வெப்சைட்டில் அழகிகள் வருவது எப்படி? எப்படி என் ஊர் தெரிகிறது?

இன்டர் நெட்டில் பிரவுஸ் செய்கையில் தகவல் தேடி தளங்களை மிகவும் சீரியஸாகப் படித்துக் கொண்டிருக்கையில் இடையே திடீரென இரண்டு அழகிகள் படங்கள் கிடைக்கும். பெயர் மற்றும் வயது போட்டிருக்கும். கீழே நான் தனியாகத் தான் சென்னையில் இருக்கிறேன். என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் இங்கு கிளிக் செய்து மேலும் விபரங்களைப் பெறலாமே. இதில் எந்தவிதத்திலும் நீங்கள் கட்டுப்படப்போவதில்லை. ஜஸ்ட் பார் பன் என்றெல்லாம் விளம்பரங்கள் வரும்.

அல்லது ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் பொருளைக் காட்டி இது உங்களுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு தரும். சென்னையில் இது எங்கு கிடைக்கிறது என்று தெரிய வேண்டுமா? கிளிக் செய்திடுங்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கும். நமக்கு என்ன வியப்பு என்றால் எப்படி இந்த தளத்திற்கு நாம் சென்னையில் அல்லது தமிழ் நாட்டில் இருக்கிறோம் என்று தெரிகிறது.

இது அமெரிக்க நாட்டின் தளம் அல்லவா? அல்லது டில்லியிலிருந்து அல்லவா இந்த தளம் இயக்கப்படுகிறது? என்று வியக்கலாம்.

இங்கு தான் geotargeting என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது போல வரும் அழைப்புகள் எல்லாம் விளம்பரம் தான். இந்த விளம்பரம் தளத்தில் போடுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் படுகையிலேயே இந்த வகையான தொழில் நுட்ப வசதியும் இணைக்கப்படுகிறது.

உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் ஹோஸ்ட் சர்வர் அல்லது உங்கள் இன்டர்நெட் முகவரி சார்ந்த ஐ. பி. முகவரியைக் கொண்டு உங்கள் இடம் அறியப்படுகிறது. அதற்கேற்ற வகையில் விளம்பரத்தில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டு காட்டப்படுகின்றன. ஆனால் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் உங்கள் பெர்சனல் தகவல்களான பெயர், முகவரி, போன் எண், இமெயில் முகவரி, வயது, பாலினம் ஆகியவற்றை கண்டறிய முடியாது. அதனால் தான் உங்களை கவர்ச்சி காட்டி கிளிக் செய்து பின் ஏதேனும் ஆசை காட்டி ஒரு படிவத்தின் மூலம் இந்த தகவல்களைப் பெற்று விடுவார்கள்.

அது மட்டுமின்றி யாரேனும் இன்டர்நெட் பயன்படுத்துபவர் ஒருவர் இந்த விளம்பரங்களில் கிளிக் செய்தால் அதனைக் கணக்கிட்டுப் பணம் பெறும் வகையிலும் சில வெப்சைட்கள் இயங்குகின்றன. எனவே தான் ஏதேனும் ஒரு வகையில் உங்களைக் கவர்ந்து கிளிக் செய்திட இந்த விளம்பரங்கள் முயற்சி செய்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த ஜியோ டார்கெட்டிங் வழியில் ஊர்களின் பெயர்களை அமைப்பது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்