத்திலேயே தரப்படுகிறது. இதில் ஒரு சிறிய பிரச்சினை எனக்கு ஏற்படுகிறது. கூகுள் கியர்ஸ் ஏற்கனவே பதியப்பட்ட கம்ப்யூட்டர்களில் இந்த வசதி எடுபடவில்லை.

பாதுகாப்பு மற்றும் பெர்சனல் வசதிகள்: இந்த புதிய பிரவுசர் பதிப்பில் பல பாதுகாப்பு மற்றும் பெர்சனல் வசதிகள் தரப்பட்டுள் ளன. இதில் பலரின் கவனத்தைக் கவர்ந்தது InPrivate Brosing வசதிதான். இந்த வழியாக பிரவுசிங் மேற்கொள்கையில் நீங்கள் பார்க்கும் தளங்கள் ஹிஸ்டரி பட்டியலில் சேராது. அவை சார்ந்த குக்கீஸ் பைல்கள், தற்காலிக இன்டர்நெட் பைல்கள், படிவங்கள் மற்றும் அதில் தந்த விபரங்கள், யூசர் நேம், பாஸ்வேர்ட் என எதுவும் பதியப்படாது. அந் தளத்தை மூடுகையில் எந்த சுவடும் இன்றி அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.


இதைக் காட்டிலும் மிக முக்கியமான வசதி கெடுதல் தரும் புரோகிராம்களைத் தடுக்கும் malware protection வசதியாகும். ஏற்கனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7ல் தரப்பட்டிருந்த antiphishing filterI இன்னும் நுண்மையாக வடிவமைத்து Smart Screen filter என்ற பெயரில் மைக்ரோசாப்ட் தந்துள்ளது.

பிஷ்ஷிங் விஷயங்களைத் தடுப்பதுடன் அத்தகைய தளங்களை அணுக முயற்சிக் கையில் இந்த தளத்தில் மால்வேர் எனப்படும் கெடுதல் சமாச்சாரங்கள் உள்ளன என்ற எச்சரிக்கையினை SmartScreen filter தருகிறது.

மால்வேர் பைல்களிலிருந்து இந்த பிரவுசர் தரும் பாதுகாப்பினை எஸ்.எஸ். லேப்ஸ் நிறுவனம் இதனையும் பயர்பாக்ஸ் 3.0.7, சபாரி 3, குரோம் 1.0.154, ஆப்பரா 9.64 மற்றும் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 ஆகிய தொகுப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது. பதிப்பு 492 மால்வேர் பைல்களில் 64% ஐத் தடுத்தது. பயர்பாக்ஸ் 30% மட்டுமே தடுத்தது. ஆப்பிள் சபாரி 24% தடுத்தது. கூகுள் குரோம் இந்த வரிசையில் நான்காவதாக வந்து 16% மட்டுமே தடுத்தது.


ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 தொகுப்புகள் முறையே 5% மற்றும் 4% மட்டுமே தடுத்தன. இது பாதுகாப்பே அல்ல என்று என்.எஸ்.எச். லேப்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஆய்வுக் கூடம் தந்திருக்கும் ஆய்வு அறிக்கையை இந்த முகவரியில் உள்ள தளத்திலிருந்து பி.டி.எப். பைலாக டவுண்லோட் செய்து படிக்கலாம்.

அடுத்ததாக நம் கவனத்தைக் கவர்வது

InPrivate Filtering என்னும் வசதியாகும். பொதுவாக இணைய தளங்களை வடிவமைப்பவர்கள் அவர்கள் தளத்தை நீங்கள் பார்க்கையில் உங்களுடைய பிரவுசிங் ஆர்வம் எதில் உள்ளது என்று அறிந்து பதிந்து கொள்வார்கள். இது உங்களை அறியாமலேயே நடக்கும். அடுத்த முறை நீங்கள் இந்த தளத்திற்குச் செல்கையில் நீங்கள் கேட்காமலேயே உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இயங்கும் தளங்களுக்கு தொடுப்புகள் (Links) தரப்படும்.


இது போல தர்ட் பார்ட்டி தளங்களுக்குத் தகவல் தரும் முயற்சி InPrivate Filtering மூலம் தடை செய்யப்படுகிறது. நீங்கள் இதனை அனுமதித்தால் ஒழிய பார்த்துக் கொண்டிருக்கும் தளங்கள் உங்களைப் பற்றிய குறிப்புகளை மற்ற தளங்களுக்கு அனுப்ப முடியாது.

இந்த வசதி செயல்பட்டுக் கொண்டிருப்பதனை பிரவுசரின் கீழாக வலது புறத்தில் உள்ள பூட்டு போன்ற தடை அடையாளத்தின் மேலாக அம்புக்குறி போன்ற ஐகான் தோன்றுவதை வைத்து கண்டு கொள்ளலாம். இந்த ஐகான் சாம்பல் நிறத்தில் வெளிறிய வண்ணத்தில் இருந்தால் இது செயல்படவில்லை என்று பொருள். அது தெளிவான வண்ணத்தில் இருந்தால் அது இயங்கிக் கொண்டிருப்பதனைக் காட்டுகிறது.


இயங்காமல் இருப்பின் இதனை இயக்க Safety>InPrivate Filtering எனத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். அல்லது Ctrl Shift F என்ற கீகளை அழுத்துவதன் மூலம் இயக்கலாம். இந்த செயல்பாட்டினை நீங்கள் முன் கூட்டியே செட் செய்தும் வைக்கலாம். அந்த ஐகானின் வலது பக்கம் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் "Automatically block" ”அல்லது "Choose content to block என்ற இரண்டில் நீங்கள் விரும்பும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் கிளிக் ஜாக்கிங் என்னும் கெடுதல் வேலை பல தளங்களில் உள்ளது. அதாவது ஏதாவது ஒரு பட்டனை சில தகவல்களுக்காக கிளிக் செய்யும்படி தளத்தில் தரப்பட்டிருக்கும். ஆனால் கிளிக் செய்ய வேண்டிய அந்த பட்டனின் கீழாக வேறு ஒரு பட்டன் தொடுப்பாக இருக்கும். கிளிக் செய்தவுடன் உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருடும் கட்டுப்பாட்டு சாதனங்கள் இயக்கப்பட்டு நீங்கள் கைதியாக்கப்படுவீர்கள். இதனை "clickjacking"என அழைக்கின்றனர். தொழில் நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இதனை crosssite scripting attacks என அழைக்கலாம். இந்த முயற்சியை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 தடுக்கிறது.

பொதுவாக குக்கிகள் நன்மை தரும் செயல்களுக்காகவே அமைக்கப்படுகின்றன. நாம் தளங்களுக்குத் தர வேண்டிய தகவல்களை நினைவில் வைத்து மீண்டும் அந்த தளங்களுக்குச் செல்கையில் அவற்றை மீண்டும் கேட்டுப் பெறாமல் விரைவாக இயங்க இந்த குக்கிகள் உதவிடுகின்றன.


இதே போர்வையில் சில கெடுதல் விளைவிக்கும் குக்கிகளும் அமைக்கப்பட்டு நம் பெர்சனல் தகவல்கள் திருடப்படுகின்றன. அப்படியானால் அவற்றை மட்டும் நாம் அழிக்க முடியாதா? என்ற கேள்வி வரும். இதுவரை அவ்வாறு பிரித்து அழிக்க முடியவில்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் பிற பிரவுசர்களில் இந்த வசதி தரப்படவில்லை. அழித்தால் அனைத்து குக்கீகளும் அழிந்தன. இல்லை எனில் அனைத்தும் தங்கின.

தேவையான குக்கிகளை வைத்துக் கொண்டு தேவையற்றதை அழிக்கும் வசதி பதிப்பு 8ல் இது தரப்பட்டுள்ளது. Delete Browsing History என்னும் திரையில் இதற்கான வசதி தரப்படுகிறது. நீங்கள் வைத்துக் கொள்ள விரும்பும் குக்கிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்து குக்கிகளையும் நீக்கலாம்.


இதற்கு முதலில் Safety> Delete Browsing History என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இந்த தேர்விற்கு Ctrl Shift Del என்ற கீகளையும் பயன்படுத்தலாம். இங்கு Preserve Favorites Web site data என்ற பிரிவில் எந்த வெப் சைட் எடுத்துக் கொண்டுள்ள டேட்டாவினை, அதாவது உருவாக்கிய குக்கிகளை, வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறீர்களோ அவற்றிற்கு முன்னால் உள்ள கட்டங்களில் உள்ள டிக் அடையாளத்தை அமைத்துவிடவும். மற்றவை நீங்கள் அழித்திட கட்டளை கொடுக்கையில் அழிக்கப்படும்.

சில வேளைகளில் இன்டர்நெட் வெப்சைட்டின் முகவரி மிகவும் நீளமாக இருக்கும். குழப்பம் தரும் வகையில் சில எழுத்துக்களும் இருக்கும். நமக்கு இது எந்த தளத்தைக் குறிக்கிறது என்ற சந்தேகம் வரும். இந்த பிரவுசரில் தளத்தின் முதன்மைப் பெயர் மட்டும் மாறுபட்ட பின்னணியில் காட்டப்படும். மற்றவை கிரே கலரில் இருக்கும்.


சர்ச் பார் இயங்குவதில் பெரிய மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. தளங்களை சிறிய அளவில் பிரிவியூ செய்து, தேவைப்பட்டால் செல்லும் வகையில் இவை இயங்குகின்றன. உங்களுடைய தேடுதல் சொற்களுக்கேற்ப சிறிய தம்ப் நெயில் படங்களை சர்ச் புரவைடர் தரலாம். தேடுதல் சொற்களை டைப் செய்தவுடன் அந்த சொல் சார்ந்த தளங்களையும் சர்ச் புரவைடர் தரலாம். சர்ச் பார் பொதுவாக ஒன்று தரப்படுகிறது. அதன் கீழாக அனைத்து சர்ச் புரவைடர்களின் ஐகான்களும் தரப்பட்டுள்ளன. தேடுதல் சொற்களை டைப் செய்து விருப்பப்படும் சர்ச் இஞ்சினில் தேட கட்டளை கொடுக்கலாம்.


சர்ச் பாக்ஸில் "Find on This Page" என்ற வசதி இணைக்கப் பட்டுள்ளது. இதன்படி ஒரு தேடல் சொல்லை சர்ச் பாக்ஸில் டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பின் மீண்டும் சர்ச் பாக்ஸில் கிளிக் செய்து பின் Find கிளிக் செய்கிறீர்கள்.

இப்போது கிடைக்கும் இணையப் பக்கத்தில் நீங்கள் தேடுதலுக்காக டைப் செய்த சொல் அந்தப் பக்கத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவை அனைத்தும் மஞ்சள் வண்ணத்தில் கிடைக்கும். "Find on This Page" டூல் பார் சர்ச் பாக்ஸிலேயே கிடைக்கிறது.

பல இணைய தளங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7ல் இயங்கக் கூடிய தன்மையுடன் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய தளங்களுக்காக அவை இயக்கப்படுகையில் நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7ஐ இயக்குவது போன்ற காட்சி காட்டப்படுகிறது. இது Compatibility Viewஎன அழைக்கப்படுகிறது. இது போன்ற தோற்றம் கிடைக்கையில் அந்த டேப்பில் சிறிய மஞ்சள் நிற பலூன் டிப் தோன்றுகிறது.


Compatibility View தோன்றக் கூடிய தளங்களை நீங்கள் அணுக இருக்கிறீர்கள் என்பது அதே போல அட்ரஸ் பாரின் வலது பக்கத்தில் அப்பக்கத்தின் சிதைந்த ஐகான் ஒன்று தோற்றமளிக்கிறது. இதனை உணர்ந்து அதில் கிளிக் செய்தால் இந்த வியூ கிடைக்கிறது. இதைப் போன்ற ஒரு தளத்திற்கு ஒரு முறை இந்த வியூவில் சென்றுவிட்டால் பதிப்பு 8 அதனை நினைவில் கொண்டு அடுத்த முறை தானாக Compatibility View வில் இணையப் பக்கத்தினைக் காட்டுகிறது. ஒவ்வொரு முறையும் ஐகானில் கிளிக் செய்திடத் தேவையில்லை.


மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை அறிமுகப்படுத்துகையில் இந்த பிரவுசர் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 தொகுப்பு மட்டுமின்றி மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அதிக வேகமாக இயங்குவதாக அறிவித்துள்ளது. இதனை ஒவ்வொருவரும் தங்கள் பிரவுசிங் அனுபவத்திலிருந்துதான் உறுதி செய்திட வேண்டும். டேப்களைக் கையாளுதல், சர்ச் பாக்ஸ் கூடுதல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பதிப்பு 8 சிறந்ததுதான். இந்தப் பட்டியலில் பயர்பாக்ஸில் இல்லாத ஹிஸ்டரிக்குச் செல்லாத தனி நபர் பிரவுசிங்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். மால்வேர் பைல்களிருந்து பாதுகாப்பு, வெப் ஸ்லைசஸ் மற்றும் ஆக்ஸிலரேட்டர் ஆகியவையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகள் அமைக்க வழங்கும் வசதியை மைக்ரோசாப்ட் தன் பிரவுசர்களுக்கு வழங்கவில்லை என்பது என்றைக்கும் ஒரு குறையே.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 அண்மைச் செய்தி

இரு வாரங்களுக்கு முன் வெளியான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக வசதிகள் கொண்ட பிரவுசர் என அனைவரும் பாராட்டுகின்றனர். புதியதாக 2.59 சதவிகிதத்தினர் இதனைப் பயன்படுத்த முன்வந்தனர். இதனைப் பயன்படுத்தியவர்கள் பலரும் இதனால் கவரப்பட்டுள்ளனர் என்று அவர்களின் பிளாக்குகளில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒரு சிலர் மீண்டும் அவர்கள் பயன்படுத்திய பழைய பிரவுசர்களுக்கே திரும்பி விட்டதாகத் தெரிகிறது. தற்போது இதனைப் புதியதாகப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 1.85 சதவிகிதம் என்று அறியப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமே எங்கள் பிரவுசர் என்று முடிவெடுத்தவர் களில் சிலருக்கு பதிப்பு 8 திருப்தியாக இல்லாததால் பதிப்பு 7க்கே மீண்டும் சென்று விட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும் மொத்த இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 67 சதவிகிதத்தினர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரையே பயன்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து 22 சதவிகிதத்தினர் பயர்பாக்ஸ் பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிலிருந்து பயர்பாக்ஸ் பிரவுசருக்கு மாறுபவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனைத் தடுக்கும் வகையில் தங்களது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 இருக்கும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இது நிறைவேறுமா என்று இனிமேல் தான் பார்க்க வேண்டும். சில பிரச்சினைகளும் எடுத்துச் சொல்லப்படுகின்றன. வெப்சைட்டுகளிலிருந்து பட ங்களை பிரிண்ட் செய்திட காப்பி செய்தால் பைல் சைஸ் 4 ஜிபியாக அமைகிறது.

கருத்துரையிடுக

2 கருத்துகள்