TopBottom

தமிழ் சினிமாவில் அஹம் பிரம்மாஸ்மிகள்

எழுதியவர் : Karthikan Karunakaran 05 April 2009

தமிழ் சினிமாவுக்கும் கடவு(ளர்க)ளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்தில் அதுவரை நாடகங்களாக நடிக்கப்பட்டு வந்த புராண கதைகளே திரைப்படங்களாயின. புராண நாயகர்களான முருகன், விஷ்ணு முதலான கடவுளர்களே திரையிலும் நடிகர்களின் தயவில் நாயகர்களாக உலவி வந்தனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிகர்கள் கடவுளுக்கு‌ரிய ம‌ரியாதையுடன் கொண்டாடப்படுவதற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடவுள் வேடம் த‌ரித்ததாலேயே முதல்வரானவர் என்.டி.ராமராவ். கேரளாவில் இ.எம்.எஸ். போன்ற தலைவர்களின் கம்யூனிஸ கொள்கைகள், நடிகர்கள் கடவுளாக பார்க்கப்படும் அபாயத்தை ஓரளவு அங்கு தடுத்தது.

கால ஓட்டத்தில் கடவுளர்களின் இடத்தை சமூகத்துக்காகவும், நீதிக்காகவும் போராடும் இளைஞனின் கதாபாத்திரம் கைப்பற்றியது. இந்த பாத்திரத்தில் நடித்த நடிகர்களும் கடவுளாகவே பார்க்கப்பட்டனர். அதற்கேற்ப கடவுளைப் போலவே பராக்கிரமமும், நேர்மையும் கொண்டதாக இந்த கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டன.

இந்த வடிவத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றவர் எம்.‌ஜி.ஆர். இன்றும் இந்தப் பாதிப்புடனே விஜய், விஜயகாந்த், சரத்குமார் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களும், கதாபாத்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்க்காமல் திரைக்கு வெளியே அரசியல் தலைவர்களாகவும் பார்க்கிற அபாயத்தின் ஆரம்பப்புள்ளி இதிலிருந்துதான் தொடங்குகிறது.

அரசு, சட்டம், சமூக நீதி உள்பட எதற்கும் கட்டுப்படாதவனாக, கட்டுப்படுத்த முடியாதவனாக நாயகனின் பிம்பம் திரையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த எல்லைகள் இல்லா அதிகாரம் அவனுக்கு எப்படி கிடைத்தது? தமிழின் தொண்ணூறு சதவீத இயக்குனர்கள் இந்த கேள்வியை பொருட்படுத்துவதில்லை. நாயகன் என்றாலே அனைத்துக்கும் மேலான அதிகாரத்தை கொண்டவன் என்ற மனப்பதிவு பார்வையாளர்களிடையே பதிய வைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

சில திரைப்படங்களில் நாயகன் கடவுளாகவே உருவகிக்கப்படுவதும் உண்டு. இவ்வகை திரைப்படங்களில் சாதாரண நிலையில் இருக்கும் நாயகன், நான் கடவுள் அதாவது அஹம் பிரம்மாஸ்மி என்ற அத்வைத தத்துவத்தின்படி நானே கடவுள் என அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்கிறான்.

ஆழ்வார் திரைப்படத்தில் கதாகாலட்சேபம் செய்யும் சாமியார், ஒவ்வொரு மனிதனும் கடவுளே என கூறுவதை நாயகன் கேட்கிறான். நாயகனின் அம்மாவும் நீ கடவுள்தாண்டா என்கிறார். இந்த கருத்துகளால், தன்னை கடவுளாக கருதும் நாயகன் தனது குடும்பத்தை நிர்மூலமாக்கியவர்களை கடவுளைப் போல வேடமணிந்து கொலை செய்கிறான்.

அந்நியன் திரைப்படத்தில் வரும் நாயகன் கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ள தண்டனைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் என தான் கருதுகிறவர்களை தண்டிக்கிறான். ராம் திரைப்படத்தில் தன்னை கேலி செய்கிறவர்களுக்கு பதில் கூறாமல் ஒதுங்கி செல்லும் நாயகன், நீ சாமி புள்ளடா என்று அவனது அம்மா கூறிய பிறகு, தன்னை கேலி செய்கிறவர்களை நையபுடைக்கிறான்.

சக மனிதன் மீது செலுத்தப்படும் உச்சபட்ச வன்முறை என்பது அவனது உயிரை பறிப்பது. இந்த உச்சபட்ச வன்முறையை சக மனிதன் மீது பிரயோகிக்கும் பொருட்டே நாயகன் கடவுளாக திருநிலைப் படுத்தப்படுகிறான். மேலே உள்ள திரைப்படங்கள் அதை‌த்தான் நமக்கு உணர்த்துகின்றன.

கடவுள் என்பவர் அனைத்திற்கும் மேலானவர், யாருக்கும் கட்டுப்படாதவர், யாராலும் கட்டுப்படுத்த முடியாதவர். நாயகனை கடவுளாக திருநிலைப் படுத்தும்போது கடவுளுக்கு‌ரிய இந்த குணாம்சங்கள் நாயகனுக்கும் உ‌ரிமையுடையதாகிறது. நாயகன் கொலை செய்யும்போது எந்த குற்றவுணர்வும் இன்றி பார்வையாளர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள்.

பாலாவின் நந்தா படத்தின் நாயகனும் தன்னை கடவுளாக நினைத்தே சக மனிதனை கொலை செய்கிறான். “அநியாயம் நடக்கும்போது நான் அவத‌ரிப்பேன்னு சொல்லியிருக்கார். ஒவ்வொரு முறையும் மேலேயிருந்து வருமா? அநியாயத்தை தட்டிக் கேட்கிற நீதான் அவதாரம்.” இந்த உபதேசத்தை தொடர்ந்தே நந்தாவில் நாயகன் கொலை செய்யும் காட்சி வருகிறது. நான் கடவுள் படத்தில் அஹோ‌ரி செய்யும் கொலைகள், கருணை கொலை இரண்டும் கடவுள் ஸ்தானத்தில் இருந்தே செய்யப்படுகின்றன.

தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கிற ஒருவருக்கு உயிரெடுப்பது மட்டுமே கடவுளின் வேலை என நினைக்கத் தோன்றும். ஆக்கம், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களில் அழித்தலை மட்டுமே கடவுளுக்கு‌ரியதாக தமிழ் சினிமா சித்த‌ரித்து வந்துள்ளது. கடவுள் என்றாலே கொலைதானா? நான் கடவுள் என்று சொல்லிக் கொண்ட எந்த தமிழ் சினிமா நாயகனும் இதுவரை (திரைப்படத்தில்) ஒரு உயிரை காப்பாற்றியதாகவோ, சக மனிதனை மன்னித்ததாகவோ, சமூக மாற்றத்துக்கான சிறு துரும்பை கிள்ளிப் போட்டதாகவே சான்றுகள் இல்லை. தவறிழைத்தவனை மன்னிக்காதவன் கடவுளாக மட்டுமல்ல மனிதனாக இருக்கவே தகுதி இல்லாதவன்.

கடவுள் என்ற கருத்துக்கு வள்ளலார், விவேகானந்தர், மகாத்மா காந்தி, ராமகிருஷ்ணர் போன்றவர்கள் அளித்த விளக்கத்தை தமிழ் சினிமா அளவுக்கு கொச்சைப்படுத்தியவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.

இது வெறும் சினிமா. நேரத்தை கொல்லும் பொழுதுபோக்கு. இதில் கருத்தையோ, சமூக மாற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது என்பது சிலரது வாதம். உண்மைதான். ஒரு திரைப்படத்தால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதேநேரம் தவறான பாதைக்கு இட்டுச் செல்லாமல் இருக்க முடியும்.

காந்தியை வாசிக்கும் ரவுடி, காந்திய வழியில் பிரச்சனைக்கு தீர்வு காண்பது இந்தியில் வெளியான லகே ரஹோ முன்னாபாய் படத்தின் கதை. இந்தப் படத்தின் பாதிப்பில் பொதுமக்கள் தங்களது பிரச்சனையை காந்திய வழியில் போராடி தீர்த்துக் கொண்டதாக பத்தி‌ரிகைகளில் செய்தி படிக்கிறோம். காந்தி படத்தால் முடிவது கடவுளால் முடியாதா என்பதே நமது கேள்வி. எல்லா கடவுள்களும் அன்பை போதிப்பதாக கூறிக் கொண்டு திரைப்படத்தில் கடவுள் கையில் அன்புக்குப் பதில் அ‌ரிவாளை கொடுக்கிறார்கள்.

மேலும், காசியில் வேதங்கள் படித்து, நானே கடவுள் என்று பு‌ரிந்து கொண்ட, கெட்டவர்களை பார்வையாலேயே அறிந்துவிடக் கூடிய அஹம் பிரம்மாஸ்மியால், வாழ இயலாத ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கை அளித்து இந்த உலகில் வாழ வைக்க முடியவில்லை. மாறாக கருணை‌‌க் கொலைதான் செய்ய முடிகிறது.

அதே காசிக்கு சென்று, அங்கு நடக்கும் அயோக்கியத்தனங்களில் மனம் வெதும்பி, கடவுளே இல்லை என்ற பு‌ரிதலுக்கு வந்த ஒருவர், தன்னம்பிக்கை இழந்து, சாதி, மத அடிமைத்தனத்தில் சிக்குண்டு கிடந்த ஒரு இனத்துக்கே விடியலை அளித்திருக்கிறார். இது ச‌ரித்திரம். கடவுளே இல்லை என்று கூறிய ஒருவரால் ஒரு இனத்துக்கே விடியலை கொடுக்க முடியும் போது, முக்காலமும் அறிந்த அஹம் பிரம்மாஸ்மிகளால் கொலைதான் செய்ய முடிகிறது.

தமிழ் சினிமாவில் ஆன்மிகம் என்பது தவறாக பு‌ரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. வள்ளலார், காந்தி, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ஓஷோ போன்றவர்களின் பார்வையில் கடவுளும், ஆன்மிகமும் தமிழ் சினிமாவில் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அஹம் பிரம்மாஸ்மிகள் கொலைகாரர்களாவதை கடவுளாலும் தடுக்க முடியாது.

1 Comment

 1. Krish Says,

  மிக நல்ல பதிவு! தன்னால் முடியாத காரியங்களை செய்யும் ஒருவரதைதான் 'ஹீரோ' வாக மக்கள் கருதுகிறார்கள். அநியாயங்களை தட்டி கேட்பது, அம்மாவிடம் மரியாதை, அழகான பெண்களிடம் காதல் என்று ஒரு பாத்திரம் படைக்கப்படும் பொது அதை ரசிக்கிறார்கள்.
  தமிழ் சினிமாவின் அபாயகரமான போக்கு என்னவென்றால் ரவுடிகளை 'ஹீரோ' க்களாக சித்தரிப்பதுதான். இதனால் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் பல இளைநர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர்.

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments