மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. ஆபீஸ் 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆபீஸ் 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு ஆபீஸ் 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. (உலக மக்கள் 13 என்ற எண் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பற்றிக் கொண்டிருக்கலாம்.)

சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஆபீஸ் 2010 குறித்த அறிவிப்பு வெளியானது. முழுமையான தொகுப்பின் பயன்பாடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் தனித் தன்மைகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் போன்றவை சற்று கசியத் தொடங்கின. இந்த ஆபீஸ் 2010 தொகுப்பு இது பயன்படுத்துவோருக்கான தன்மையினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபடும் மேல் மட்ட ஆய்வாள்ர்கள் மற்றும் அறிஞர்கள், விற்பனைச் சந்தையில் ஈடுபடும் அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு பிரிவுகளில் ஈடுபடுவோர் என ஒருவரின் வேலைத் தன்மைக்கேற்ப இந்த ஆபீஸ் தொகுப்பினைச் செயல்படுத்த வழி தரப்பட்டிருக்கும்.

இந்த தொகுப்புடன் சேர்த்து மைக்ரோசாப்ட் இணைய அடிப்படையில் இயங்கும் ஆபீஸ் தொகுப்பினை வழங்க இருக்கிறது. வெப் பேஸ்டு அப்ளிகேஷன் என அழைக்கப்படும் இத்தொகுப்பில் எக்ஸெல், பவர்பாய்ண்ட், வேர்ட் மற்றும் ஒன் நோட் அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இவை இயக்கிக் காட்டப்பட்டன. பிரவுசரின் வழியாகச் சென்று இந்த அப்ளிகேஷன் தொகுப்புகளை இயக்கி பைல்களை நாம் தயாரிக்க முடியும். இந்த வெப் அப்ளிகேஷன்கள் சபாரி, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக இயங்கும். இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்த மார்க்கட்டில் இது போன்ற அப்ளிகேஷன்களை மைக்ரோசாப்ட்டிற்கு எதிராகக் கொண்டு வரும் கூகுள் டாக்ஸ் போன்ற மற்ற வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்குப் போட்டியாகவும் இது இருக்கும்.

ஆபீஸ் தொகுப்பு 2010 இரு வகைகளில் தரப்பட இருக்கிறது. 32 பிட் அமைப்பிலும் 64 பிட் அமைப்பிலும் இயங்கும் வகையில் இரண்டு வகை தரப்படும். ஆபீஸ் தொகுப்பு ஒன்று இவ்வாறு இரண்டு வகைகளுக்கும் தரப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதன் வேர்ட் தொகுப்பின் புதுமையாக இமேஜ் எபக்ட்ஸ் கூட்டாகத் தரப்படுகிறது. வேர்ட் மற்றும் பிற ஆபீஸ் புரோகிராம்களில் பேஸ்ட் பிரிவியூ என்ற ஒட்டுமுன் காட்சி தரப்படுகிறது. இதன் மூலம் பேஸ்ட் பயன்படுத்துபவர்கள் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதனை அறிந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப பல பேஸ்ட் முறைகளைச் சோதனை செய்து பார்த்து செயல்படலாம்.

எக்ஸெல் தொகுப்பில் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்றொரு வசதி தரப்படுகிறது. ஸ்ப்ரெட் ஷீட் ஒன்றில் காணப்படும் செல் ஒன்றில் அமையும் வகையில் உள்ள சிறிய கிராப் ஆக இது இருக்கும். பவர்பாய்ண்ட் தொகுப்பில் வீடியோ எடிட்டிங் வசதிகள் தரப்படுகின்றன. பிரசன்டேஷன் ஒன்றின் வீடியோ காட்சி எப்படி இருக்கும் என்பதனை இந்த தொகுப்பின் மூலமே அறிந்து கொள்ளலாம். இதில் வாய்ஸ் அனொடேஷன்ஸ் இணைந்து இருக்கும். அவுட்லுக் இமெயில் மற்றும் காலண்டர் வசதிகளில் ஜிமெயிலில் உள்ளது போல கான்வெர்சேஷன் வசதி கிடைக்கிறது. இதற்கும் மேலாக "Ignore thread" ஒன்று தரப்படுகிறது. இதன் மூலம் மெசேஜைப் பார்த்துவிட்டு அதனை அலட்சியப்படுத்தி வைக்கும் வசதி கிடைக்கிறது. இதில் “மெயில் டிப்ஸ்” வசதி உள்ளது. இது டாகுமெண்ட் ஒன்றை இமெயில் மூலம் அனுப்புகையிலும் பலருக்கு ஒரே மெசேஜை அனுப்புகையிலும் அது நாகரிகமாக இருக்க வேண்டியதற்கான டிப்ஸ்களை அளிக்கிறது.

ஆபீஸ் 2010 உடைய ஒவ்வொரு அப்ளிகேஷன் தொகுப்பிலும் பைல் கையாளும் விதங்களில் கூடுதல் வசதிகள் தரப்படுகின்றன. பைல் சேவிங், பைல் பிரிண்டிங் போன்ற பணிகளுக்கு ஒரு பேக் ஸ்டேஜ் வியூ அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் வேலை எப்படி அமையும் என முன் கூட்டியே கண்டு கொள்ளலாம். ஒரே டாகுமெண்ட்டை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் எடிட் செய்திடலாம். இதனால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாக இருந்து தயாரிக்கப்படும் பல பகுதிகள் அடங்கிய ஒரு டாகுமெண்ட்டை ஒரே நேரத்தில் அதன் ஆசிரியர்கள் அனைவரும் கையாளக் கூடிய வசதி கிடைக்கிறது.

முன்பு போலின்றி இந்த ஆபீஸ் தொகுப்பு மூன்று வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. ஆபீஸ் ஹோம் மற்றும் மாணவர்க்கான பதிப்பு ஒன் நோட், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகளுடன் கிடைக்கும். ஆபீஸ் ஹோம் மற்றும் பிசினஸ் தொகுப்பில் மேலே குறிப்பிட்டவற்றுடன் அவுட்லுக் இணைந்திருக்கும். ஆபீஸ் புரபஷனல் தொகுப்பில் மேலே சொல்லப்பட்ட அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் அக்செஸ் டேட்டா பேஸ், மற்றும் பப்ளிஷர் பேஜ் லே அவுட் புரோகிராம்கள் கிடைக்கும்.

வர்த்தகர்களுக்கான தொகுப்பினைப் பார்க்கையில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஸ்டாண்டர்ட் தொகுப்பு பயனளிக்கும். அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குப் பெறும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கான பதிப்பாக இது இருக்கும். இதில் எக்ஸெல், அவுட்லுக், பவர்பாய்ண்ட், வேர்ட், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் கிடைக்கும். இறுதியாக உள்ள இரண்டு அப்ளிகேஷன்களும் இந்த வகை பதிப்பில் புதிதாக இப்போது சேர்க்கப்படுகின்றன. ஆபீஸ் ஸ்டாண்டர் பதிப்பிற்கான லைசன்ஸ் பெற்றவர்கள் பிரவுசர் அடிப்படையிலான பதிப்பினைக் கையாளும் உரிமையினைப் பெறுவார்கள்.

ஆபீஸ் 2007ல் இருக்கும் ஆபீஸ் பட்டனுக்குப் பதிலாக மெனு பட்டன் தரப்படும். இதன் மூலம் முழு விண்டோ பைல் மெனுவினைப் பெறலாம். இதனை பேக் ஸ்டேஜ் வியூ என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதன் மூலம் பிரிண்டிங் மற்றும் பைல் ஷேரிங் பணிகளை எளிதாகக் கையாள முடியும். ஆபீஸ் 2010 குறித்த விஷயங்கள் வெளியானவுடன் பலர் விதம் விதமான சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அவற்றை மைக்ரோசாப்ட் தெளிவாகத் தீர்த்து வைத்துப் பல கூடுதல் தகவல்களைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் இன்டர்நெட் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் ஒரே செயல்பாட்டுடையனவாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. இன்டர்நெட் வழி பயன்பாட்டிற்குத் தரப்படும் தொகுப்பில் வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் மட்டுமே இருக்கும். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் எல்லைகளும் சுருக்கமாகவே இருக்கும். வெப் அடிப்படையிலான ஆபீஸ் 2010 தொகுப்பினால் பின் என்ன பயன்? இது முற்றிலும் பிரவுசர் வழியாகச் சென்று இயக்கப்படும் தொகுப்பாகவும் குறைந்த அளவே வசதி கொண்டதாகவும் இருக்கும். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒரு டாகுமெண்ட்டை பலர் எடிட் செய்திடலாம்.

வெப் அடிப்படை ஆபீஸ் தொகுப்பில் உருவாகும் பைல்களை ஆன்லைனிலேயே சேவ் செய்து வைக்க முடியுமா? முடியும். ஆனால் அதற்கு இலவசமாகக் கிடைக்கும் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் அக்கவுண்ட் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும். வெப் ஆபீஸ் தொகுப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்குமா? ஆம், முற்றிலும் இலவசமாகவே இது கிடைக்கும். இலவச விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் இதனைப் பெற முடியும். வெப் ஆபீஸ் தொகுப்பில் அனைத்தும் கிடைக்கிறது என்றால் நான் ஏன் என் பெர்சனல் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு 2010 ஐ இன்ஸ்டால் செய்திட வேண்டும்?

வெப் ஆபீஸ் தொகுப்பு குறிப்பிட்ட ஒரு எல்லை வரையிலான வசதிகளையே தரும். நான்கு அடிப்படை புரோகிராம்களே இதில் கிடைக்கும். கூடுதல் வசதிகளையும் நவீன் தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பினை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதிலும் ஆபீஸ் 2007ல் உள்ளது போன்ற ரிப்பன் மெனு இருக்குமா? ஆம். இதிலும் அதன் பயன்பாடு இருக்கும். ஆனால் இன்னும் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு இருக்கும். ஆபீஸ் தொகுப்பு அனைத்தையும் இதன் மூலம் பெற்றுக் கையாள முடியும். பொதுவான வேலைகளை இப்போது ரிப்பன் மெனுவில் இணைக்கவும், தேவையற்றவற்றை நீக்கவும் முடியும்.

வேர்டில் என்ன புதுமை? பேஸ்ட் பிரிவியூ ஆப்ஷன், டெக்ஸ்ட்டுக்கு ஸ்டைல் அமைப்பதில் கூடுதல் வசதி, வேர்ட் புரோகிராமினை விட்டு வெளியேறாமல் ஸ்கிரீன் ஷாட்களை இணைக்கும் வசதி, இமேஜ் எடிட் செய்வதற்கான புதிய டூல்ஸ் எனப் பல புதுமைகள் உள்ளன. அவுட்லுக்கில் என்ன புதுமை? ஜிமெயிலில் உள்ளது போல சார்ந்த தொடர்பான இமெயில்களை ஒரு குழு உரையாடல் போல வைத்துப் பார்க்கும் வசதி தரப்படுகிறது. பொதுவான வேலைகளை மேற்கொள்ள ஷார்ட் கட் வசதி, காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு இன்பாக்ஸிலிருந்தே செல்லும் வசதி, ஆன் டிமாண்ட் மொழி பெயர்ப்பு டூல்ஸ் ஆகியவை புதிய வசதிகளாகும். எக்ஸெல் என்ன தருகிறது? ஸ்பார்க்லைன் என்ற (மேலே விளக்கப்பட்டுள்ளது) சிறிய சார்ட் இணைக்கும் வசதி. டேபிள் அமைப்பு மற்றும் கையாள்வதில் கூடுதல் வசதி மற்றும் டேட்டாக்களைக் கையாள்வதில் கூடுதல் வசதிகள் ஆகியவை உள்ளன.

பவர் பாய்ண்ட்டில் என்ன புதுமை? ஆச்சரியப்படத்தக்க புதுமை இதில்தான் உள்ளது. பலவகையான பார்மட் வீடியோக்களை இதில் இணைக்கலாம்; இணைத்த பின் இத்தொகுப்பில் இருந்தே அவற்றை எடிட் செய்திடலாம். முதல் முறையாக உங்கள் ஸ்லைட்ஷாவினை ஒரு முழு விண்டோஸ் மீடியா பைலாக மாற்றிப் பெறலாம். உங்களுக்கு ஆபீஸ் 2010 தொகுப்பினை அது முழுமையாக வெளிவருவதற்கு முன் சோதனை செய்து பார்க்க ஆவலாக உள்ளதா? இதற்கென மைக்ரோசாப்ட் ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது.சென்று உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யங்கள்

கருத்துரையிடுக

3 கருத்துகள்