TopBottom

நாடோடிகள் - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 04 July 2009

சசிக்குமாருக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது வெற்றி. இயக்குநர் தயாரிப்பாளர் என தொடர்த்து இப்போது கதாநாயகனாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தனக்கு கிடைத்த தோல்விகளை விதையாக்கி வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி. வித்தியாசமான கதை, தேவையற்ற திணிப்புகள் இல்லாத திரைக்கதை, கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள், அளவான வசனங்கள் என எல்லா வகையிலும் 'நாடோடிகள்' நச்சுனு இருக்கு! ராஜபாளையத்தில் துவங்கும் கதை, நாமக்கல், ஈரோடு, சிவன்மலை, கன்னியாகுமரி என பல இடங்களுக்கு பயணிக்கிறது.

சசிகுமார், விஜய், பரணி மூவரும் நண்பர்கள். குடி, மொட்டைமாடி தூக்கம், ஆட்டம் என ஜாலியாக இருக்கின்றனர். சசிகுமார் உறவுப்பெண் அனன்யா. இருவருக்கும் காதல். மகளை கட்டிக்க அரசு வேலையுடன் வர மாமனார் நிர்ப்பந்திக்கிறார். இதற்காக தேர்வுகள் எழுதுகிறார். விஜய் கம்ப்யூட்டர் கம்பெனி வைக்க முயற்சிப்பதுடன் சசிகுமார் தங்கையையும் காதலிக்கிறார்.

சசிக்குமாரின் பழைய நண்பர் ரங்கா இவர்கள் வாழ்க்கையில் வந்து சேர திருப்பம். கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயலும் இவரை காப்பாற்றி காரணம் கேட்கின்றனர். காதல் தோல்வி என்கிறார்.

நாமக்கல் தொழில் அதிபர் மகளான காதலியை ரங்காவுடன் சேர்த்து வைக்க நண்பர்கள் கிளம்புகின்றனர். அடிதடி போட்டு காதலியை கடத்தி ரங்காவுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். சண்டையில் விஜய் ஒரு காலை இழக்கிறார். பரணி காது செவிடாகிறது. சசிகுமார் காதலியை இழக்கிறார்.

மூவரும் ஜெயிலில் இருந்து திரும்புகின்றனர். நண்பன் காதலை நினைத்து தங்கள் இழப்புகளை மறக்கின்றனர். மீண்டும் பழைய வாழ்வை துவங்கும்போது காதல் ஜோடி ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு பிரிந்து அவரவர் வீட்டுக்கு போய் விட்டார்கள் என்ற செய்தி இடியாக வந்து தாக்குகிறது.

தங்கள் உழைப்பு, தியாகம் அத்தனையும் மதிப்பிழந்து போனது கண்டு துடிக்கின்றனர். இருவரையும் கடத்தி கொன்று விடலாம் என பரணி ஆவேசமாக கத்துகிறார். மீண்டும் ஒரு கடத்தலுக்கு தயாராவது பரபரப்பான கிளைமாக்ஸ்.

அழுத்தமான கதைகளம். விறுவிறு சீன்கள். வலுவான கேரக்டர்களுடன் படத்தை உச்சாணிக்கு தூக்கிபோய் முன்னணி இயக்குனர்கள் பட்டியலுக்கு உயர்ந்துள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.

முறைப்பெண்ணை மணக்க வேலை தேடும் சசிகுமார் யதார்த்த நடிப்பில் பளிச்சிடுகிறார். போலீஸ் தேர்வில் உயரமானவரை கண்டு மிரள்வது, தங்கை- நண்பன் காதலை கண்டும் காணாது இருக்கும் சாதூர்யம்... கோவிலில் ஆவேசமாக நண்பன் காதலியை கடத்தும் வேகம்... கால் இழந்து, காது செவிடான நண்பர்களை கண்டு துடிக்கும் வலி... காதலி பிரிவால் நொறுங்குவது... என பல்வேறு பரிணாமங்களில் செஞ்சுரி அடிக்கிறார்.

தந்தை யோசனைபடி காதலிக்கும் விஜய் கலகலப்பூட்டுகிறார். காருக்கு அடியில் சிக்கி காலை இழந்து துடிக்கையில் அனுதாபப்பட வைக்கிறார். கஞ்சா கருப்பும், பரணியும் காமெடியில் பட்டையை கிளப்புகின்றனர். முகத்தை கோணி, சிரித்து துறுதுறுவென வரும் அனன்யா மனதில் “பச்சென” ஒட்டிக் கொள்கிறார். அபிநயா அழகாய் பளிச்சிடுகிறார்.

நண்பர்களின் ஜாலி கூத்தில் நகரும் ஆரம்பகதை காதலுக்கு உதவ நாமக்கல் சென்றதும் பறக்கிறது. அங்கு நடக்கும் ஆள் கடத்தல் “சீன்”கள் “சீட்” நுனிக்கு கொண்டு வருகின்றன.

அந்தஸ்தில் உயர்வாக உள்ள தொழில் அதிபரும், முன்னாள் எம்.பி.யும் பிள்ளைகளின் காதலை எதிர்ப்பதற்கான காரணங்களும் சொல்லப்படவில்லை. ஆனாலும் சீறிப்பாயும் திரைக்கதை அவற்றை மறக்கடிக்கச் செய்கிறது.

சுந்தர்சி பாபுவின் இசையும் சம்போ சிவசம்போ பாடலும் படத்துக்கு உரம் ஏற்றுகின்றன. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் பலம்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments