ஐ.பி.எல் : வெல்லப் போவது யாரு ????

பல்வேறு விமர்சனங்களுக்கும், வரவேற்புகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கிரிக்கெட் வர்த்தக குரு' என்று அழைக்கப்பட்ட லலித் மோடியின் உருவாக்கமுமான .பி.எல். ருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியுள்ளது.

கடந்த முறை இளம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்த ஐ.பி.எல். கிரிக்கெட், இந்த முறை பாதுகாப்பு காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது, கோடை விடுமுறை மாலை வேளைகளை ஜாலியாக கிரிக்கெட் மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகளை கண்டு களிப்பதன் மூலம் செலவிடவிருந்த இந்திய ரசிகர்களுக்கு போட்டிகள் இங்கு நடைபெறாதது ஒரு இழப்புதான்.

இருப்பினும் தொலைக்காட்சியில் இந்த போட்டிகளைக் காண இந்த முறையும் ரசிகர்கள் ஆவலாய் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த முறை கூடுதலாக சேர்க்கப்பட்ட கெவின் பீட்டர்சன், பிளின்டாஃப், காலிங்வுட், மற்றும் பிற இந்திய, ஆஸ்ட்ரேலிய இளம் வீரர்கள் கூடுதல் விருந்தளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அணிகளைப் பொறுத்த வரை கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்து தொடர் நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சனும், அதிக விக்கெட்டுகளைக் வீழ்த்திய பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீரும் இல்லாதது இழப்புதான். இருப்பினும் ஷேன் வார்ன் என்ற ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் மூளை, இருக்கும் வீரர்களை வைத்துக் கொண்டு தனது சாம்பியன் தகுதியை நிலை நாட்டப் பாடுபடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் இருப்பது ஷேன் வார்னுக்கு ஒரு மிகப்பெரிய பக்க பலம். கடந்த முறை துவக்கத்தில் களமிறங்கி 'யார் இவர்' என்று மூக்கில் விரல் வைக்க வைத்த ஸ்வப்னில் அஸ்னோட்கர், யூசுஃப் பத்தான், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்டின் லாங்கர், டிமிட்ரி மஸ்கரெந்காஸ் போன்ற வீரர்கள் பேட்டிங்கிலும், பந்து வீச்சில் ஷேன் வார்ன், சித்தார்த் திரிவேதி, ஷான் டெய்ட், முனாஃப் படேல் ஆகியோர் உள்ளனர். எனவே இந்த அணியை சாதரணமாக எடை
போட முடியாது.

இந்த அணியை எதிர்த்துப் போட்டியிடும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி இந்த முறை கடந்த முறை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிக்கு கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அணிக்கு புதிய கேப்டன் கெவின் பீட்டர்சன். ஏற்கனவே தென் ஆப்பிரிக்க ஆட்டக் களங்களில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கரான இவர் இந்த முறை நிச்சயம் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை தனது புதிய முறை பேட்டிங் உத்திகளால் வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

பீட்டர்சனுக்கு பக்க பலமாக மார்க் பௌச்சர், ஜாக் காலிஸ், ராகுல் திராவிட், ராபின் உத்தப்பா, ராஸ் டெய்லர், ஜெஸ்ஸி ரைடர் ஆகிய பேட்ஸ்மென்கள் உள்ளனர். இந்த அணியின் மிகப்பெரிய அம்சம் தென் ஆப்பிரிக்க களங்களில் அபாயமானவரான டேல் ஸ்டெய்ன் இருப்பதுதான்.தனது 4 ஓவர்களில் எந்த ஒரு பலமான பேட்டிங் வரிசையையும் நிலை குலையச் செய்யும் திறமை உடையவர் இவர்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் இந்த முறை அங்கு திணறுவார்கள் என்று நமது 'கிரிக்கெட் பண்டிதர்கள்' தங்களது கருத்து முத்துக்களை ஏற்கனவே உதிர்த்து விட்டனர். இது, பழைய பாணி கிரிக்கெட்டை தனது வாழ்நாள் முழுக்கவும் விளையாடி ஓய்ந்து போய் இன்று நல்ல சம்பளத்தில் தொலைக்காட்சி சானல்களில் சிறப்பு வர்ணனையாளர்களாக பணியாற்றும் ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்சுரேக்கர் உள்ளிட்ட சிலரது அபத்தமான கருத்தாகும்.

முதன் முதலாக, இருபதுக்கு 20 போட்டிகள் பற்றிய எந்தவித திட்டமுமின்றி, புத்தம் புதிய அணித் தலைவருடன், மிகவும் புத்தம் புதிய அணியை அழைத்துக் கொண்டு சென்ற தோனி தலைமை இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன்களாகத் திகழ்வது தென் ஆப்பிரிக்க மண்ணில் நடந்தேறியதுதான் என்பதை இந்த பண்டிதர்கள் மறந்து விட்டனர்.

மேலும் முன்பு போல் மும்பை, சென்னை, பெங்களூரூ, கொல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களிலிருந்து முறையான பயிற்சி பெற்று மாவட்டம், பல்கலைக் கழகம், பிறகு ரஞ்சி, துலீப் என்று விளையாடி இந்திய அணிக்குள் நுழையும் வீரர்கள் தற்போது இல்லை.

நகரங்களுக்கு வெளியே புறநகர் மற்றும் கிராமங்களிலிருந்தும், தெருக்களிலிருந்தும் ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு விளையாட வந்த வீரர்கள் அதிகம். உதாரணமாக ஒரு வீரரை குறிப்பி வேண்டுமென்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கானை குறிப்பிடலாம். இவரைப் பற்றி ஏற்கனவே ஷேன் வார்ன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இவர் மரமறுக்கும் ஏழை தொழிலாளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவர்களிடம், இந்த ஆட்டக்களம், இதில் இப்படித்தான் பேட்டிங் செய்யவேண்டும், இப்படித்தான் பந்து வீச வேண்டும் என்றெல்லாம் எந்த ஒரு 'நாற்காலிப் பயிற்சியாளரும்' சுலபத்தில் கூறிவிடமுடியாது.

இந்த விதத்தில்தான் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் உருவாக்கம் இந்திய கிரிக்கெட் அணியை அதன் சமீபத்திய உச்சத்திற்கு கொன்டு சென்றுள்ளது. தோனி, சுரேஷ் ரெய்னா, யூசுஃப் பத்தான், முனாஃப் படேல் அல்லது பழனி அமர்நாத், ஸ்வப்னில் அஸ்னோட்கர், ரோஹித் ஷர்மா, ராபின் உத்தப்பா, இஷாந்த் ஷர்மா என்று யாரை எடுத்துக் கொண்டாலும் பெரு நகரங்களிலிருந்து வந்தவர்களல்லர்.

இவர்கள் தங்களுக்கென்ற தனித்த பாணியை கடைபிடிப்பவர்கள். இள வயது முதல் தெரு கிரிக்கெட்டிலிருந்து துவங்கி சவாலான கிரிக்கெட் போட்டிகளை சந்தித்தவர்கள். இவர்களிடம் அந்தக் கால கிரிக்கெட் பண்டிதர்களின் எந்த ஒரு கோட்பாடும் செல்லுபடியாகாது.

எனவே 'இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் திணறுவார்கள்' என்று கூறுபவர்கள் தாங்கள் விளையாடிய காலத்தில் தாங்கள் திணறியதன் ஒரு நீட்சியாக இதனை கூறுகின்றனர் என்று நாம் கூற முடியும்.

இன்னமும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளைக் கூட விளையாடாத பல புதுமுக இளம் திறமைகள் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பல்வேறு அணிகளில் விளையாடுகின்றனர்.

இவர்களில் பலர் தோனி மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தால் உடனடியாக இந்திய அணியில் இடம்பெறும் ஒரு அமைப்பு இங்கு சமீப காலமாக ஏற்பட்டுள்ளது. எனவே ஐ.பி.எல். கிரிக்கெட் முடிந்தவுடன் அடுத்த படியாக இங்கிலாந்தில் நடைபெறும் இருபதுக்கு 20 இரண்டாவது உலகக் கோப்பை போட்டிகளுக்கு மேலும் சில சிறந்த வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என்று உறுதியாக கூற முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்