TopBottom

தோனியின் அணிக்கு என்ன ஆனது?

எழுதியவர் : Karthikan Karunakaran 22 June 2009

இங்கிலாந்தில் நடைபெறும் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு உலக சாம்பியன் என்ற பட்டத்துடன் சென்ற இந்திய அணி சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி தழுவி வெளியேறியது பற்றி பல்வேறு துருவல் விசாரணைகள் துவங்கி விட்டன.

ஊடகங்களின் எரிச்சலையும், (ஏனெனில் இவர்கள்தான் இந்த அணியைப் பற்றி அளவுக்கு மீறி உயர்த்தி எழுதியவர்கள்), ரசிகர்களின் ஆத்திரங்களையும் ஒருங்கே சம்பாதித்துள்ள அணித் தலைவர் தோனி முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார்.

வெறிபிடித்த சில ரசிகர்கள் தோனியின் உருவ பொம்மையையும் எரித்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தோல்விதானா இது? அல்லது இவ்வளவு வெறுப்பை தோனி மீது உமிழ வேண்டிய அவசியம் என்ன? இந்த இரு கேள்விகளும் இன்று அவசரமானது, அவசியமானது.

முதலில் ஊடகங்களின் செயல்பாடுகளை கவனிப்போம். சேவாக் காயம் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை, அவர் ஏன் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை? என்றெல்லாம் ஊடக நிருபர்கள் தக்களுக்குள்ளாகவே சந்தேகங்களை எழுப்பி அதற்கு ஒரு கற்பனையான வடிவம் கொடுத்தனர். யார் பெயரை இழுத்தால் இன்றைய பரபரப்பு விற்பனைக்கு உதவும் என்று யோசித்தார்கள், தோனிக்கும் சேவாகிற்கும் தகராறு, பனிப்போர் என்றெல்லாம் தங்களுக்கு தோன்றியதையெல்லாம் செய்தியாக வெளியிட்டனர்.

இதில் கடும் வருத்தமும் ஏமாற்றமும் அடைந்த தோனி, அணியின் ஒற்றுமையை காண்பிக்க அனைத்து வீரர்களையும் செய்தியாளர்கள் முன் கூட்டினார். அப்போதும் விடவில்லை சந்தேகம். ஏனெனில் தோனியிடமிருந்து இப்படியொரு காய் நகர்த்தலை எதிர்பார்க்கவில்லை ஊடக நண்பர்கள். தொடர்ந்து தோனி ஊடகங்களை பொறுப்பற்றவர்கள் என்று விமர்சனம் செய்து தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டார். இதனால் கார்ப்பரேட் ஊடகங்களின் எரிச்சலுக்கு ஆளானர் தோனி.

ஆனால் இன்று சேவாக் பற்றிய விஷயத்தை அவ‌ர் தெளிவாக்கியுள்ளார். அதாவது இந்தியாவில் அவருக்கு எடுத்த ஸ்கேனில் காயம் தெரியவில்லை. பிறகு 2-வதாக எடுக்கப்பட்ட ஸ்கேனில் காயம் இருந்தது தெரியவந்தது என்று வெளிப்படையாக கூறிய தோனி, சேவாக் பற்றிய விவரங்களை ஏன் வெளியிட முடியவில்லை என்பதற்கு நியாயமான காரணத்தையே கூறியுள்ளார்.

எதிரணியினர் சேவாக் இருந்தால் ஒரு உத்தியையும், சேவாக் இல்லையென்றால் வேறு உத்திகளையும் வடிவமைப்பார்கள், எனவே சேவாக் இருக்கிறார் என்பது போலவே இருந்தால் அவர்களது விவாதக் கூட்டத்தில் சேவாகிற்கு உத்திகளை வகுப்பதில் அரை மணி நேரத்தை விரயமாக செலவிடட்டுமே என்கிறார் தோனி.

எனவே தோல்விகளை சாக்காக வைத்து ஊடகங்கள் ஒட்டுமொத்த விமர்சனங்களையும் தொகுத்து வழங்குவதும், தோனிக்கு எதிரான விஷயங்களை தொகுத்து வெளியிடுவதும் நடைபெற்று வருகிறது. இது தோனிக்கும், ஊடகங்களுக்கும் இடையே ஏற்பட்ட உரசல்களால் ஊதிப் பெருக்கப்படும் விமர்சனங்களாகும்.

முன்னாள் வீரர்கள் பலர் மரியாதைக்குரியவர்கள் என்பதும், இவர்களின் பங்களிப்பு நடப்பு அணியின் ஆட்டத்திலும் உள்ளது என்றாலும், முன்னாள் வீரர்கள் என்ற பெயரில் ஒரு சில வீரர்கள் கூறும் விமர்சனங்கள் அபத்தக் களஞ்சியமாக உள்ளது.

அதிலும் லால் சந்த் ராஜ்புட் வெளியிட்டுள்ள விமர்சனங்கள்... 'சாரி கொஞ்சம் ஓவர்' ரகத்தில் உள்ளது. இவர் ஏதோ இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் வண்டி வண்டியாக ரன்களைக் குவித்து வெற்றிகளை குவித்துவிட்டவர் போல் பேசுவது தமாஷாக இருக்கிறது. 'மிகப்பெரிய ஏமாற்றம், தோனி ஏன் இதை செய்தார், அதைச் செய்யவில்லை என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார். நவீன கிரிக்கெட்டின் அரிச்சுவடியையாவது அவர் அறிந்திருப்பாரா என்றால் அது சந்தேகமே.

அடுத்ததாக நமது ஸ்ரீநாத், இவர் தோனி ஊடகங்களை பகைத்துக் கொண்டதுதான் தோல்விக்கு காரணம் என்கிறார். ஊடகங்களை பகைத்துக் கொள்வதற்கும், தோல்விக்கும் என்ன தொடர்பு. அவரைத்தான் கேட்கவேண்டும்.

இதனால் முன்னாள் வீர்ர்களின் அபத்தக் கருத்துகள், ஊடகங்களின் முன்பகை எதிர்வினைகள் ஆகியவற்றை கொண்டு நாம் எந்த முடிவிற்கும் வரவியலாது.

எங்கே தவறு?

உண்மையில் 2007 ஆம் ஆண்டு 20-20 உலகக் கோப்பையை வெல்லும்போது இந்த வகை கிரிக்கெட் குறித்து ஒருவரும் அறிந்திருக்கவில்லை. அதனால் இதில் தோற்பது அல்லது வெற்றி பெறுவது என்பது எந்த அணிக்கும் ஒரு பெரிய சாதனையாகவோ அல்லது இழுக்காகவோ தெரியவில்லை. மேலும் நடப்பது உலகக் கோப்பை என்றாலும் இது ஒரு பொழுதுபோக்கு வகை கிரிக்கெட் ஆட்டமாகவே ரசிகர்களாலும், மற்ற அணிகளாலும் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இந்திய அணியில் தோனியின் தலைமையின் கீழ் முற்றிலும் மற்ற அணிகள் அறியாத இளம் திறமைகள் கோப்பையை தோனியின் செல்வாக்கான தலைமையின் கீழ் வென்றது.

ஆனால் அதன் பிறகு இந்திய அணி ஐந்தே ஐந்து 20-20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையே விளையாடியது. இதில் 3 போட்டிகளில் தோல்வி தழுவியது. இடையில் தோனி அணி வெளிப்படுத்திய அபார ஆட்டங்கள் 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்ட்ரேலியா, இலங்கையை முத்தரப்பு ஒரு நாள் தொடரில் வீழ்த்தியது. இலங்கையில் சென்று இரண்டு ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது, இங்கிலாந்தை வீழ்த்தியது, பாகிஸ்தானை வீழ்த்தியது, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது, நியூஸீலாந்தை வீழ்த்தியது அனைத்தும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலேயே என்பதும் இந்த அதிரடி இந்திய அணிக்கு கிடைத்த புகழ்கள் இந்த வெற்றிகளினால் என்பதும் மறுப்பதற்கில்லை.

ஆனால் 2007‌க்கு பிறகு ஏற்பட்ட முக்கிய மாற்றம் லலித் மோடியின் கருத்தில் பிறந்த புதிய குழந்தையான ஐ.பி.எல். கிரிக்கெட் என்ற ஒன்றே. அதன் பிறகு இரண்டு ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டித் தொடர்கள் நடைபெற்றதால், உலகெங்கிலும் 20-20 போட்டிகள் மீதான கவனக் குவிப்பு அதிகமானது.

இதில் சில சிறந்த இந்திய வீரர்கள் உருவாயினர். இந்த இரண்டு விஷயங்கள்தான் இந்திய அணிக்கு இவ்வளவு 'ஹைப்' - ஐ (Hype) உருவாகியது.

ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பிறகே மற்ற அனைத்து அணிகளும் 20-20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி முதல் 6 ஓவரை எப்படி வீசுவது, இறுதிக் கட்டத்தில் எப்படி வீசுவது, அதேபோல் முதல் 6 ஓவர்களில் யார் யாரை களமிறக்கலாம், அவர் எப்படி ஆடவேண்டும் எந்த ஷாட்களை ஆடவேண்டும் போன்ற உத்திகள் வளர்ந்ததோடு, அவுட் செய்வது என்பதும் ஒரு உத்தியாக வளர்ந்துள்ளது.

இந்த 20-20 உலகக் கோப்பை மிகவும் திறந்த வெளி சவாலானதை புரிந்து கொள்ளாமல் நாம் இந்திய அணியைப் பற்றி 2007ஆம் ஆண்டு உருவாக்கி வைத்த கற்பனையையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சிலர் அடித்த அடியை வைத்து உருவாக்கிய கற்பானையையும் சேர்த்திணைத்து ஒரு அணியாக இந்தியா களமிறங்கும்போது அதே அளவு ஆட்டம் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையான காரணம் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் கூறியதுதான். ஐ.பி.எல். கிரிக்கெட் என்ற 6 வார கடும் உழைப்பிற்கு பிறகு 3 நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்தது. இதனால் ஒரு அணியாக இந்தியா பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. ஐ.பி.எல். ஏற்படுத்திய களைப்பு ஒரு மிகப்பெரிய காரணி என்பதை நாம் மறுக்காமல் ஒப்புக் கொள்வதுதான் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்பதாக இருக்கும்.

கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் முடிந்தவுடன் தோனி இலங்கை தொடருக்கு தனக்கு ஓய்வு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டது நமக்கு நினைவிருக்கலாம். இப்போதும் அடுத்து வரும் மேற்கிந்திய தொடருக்கு சச்சின் தன்னை விலக்கிக் கொண்டதும், ஜாகீர் கானுக்கு ஓய்வு அளிப்பதும் நடந்துள்ளது. இவைகளை வைத்துப் பார்க்கும்போது ஐ.பி.எல். கிரிக்கெட் பெரிய களைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையான காரணமாகவே கருதப்படவேண்டும்.

ஒரு அணியாக பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்பதும், கேரி கர்ஸ்டன் கூறியது போல் சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சியில் ஈடுபடுவது என்பது வீரர்களின் விருப்பத்திற்கு விடப்பட்டது என்பதும் பரிசீலிக்கதக்கவை.

மற்றபடி தோனி களத்தில் செய்த தவறுகளாக சுட்டப்படுவதும் ஒரு காரணம் அவ்வளவே. அதையே ஒட்டுமொத்த காரணமாக பரிசீலிக்கத்தக்கதல்ல. இதற்கு முன்பு இதுபோன்ற உத்திகளை அவர் கடைபிடித்து அணி வெற்றி பெற்றுள்ளது என்பதையும் நாம் மறுக்கமுடியாது.

ஆனால்... சில உத்திகளை குறிப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது. பேட்டிங்கில் ஒரு கணிக்க முடியாத அணியாக இருக்கவேண்டும் என்ற முன் அனுமானத்தின் பேரில் வீரர்களை களமிறக்குவதில் செய்த குளறுபடிகளால், குறிப்பாக சேவாக் இல்லாத போது, பரிசோதனை முயற்சிகளை தோனி மேற்கொண்டிருக்கக் கூடாது.

முதல் சுற்றுப் போட்டிகளில் தோனி 3ஆம் நிலையில் களமிறங்கியது தவறு. ஆனால் இறங்கிவிட்டார், அப்படியிருக்கையில் தொடர்ந்து அவரே அந்த இடத்தில் களமிறங்கியிருக்க வேண்டும். திடீரென ரெய்னாவை களமிறக்கும் போது ஷாட்-பிட்ச் பந்துகளை அவரால் எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தார். அவர் தொடர்ந்து அந்த நிலையில் முதலிலிருந்தே இறக்கப்பட்டிருந்தால், ஷாட்-பிட்ச் பந்துகள் மைதானத்திற்கு வெளியே சென்றிருக்கும்.

அதேபோல் அணிச் சேர்க்கையில் நிகழ்ந்த தவறுகள் முக்கியமாக தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளன. இஷாந்த் ஷர்மாவிற்கு பதிலாக பிரவீண் குமாரையோ அல்லது இர்ஃபான் பத்தானையோ தொடர்ந்து ஆடச் செய்திருக்க வேண்டும்.

இங்கிலாந்திற்கு எதிராக வெற்றி பெற்றேயாக வேண்டிய ஆட்டத்தில் பிராக்யன் ஓஜா போன்ற விக்கெட் வீழ்த்தும் ஆற்றல் உடைய பந்து வீச்சாளரை உட்கார வைத்தது ஒரு பெரிய தவறு.

ரவிந்தர் ஜடேஜாவை, முன்னதாக களமிறக்கிய தவறு பெரிதாக பேசப்படுகிறது. ஆனால் அது வெற்றியடைந்திருந்தால் ஆஹோ, ஓஹோ என்று ஊடகங்கள் எழுதியிருக்கும். இதுபோன்ற உத்திகளில் தோனிக்கு முழு சுதந்திரம் கிடையாது என்பதும் அது அணியில் உள்ள மற்றவர்களின் ஒப்புதலின் பேரிலேயே நடந்திருக்கும் என்பதும் சாதாரண விஷயங்களே.

ஆனால் தீவிர கிரிக்கெட் ரசிகர்களாகிய நாம் ஒன்றை ஒப்புக் கொள்வதில் நேர்மையை கடைபிடிக்கவேண்டும்.

இந்த 20-20 கிரிக்கெட் என்பது ஒரு "சான்ஸ்" சம்பந்தப்பட்ட ஆட்டமாகும். 'மாட்டினால் உனக்கு மாட்டாவிட்டால் எனக்கு' என்ற ஆட்ட வகையில் எந்த அணியையும் எந்த அணியும் அன்றைய தினத்தில் வீழ்த்திவிடும் என்பது இந்த வகை ஆட்டத்தின் விதியாகும். இதைத்தான் ஜாவேத் மியாண்டடும், இம்ரான் கானும் முன்பே வலியுறுத்தினர்.

ஆஸ்ட்ரேலியா போன்ற பலமான அணி முதல் சுற்றில் வெளியேறுகிறது என்றால் இந்த ஆட்டம் பற்றி நாம் என்ன கூறுவது? கிறிஸ் கெய்ல் இனிமேலும் அதுபோன்ற ஆட்டத்தை ஆடமாட்டார். அன்றைய தினம் அவருக்கு ஆட்டம் சூடு பிடித்தது அவ்வளவே. 50 ஓவர் கிரிக்கெட் என்றால் பிரட் லீ, ஜான்சன், ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா, ஜாகீர் கான் ஆகியோர், கெ‌ய்‌ல் போன்ற வீரர்களை 'ஒர்க்-அவுட்' செய்து வீழ்த்தி விடுவார்கள். இதில் அவ்வாறு நிகழ்வது கடினம்.

இந்திய தோல்விக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் சேவாக் காயமடைந்து வெளியேறியதுதான். அவர் இருந்திருந்தால் முதல் ஓவரை ஸ்பின் பந்து வீச்சாளரை அழைத்து வீசவைப்பது போன்ற உத்திகளை எதிரணியினர் கடைபிடிக்க முன்வர மாட்டார்கள்.

கிரேம் ஸ்வான், போத்தா, வான் டெர் மெர்வ் பந்துகளை தடவ வேண்டிய அவசியமும் இந்திய வீரர்களுக்கு இருந்திருக்காது.

மொத்தத்தில் பார்த்தால் ஒரு கிரிக்கெட் அணியாக, வேண்டிய அடிப்படை திறமைகளை இந்திய அணி ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தவில்லை. ஃபீல்டிங் படுமோசம். முதல் 6 ஓவர்களும் கடைசி 2- 3 ஓவர்களும் பந்துகள் மைதானத்தில் சகல பகுதிகளிலும் பவுண்டரிகளை மோதியது. பேட்டிங்கில் மோசமான ஷாட் தேர்வு என்று தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிடலாம்.

ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட சறுக்கல்களை வைத்து எந்த ஒரு வீரரின் தனிப்பட்ட திறமையையும் நாம் குறைக்கலாகாது.

இதற்கு முன் இந்திய அணி தாறுமாறாக தோற்று வெளியேறிய போதெல்லாம் எந்த ஒரு அணித் தலைவரும் ரசிகர்களிடத்தில் மன்னிப்பு கேட்டதில்லை. 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக மோசமான தோல்வியைத் தழுவியபோதும், 2007ஆம் ஆண்டு மிக மோசமாக தோல்வி தழுவி வெளியேறிய போதும், 1996 உலகக் கோப்பையில் அசாருதீன் செய்த மிகப்பெரிய மோசடி முடிவினால் ஏற்பட்ட தோல்வியின் போதும், அன்றைய கேப்டன்களான கங்குலி, திராவிட், அசாருதீன் ஆகியோர் எந்தவித மன்னிப்பையும் கோரவில்லை.

ஆனால் தோனி தற்போது வெளிப்படையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறார் என்றால், அடுத்த தொடரில் இந்திய அணி சவாலான திறமைகளை வெளிப்படுத்தும் என்றே பொருள்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டினால், 20-20 கிரிக்கெட்டிற்கு மற்ற அணிகள் முக்கியத்துவம் கொடுத்து உத்திகளை வகுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதனை எதிர்கொள்ள இந்திய அணியிடத்தில் உத்வேகமான பயிற்சி இல்லை, காரணம் களைப்பு மிகுதிதான்.

அதனால், கிரிக்கெட் ரசிகர்கள், வெற்றி பெற்றால் இந்தியா முழுதும் ஊர்வலமாக வீரர்களை அழைத்து வந்து விழா எடுப்பதையும், தோற்றால் அளவுக்கு அதிகமாக தூற்றும் போக்குகளையும் ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது.

பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ் கான் கூறுவது இந்த விஷயத்தில் சாலப்பொருந்தும்: "வெற்றி பெற்றாலும், தோல்வி தழுவினாலும், 20- 20 கிரிக்கெட் என்பது ரசிகர்களின் பொழுது போக்கிற்கான வடிவமே. இதனை நாம் ஒரு சீரியஸான விஷயமாக பார்க்க முடியாது".

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments