நடிகைகளின் ஆடையும் போலி கலாச்சாரவாதிகளும்!

நடிகைகள் அளவிற்கு அவர்கள் அணியும் ஆடைகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. சரியாகச் சொல்வதென்றால், ஆடையை முன்னுறுத்தி சர்ச்சைக்குள்ளான நடிகைகளே அதிகம்.

ஆடைகள் என்று வரும்போது, திரையில் அவர்கள் அணிந்துவரும் ஆடைகளை விட, நிஜத்தில் அவர்கள் அணியும் ஆடைகளே பிரச்சனையின் ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது.

பொது நிகழ்ச்சியில் மினி ஸ்கர்ட்டில் வந்ததற்காக நமிதா, ஸ்ரேயா தொடங்கி மல்லிகா ஷெராவாத் வரை பலர் சர்ச்சைக்குள்ளாயினர். சிலர் மீது கலாச்சார மீறல் வழக்கும் தொடரப்பட்டது.

மேலோட்டமான பார்வையில் இது இயல்பான நிகழ்வாகத் தோன்றும். ஆனால், ஆடை குறித்த நமது சமூகப் பார்வை, அதன் பின்னுள்ள அரசியல் சிக்கலானது.

நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் அணிந்துவரும் உடை சிக்கனமாக, ஆபாசமாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதனை முன்வைப்பவர்கள் இரு வகையினர்.

முதல் வகையினர் நடிகைகளின் உடைகளில் மட்டும் கவனம் குவிப்பவர்கள் அல்லர். உலகமயமாக்கல் மற்றும் நுகர்வு கலாச்சாரத்தால் தமிழர்களின் அடைளாயங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் இன்னபிற அழிந்து வருவதில் நிஜமான கவலை கொண்டவர்கள். நடிகைகளின் ஆடை குறைப்பு இவர்களின் கலாச்சார மீட்பு அரசியலின் ஒரு பகுதி.

இரண்டாம் வகையினர், அழிந்துவரும் தமிழர் அடையாளங்கள் குறித்து எந்த கவலையும், புரிதலும் இல்லாதவர்கள். விளம்பரம் ஒன்றே இவர்களின் இலக்கு. நடிகைகளை விமர்சிப்பதன் மூலம் கிடைக்கும் விளம்பர வெளிச்சத்தில் உயிர் வளர்க்கும் கலாச்சார போலிகள் இவர்கள்.

திரையில் நடிகைகளின் அரைகுறை நிர்வாணத்தை ரசித்துக் கொண்டே, பொது இடங்களில் அவர்களின் கால்வாசி நிர்வாணத்துக்கு முதலைக் கண்ணீர் வடிப்பவர். தங்களை தமிழ் கலாச்சார காவலர்களாக காட்டிக் கொண்வதே இவர்களின் ஒரே நோக்கம்.

துரதிர்ஷ்டம் என்னவென்றால், இரண்டாம் வகையினரின் கூறுகள் இந்த சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் தோலிலும் மறைந்து கிடக்கிறது. இந்த ஆணாதிக்க கூறுகள் பெண்களிடத்தும் காணக்கிடப்பதை துரதிர்ஷ்டம் அன்றி வேறென்ன சொல்ல!

சிவாஜி படவிழாவில் குட்டைப் பாவாடை (ஸ்க்ரிட்) அணிந்து வந்த ஸ்ரேயா, கால்மேல் கால்போட்டு அமர, பார்வையாளர் பகுதியிலிருந்து பெரும் கூச்சல் கிளம்பியது. முதல்வர், சூப்பர் ஸ்டார் போன்றவர்களின் முன்னால் ஒரு நடிகை கால் மேல் கால் போட்டு அமர்வதா?
ஸ்ரேயாவின் சின்ன உடையை இயக்குனர் ஷங்கர் கண்டித்ததாக மறுநாள் பத்திரிக்கைகள் எழுதின.

என்ன வேடிக்கை! ஸ்ரேயா என்ற நடிகைக்கு ஜாக்கெட் கூட தராமல், உள்ளாடையுடன் ஒரு பாடல் முழுக்க ஆடவிட்டவர் ஷங்கர். அதைவிட நாகரிகமான உடையில்தான் விழாவுக்கு வந்திருந்தார் ஸ்ரேயா. பிறகு ஏன் கண்டிப்பு?

இதற்கு இரண்டு காரணங்கள் கூறமுடியும். நடிகை என்பவள் கேளிக்கை பொருள். திரையில் அவள் எந்தவிதமான ஆடையும் அணியலாம், ஆடிப்பாடலாம், ஆண்களை மகிழ்விக்கலாம். திரையைவிட்டு வெளிவரும் போது அவள் பெண்.

இரண்டாவது காரணம் வியாபாரம். ஸ்ரேயா அரைகுறை உடையில் திரைப்படத்தில் தோன்றினால் நாலு பேர் பார்க்க வருவாக்ரள், கல்லாவில் காசு நிறையும். அதே அரைகுறை உடையில் பொது நிகழ்ச்சியில் தோன்றில் 'ரசிகன்' இலவசமாகவே பார்த்து ரசிப்பான். இலவசமாக கிடைக்கும்போது அவன் ஏன் காசு கொடுத்து திரையரங்குக்கு வரவேண்டும். இவர்கள் படத்தை பார்க்க வேண்டும்!

ஆக, என்னுடைய படத்தில் நான் சொல்லும் காட்சியில் நான் சொல்லும் உடையில் நடிப்பதே உன் வேலை. பொது இடங்களில் ஆச்சாரமாகவே வரவேண்டும்.

நடிகைகள் அணிந்துவரும் உடைக்கும் இதுபோன்ற கலை வியாபாரிகளும், நுகர்வு (விளம்பர) உலகின் வணிக நோக்கமே காரணம்.

மல்லிகா ஷெராவாத்துக்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க மூன்று கோடி கொட்டி கொடுத்ததும், நமிதா முன்னணி நடிகைகளின் படங்களில் எல்லாம் நடிப்பதற்கும் அவர்கள் திறமையா காரணம்? கவர்ச்சியான உடம்பு. அந்த உடம்பே காரணம்! உடலே உனக்கு மூலதனம் என மல்லிகா ஷெராவத்துக்கும், நமிதாவுக்கும், இன்னபிற நடிகைகளுக்கும் கற்றுக் கொடுத்தது நாம் மேலே பார்த்த வியாபாரிகளும், நுகர்வு கலாச்சாரமும்தான்.

நடிகைகளின் உடைகள் குறித்து கவலைப்படும், வழக்கு தொடரும் கலாச்சாரவாதிகள் உண்மையில் போர் தொடுக்க வேண்டியது இந்த வியாபாரிகளுக்கு எதிராகத்தான்.

என்ன செய்வது... அதற்கான திராணி இந்த போலி கலாச்சாரவாதிகளுக்கு இல்லாததோடு, அவர்களின் நோக்கமும் அதுவல்ல என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய பிரச்சனை!

கருத்துரையிடுக

2 கருத்துகள்