TopBottom

நாளைய ஐ.பி.எல் - ஒரு பார்வை

எழுதியவர் : Karthikan Karunakaran 17 April 2009

பல்வேறு விமர்சனங்களுக்கும், வரவேற்புகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கிரிக்கெட் வர்த்தக குரு' என்று அழைக்கப்பட்ட லலித் மோடியின் உருவாக்கமுமான ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் நாளை தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது.

நாளை இந்திய நேரம் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியையும், இரவு 8 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் கடந்த முறை சாம்பியனான ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கெவின் பீட்டர்சன் வருகையால் புதிய உத்வேகம் பெற்றுள்ள பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.

கடந்த முறை இளம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்த ஐ.பி.எல். கிரிக்கெட், இந்த முறை பாதுகாப்பு காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது, கோடை விடுமுறை மாலை வேளைகளை ஜாலியாக கிரிக்கெட் மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகளை கண்டு களிப்பதன் மூலம் செலவிடவிருந்த இந்திய ரசிகர்களுக்கு போட்டிகள் இங்கு நடைபெறாதது ஒரு இழப்புதான்.

இருப்பினும் தொலைக்காட்சியில் இந்த போட்டிகளைக் காண இந்த முறையும் ரசிகர்கள் ஆவலாய் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த முறை கூடுதலாக சேர்க்கப்பட்ட கெவின் பீட்டர்சன், பிளின்டாஃப், காலிங்வுட், மற்றும் பிற இந்திய, ஆஸ்ட்ரேலிய இளம் வீரர்கள் கூடுதல் விருந்தளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அணிகளைப் பொறுத்த வரை கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்து தொடர் நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சனும், அதிக விக்கெட்டுகளைக் வீழ்த்திய பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீரும் இல்லாதது இழப்புதான். இருப்பினும் ஷேன் வார்ன் என்ற ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் மூளை, இருக்கும் வீரர்களை வைத்துக் கொண்டு தனது சாம்பியன் தகுதியை நிலை நாட்டப் பாடுபடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் இருப்பது ஷேன் வார்னுக்கு ஒரு மிகப்பெரிய பக்க பலம். கடந்த முறை துவக்கத்தில் களமிறங்கி 'யார் இவர்' என்று மூக்கில் விரல் வைக்க வைத்த ஸ்வப்னில் அஸ்னோட்கர், யூசுஃப் பத்தான், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்டின் லாங்கர், டிமிட்ரி மஸ்கரெந்காஸ் போன்ற வீரர்கள் பேட்டிங்கிலும், பந்து வீச்சில் ஷேன் வார்ன், சித்தார்த் திரிவேதி, ஷான் டெய்ட், முனாஃப் படேல் ஆகியோர் உள்ளனர். எனவே இந்த அணியை சாதரணமாக எடை போட முடியாது.

இந்த அணியை எதிர்த்துப் போட்டியிடும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி இந்த முறை கடந்த முறை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிக்கு கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அணிக்கு புதிய கேப்டன் கெவின் பீட்டர்சன். ஏற்கனவே தென் ஆப்பிரிக்க ஆட்டக் களங்களில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கரான இவர் இந்த முறை நிச்சயம் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை தனது புதிய முறை பேட்டிங் உத்திகளால் வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

பீட்டர்சனுக்கு பக்க பலமாக மார்க் பௌச்சர், ஜாக் காலிஸ், ராகுல் திராவிட், ராபின் உத்தப்பா, ராஸ் டெய்லர், ஜெஸ்ஸி ரைடர் ஆகிய பேட்ஸ்மென்கள் உள்ளனர். இந்த அணியின் மிகப்பெரிய அம்சம் தென் ஆப்பிரிக்க களங்களில் அபாயமானவரான டேல் ஸ்டெய்ன் இருப்பதுதான்.

தனது 4 ஓவர்களில் எந்த ஒரு பலமான பேட்டிங் வரிசையையும் நிலை குலையச் செய்யும் திறமை உடையவர் இவர்.

முதல் போட்டி:

நாளைய முதல் போட்டி மிகவும் பரபரப்பான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணித் தலைவர் தோனியும், மும்பை இந்தியன் அணித் தலைவ‌ர் சச்சினும் பூவா தலையா போட எதிரணித் தலைவர்களாக களமிறங்கும் காட்சியை நாளை காணலாம்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலம் தோனிதான். அதிகம் அறியப்படாத பழனி அமர்நாத் என்ற வேலூரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரைக் கூட கடந்த முறை மிகப்பெரிய பேட்ஸ்மென்களுக்கு எதிராக திறமையாக பயன்படுத்தி அந்த இளைஞருக்கு தன்னம்பிக்கை அளித்தவர் தோனி.

மேத்யூ ஹெய்டன், ஆண்ட்ரூ பிளின்டாஃப், சுரேஷ் ரெய்னா, தென் ஆப்பிரிக்க அதிரடி ஆல் ரவுண்டர் ஆல்பி மோர்கெல், ஸ்டீஃபன் பிளெமிங், பத்ரிநாத், அனிரூதா ஸ்ரீகாந்த் ஆகியோரின் பக்கபலத்துடன் தோனியின் அதிரடி பேட்டிங்கும் இந்த அணியின் சிறப்பம்சங்கள்.

பந்து வீச்சில் பிளின்டாஃப், மகாயா நிடினி, முத்தையா முரளிதரன், பாலாஜி, மோர்கெல் ஆகியோருடன் பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. இந்த முறை ஆஸ்ட்ரேலிய வீரர் மைக் ஹஸ்ஸியின் அதிரடியை பார்க்க முடியாது. அவர் இந்த முறை அரையிறுதிக்குள் நுழைந்தால் பங்கேற்பதாகக் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதும் துவக்க போட்டிகள் கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது.

2 Comments

 1. SUREஷ் Says,

  //அதிகம் அறியப்படாத பழனி அமர்நாத் என்ற வேலூரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரைக் கூட கடந்த முறை மிகப்பெரிய பேட்ஸ்மென்களுக்கு எதிராக திறமையாக பயன்படுத்தி அந்த இளைஞருக்கு தன்னம்பிக்கை அளித்தவர் தோனி.//

  அதனால்தான் தோனி பெரிதும் புகழப் படுகிறார்

   
 2. Reply To This Comment
 3. Anonymous Says,

  சரியான நேரத்தில் சரியான இடுகை.ஆனால் உங்களின் பிற இடுகைகளை விட வெகு சாதரணமாக உணர்கிறேன்.
  jeevaflora

   
 4. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments