TopBottom

உன்னைப்போல் ஒருவன் : விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 19 September 2009

பாடல் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை, தனி ட்ராக்கில் வரும் அசட்டு காமெடி இல்லை. இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடும் உன்னைப்போல் ஒருவனில் துப்பாக்கி ரவையின் வேகம்... கச்சிதம்...

சென்னை போலீஸ் கமிஷன‌ரின் (மோகன்லால்) வாழ்க்கையில் ஒரு நாள் நடந்த அசாதாரண சம்பவமே கதை. அன்றைய தினம் அவரது செல்போனுக்கு மர்ம அழைப்பு ஒன்று வருகிறது. சென்னை நகரத்தில் ஆறு வெ‌வ்வேறு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வைத்திருப்பதாகவும், சிறையில் இருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால் குண்டுகள் ச‌ரியாக ஆறு மணிக்கு வெடிக்கும் எனவும் அந்த மர்ம மனிதர் (கமல்ஹாசன்) கூறுகிறார்.

வேறு வழியில்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் அந்த மர்ம நபர் சொன்ன இடத்துக்கு அழைத்து வருகிறார்கள். அவர்கள் தப்பிக்க முயற்சிக்கும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதனைத் தொடர்ந்து அந்த மர்ம மனிதருக்கும், போலீஸ் கமிஷனருக்கும் நடக்கும் உரையாடல் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

நாட்டில் எங்கு கலவரம் நடந்தாலும் கொல்லப்படும் முதல் ஆள் அப்பாவி பொது ஜனம்தான் என்று சொல்லும் அந்த டெலிபோன் நபர், அவர்களில் நானும் ஒருவன் என்று தன்னை அறிமுகப்படுத்தி‌க் கொள்கிறார். தனது செயல்களுக்கு அவர் கொடுக்கும் விளக்கம், தீவிரவாதத்துக்கும், அதனை தடுக்க முடியாத கையாலாகாத அதிகாரவர்க்கத்துக்கும் ச‌ரியான சாட்டையடி.

நமது அடுத்த வீட்டுக்காரர் போன்ற கதாபாத்திரம் கமல்ஹாசனுக்கு. கட்டி முடிக்கப்பாடாத உயரமான பில்டிங்கில் அவர் தனது மிரட்டலை விடுக்கும் போது படம் எக்ஸ்பிரஸ் வேகம் பிடிக்கிறது. அவருக்கும் மோகன்லாலுக்கு‌ம் இடையிலான உரையாடல், ஒரு புரஃபஷனல் தீவிரவாதிக்கும், பொறுப்புள்ள போலீஸ் அதிகா‌ரிக்கும் இடையிலான பேச்சை அப்படியே பிரதிபலிக்கிறது. வசனம் எழுதியிருக்கும் இரா.முருகனுக்கு பாராட்டுகள்.

ஒரே இடத்தில் எதிரே யாரும் இல்லாமல் உணர்ச்சியை காட்ட வேண்டிய கட்டாயம் கமலுக்கு. கைத்தட்டல் வாங்கும் அளவுக்கு அதனை சிறப்பாக செய்திருக்கிறார். பல நேரம் அவர் உச்ச‌ரிக்கும் வசன மாடுலேஷனே சுவாரஸியத்தை கூட்டுகிறது.

ஒரு மிடுக்கான போலீஸ் கமிஷனர் எப்படி இருப்பார்? இப்படி இருப்பார் என்று மோகன்லாலை தை‌ரியமாக கைகாட்டலாம். அந்தளவுக்கு பின்னி பெடலெடுத்திருக்கிறார் மனிதர். அவருக்கும் லட்சுமிக்குமிடையிலான உரையாடலின் வழி, நேர்மையான போலீஸ் அதிகா‌ரிக்கு‌ம், அரசியல் அதிகாரத்தின் குறுக்கீடுக்கும் இடையிலான மோதலை நுட்பமாக சித்த‌ரித்திருக்கிறார்கள். வேறு எந்த தமிழ் சினிமாவிலும் இதுவரை பார்க்காத அம்சம் இது.

கமல், மோகன்லால் கதாபாத்திரங்களுடன் இரு போலீஸ் அதிகா‌ரிகள், ஒரு ‌ரிப்போர்ட்டர் ஆகியோரும் படத்தில் பிரதானமாக வருகிறார்கள். இவர்களின் அன்றைய தின வாழ்க்கையும் படத்தில் இடம்பெறுகிறது. இந்த காட்சிகளின் வழியாக அவர்களின் குணாம்சத்தை வெளிப்படுத்தியிருப்பது ரசிக்கக்கூடிய திரைக்கதை.

க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டராக வரும் கணேஷ் ராகவேந்திரா, தப்பு செய்யும் போலீஸ்காரரை ரோட்டில் புரட்டி எடுக்கையில் நமது வயிற்றிலும் புளி கரைக்கிறார். கம்பீரமாக வளையவரும் கணேஷுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இயக்கம், எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என எந்த தொழில்நுட்ப ஏ‌ரியாவிலும் சோடைபோகவில்லை படம். பல இடங்களை இசையில்லாமல் மௌனமாக விட்டிருப்பது இசையமைப்பாளர் ஸ்ருதிஹாசன் மீதான நம்பிக்கையை அதிக‌ரிக்கிறது.

தீவிரவாதிகளை எல்லாம் முஸ்லீமாக சித்த‌ரிப்பதிலுள்ள நேர்மையின்மையும் கமலுக்கு தெ‌ரிந்திருக்கிறது. இதனை பேலன்ஸ் செய்ய இந்து தீவிரவாதம் குறித்தும் படத்தில் பேசப்படுகிறது. குஜராத்தும், பெஸ்ட் பேக்க‌ரியும் உரையாடலில் வந்து போகிறது. பெஸ்ட் பேக்க‌ரியில் உயிரோடு எ‌ரிக்கப்பட்ட தனது மனைவி, மகள் பற்றி தீவிரவாதி ஒருவன் குறிப்பிடும் போது, கோபத்துக்கு பதில் பச்சாதாபமே ஏற்படுகிறது. தீவிரவாதிகளில் சந்தானபாரதி, ராஜா போன்ற தெ‌ரிந்த முகங்கள் இருப்பது நடிகர்கள் தேர்வில் நடந்த பிழை.

பாட்டு, பைட் என்ற வழக்கமான ஃபார்முலாவிலிருந்து விலகி இருப்பதும், கமல், மோகன்லால், கணேஷ் ராகவேந்திரா ஆகியோ‌ரின் அற்புதமான நடிப்பும், உரையாடலும் உன்னைப்போல் ஒருவனின் ப்ளஸ்கள்.இப்படிப்பட்ட ஒரு படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு புதிய பாதையைக் காட்டியிருக்கிறார் கமல்.

உன்னைப்போல் ஒருவன் - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

1 Comment

 1. Billa 2007 Says,

  அவர் கணேஷ் வெங்கட்ராம், கணேஷ் ராகவேந்திரா இல்ல‌

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments