ஐபாட்க்கு ( i Pod ) வயது ஒன்பது

மியூசிக் ரசிக்க சரியான சாதனம் எது என்று கேளுங்கள் – உடனே ஐ–பாட் என்று எவரும் கூறுவார்கள். அக்டோபர் 21ல் தன் ஒன்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் ஐபாட் இன்று இசை உலகின் ஓர் அடையாளம். அறிமுகமான எட்டு ஆண்டுகளில் 22 கோடி அளவில் விற்பனையான சாதனம் ஐபாட் தான். அதிகமான எண்ணிக் கையில் விற்பனையான மியூசிக் பிளேயர் என்று மட்டும் இது பெயர் பெறவில்லை; அதிகமான அளவில் விற்பனையான டிஜிட்டல் சாதனம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

இன்று மியூசிக் பிளேயர் என்றால் அது ஐபாட் என்றே பெயர் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்தும் ரசிகர்கள், கண்களை மூடிக் கொண்டு உரத்த குரலில் இதுதான் உலகிலேயே உயர்ந்த சாதனம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அனைத்து நாடுகளிலும், மக்களின் ஏகோபித்த இசை தரும் சாதனமாக ஐபாட் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி ஐபாட் இந்த அளவிற்குப் புகழைப் பெற்றது? புதிய வழி ஒன்றின் மூலம் இசையைத் தரும் சாதனமாக அறிமுகமான இந்த டிஜிட்டல் தோழன், தனி ஒரு அந்தஸ்தை அடைந்தது எப்படி?

2001

முதன் முதலில் அக்டோபர் 21, 2001 அன்று முதல் ஐபாட் அறிமுகமானது. இப்போது இருக்கும் இதே வடிவத்தினையே அப்போதும் பெற்றிருந்தது. 5 ஜிபி கொள்ளளவும் கொண்டிருந்தது. 1000 பாடல்களைப் பதிவு செய்திட அதனால் முடிந்தது. கிளிக் செய்வதற்கு சிறிய சக்கரமும், பாடல்களை இயக்கவும் நிறுத்தவும் பட்டன்களும் இருந்தன. அதனுடைய திரை 160 x 128 பிக்ஸெல் கொண்ட கருப்பு வெள்ளை திரையாக இருந்தது.














கம்ப்யூட்டருடன் பயன்படுத்த பயர்வயர் (Firewire) இன்டர்பேஸினை யே பயன் படுத்தியது. அப்போதிருந்த யு.எஸ்.பி. 1.1 இன்டர்பேஸைக் காட்டிலும் வேகமாக இயங்கியது. ஆனால் முதலில் வந்த ஐபாட், ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டருடன் மட்டுமே இணைந்து இயங்கியது. விண்டோஸ் பயன்படுத்தியவர்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருந்தது.

2002

மார்ச்சில் இரண்டாவது வகை ஐபாட் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கொள்ளளவு 20 ஜிபி. இதில் ஒரு டச் வீல் மற்றும் பிளாப் இருந்தன. பாடல்களை வகைப்படுத்த கூடுதல் சாப்ட்வேர் தரப்பட்டது.

2003

மூன்றாவது வகை மாடல் வந்தது. இதன் கொள்ளளவு திறன் 20 மற்றும் 40 ஜிபி என்ற அளவில் இருந்தன. முந்தைய மாடல்களைக் காட்டிலும் தடிமன் மற்றும் எடை குறைவாக இருந்தன. சுற்றி வந்த கிளிக் வீலுக்குப் பதிலாக, நிலையான வீல் தரப்பட்டது. இப்போது இருக்கும் ஐபாட் கிளாசிக் மற்றும் நானோ மாடல்களில் உள்ள அதே வீல்தான் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் முதலாக யு.எஸ்.பி. போர்ட் 2 உடன் இணைந்து செயல்படத் தேவையான வசதிகள் தரப்பட்டன.

2004

ஆப்பிள் நிறுவனம் ஐபாட் சாதனத்திற்கு மாற்றாக ஐபாட் மினி என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இதில் 4ஜிபி கொள்ளளவு கொண்ட மைக்ரோ டிரைவ் இருந்தது. முழு வெளிப்பாகமும் அனடைஸ்டு அலுமினியம் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டு, ஐந்து வண்ணங்களில் வந்தன. இதனால் தங்கள் விருப்ப வண்ணங்களில் மக்கள் ஐபாட் சாதனத்தை வாங்கிப் பயன்படுத்தினார்கள். இதில் தான் முதல் முதலாக கிளிக் வீல் அறிமுகமானது. இதற்கு முன் வந்த மாடல்களில் பட்டன்கள் தனித்தனியாக இருந்தன. ஆனால் இந்த மாடலில், வீலிலேயே இவை உள்ளார்ந்து அமைக்கப்பட்டன.

















ஜூலை 2004ல், ஆப்பிள் தன் நான்காவது வகை மாடல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. 20 மற்றும் 40 ஜிபி அளவில் இவை இருந்தன. இதன் பின் மூன்று மாதங்கள் கழித்து அக்டோபரில் ஐபாட் போட்டோ என்ற மாடலை ஆப்பிள் வெளியிட்டது. இது 40 மற்றும் 60 ஜிபி அளவில் இருந்தன. கருப்பு வண்ணத்தில் சிகப்பு கிளிக் வீலுடன் இருந்தது. இதுவரை வெள்ளையாக இருந்த ஐபாடினைக் கண்டு சலித்துப் போன ரசிகர்கள் இதனை வரவேற்றனர்.

2005

ஜனவரியில் தன் ஐந்தாவது வகை மாடலைக் கொண்டு வந்தது ஆப்பிள். ஐபாட் ஷப்பிள் (iPod Shuffle) என அழைக்கப்பட்ட இந்த சாதனம் மிகச் சிறிய அளவில், கேபிள் இணைப்பின்றி நேரடியாகக் கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன் படுத்தும் அளவில் இருந்தது. 512 எம்பி மற்றும் 1ஜிபி அளவில் இவை இருந்தன. பிப்ரவரியில் மேலும் சில மாற்றங்களை இதில் ஆப்பிள் ஏற்படுத்தியது. தங்க நிற ஐபாடை எடுத்துவிட்டு, அதன் இடத்தில் வேறு வண்ணங்களைத் தந்தது.


















அடுத்து ஐபாட் மற்றும் ஐபாட் போட்டோ சாதனங்களில் 40 ஜிபி மாடலை நீக்கி, ஐபோட்டோ இடத்தில் 30 ஜிபியையும், ஐபாடில் 20 ஜிபியையும் கொண்டு வந்தது. பின் இரண்டு மாடலையும் ஒன்றாக்கியது. கருப்பு –வெள்ளை திரையையும் மூட்டை கட்டியது.
இதே ஆண்டில் ஆப்பிளின் மிகப் பிரபலமான ஐபாட் நானோ வெளியானது. ஆனால் அதே நேரத்தில் நன்றாக விற்பனை செய்யப்பட்டு, மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த ஐபாட் மினி முடக்கப்பட்டது. புதிய கலர் ஸ்கிரீன் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபான் இன்றும் 32 மற்றும் 40 ஜிபி திறனுடன் கிடைத்துவருகிறது. ஐபாட் நானோ 2 மற்றும் 4 ஜிபி திறனுடனும் கிடைத்தது.

2005 ஆம் ஆண்டிலேயே இன்னொரு ஐபாட் மாடலும் வெளியானது. இதில் புதுமையாக வீடியோ இயக்கும் திறன் அளிக்கப் பட்டது. ஐபாட் சாதனத்தில் இது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பாகும். இதனை மக்கள் ஐபாட் வீடியோ என அழைத்தனர். 2.5 அங்குல திரை 320 x 420 கலர் ரெசல்யூசனுடன் இருந்தது. வீடியோ பைல்கள் இதில் விநாடிக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஐட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் இயக்கப்பட்டு, ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைக் கட்டணம் செலுத்தி, டவுண்லோட் செய்து இயக்கும் வசதி தரப்பட்டது. இந்த வகை ஐபாட் ஸ்லிம்மாகவும், சிறியதாகவும் அமைந்திருந்தது. இப்போது இது 30 மற்றும் 60 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது.

2006

ஐபாட் ஷபிள் விலை குறைக்கப்பட்டது. முந்தைய 2 மற்றும் 4 ஜிபி மாடல்களோடு, ஒரு ஜிபி மாடலும் அறிமுகமானது.

இதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், ஐபாட் சாதனங்கள் அனைத்தின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஐபாட் ஷபிள் முந்தையதைக் காட்டிலும் பாதி அளவில் தரப்பட்டது. ஐபாடினை சட்டை மற்றும் பேண்ட்களில் மாட்டிக் கொண்டு கேட்க, கிளிப் ஒன்று சாதனத்திலேயே தரப்பட்டது.

புதிய ஐபாட் நானோ பலவகை வண்ணங்களிலும், கொள்ளளவு திறனுடனும் தரப்பட்டது. அக்டோபர் மாதத்தில் ஐபாட் நானோவின் சிகப்பு எடிஷன் அறிமுகமானது. இதன் விற்பனையில் ஒரு பங்கு பணம் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.

2007

ஐபாடுக்குப் புதிய வண்ணங்கள் அளிக்கப்பட்டன. ஆரஞ்ச், பிங்க், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் வெளிவந்தன. மொத்தம் ஐந்து வண்ணங்களில் ஐபாட் கிடைத்தது.

இந்த நேரத்தில் தான் ஐபாட் என தொடர்ந்து மைய மாடலாக இருந்த சாதனம் ஐபாட் கிளாசிக் என அழைக்கப்படத் தொடங்கியது. இதில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், இதன் கொள்ளளவு 160 ஜிபி வரை கொண்ட மாடலும் வெளிவந்தது. இன்றைக்கும் இதுவே ஐபாட் ஒன்றின் அதிக பட்ச கொள்ளளவினதாக உள்ளது. 30 ஜிபி மாடல் கைவிடப்பட்டது.

2008

ஐபாட் நானோ 8 மாடல் பிங்க் கலரில் வெளியானது. இந்த ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தில், அனைத்து மாடல்களிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆப்பிள் கிளாசிக் மாடலில் 160 ஜிபி மாடல் எடுக்கப்பட்டது. 80 மற்றும் 120 ஜிபி மாடல்கள் அதிகம் வரத் தொடங்கின. இதே போல ஐபாட் டச் பிளேயரிலும் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஸ்பீக்கர் உள்ளாக அமைக்கப்பட்டது. வால்யூம் கண்ட்ரோல் ஐபோனில் உள்ளது போலத் தரப்பட்டது.

2009

ஆப்பிள் உலகின் மிகச் சிறிய மியூசிக் பிளேயரை அறிமுகப்படுத்தியது. இது ஐபாட் ஷபிள் மாடலின் மூன்றாவது வகையாகும். இதுவரை வந்ததைக் காட்டிலும் சிறியதாகவும், ஸ்லிம்மாகவும், எடை மிகக் குறைவாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது. இதனுடைய நீளம் ஏறக் குறைய சுண்டு விரல் போலவே இருந்தது. வாய்ஸ் ஓவர் என்னும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பார்வை அற்றவர்கள் பாடல் குறித்த தகவல்கள் பெற்று இயக்க முடிந்தது. இந்த ஆண்டில் ஐபாட் நானோவில் புதிய வசதிகள் தரப்பட்டன. இதில் வீடியோ கேமரா தரப்பட்டு ரெகார்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் எப்.எம். ரேடியோவும் இணைந்திருந்தது.

இந்த ஆண்டில் ஐபாட் கிளாசிக் ஆப்பிள் நிறுவனத்தால் கைவிடப்படும் என்று எதிர்பார்த்த நேரத்தில், அதன் நினைவகத்தினை 120லிருந்து 160 ஜிபியாக உயர்த்தி, விலையை அப்படியே வைத்து ஆப்பிள் புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. அண்மையில் ஐபாட் 32 மற்றும் 64 ஜிபி மாடல்களுடன் தரப்பட்ட இயர்போனில் மைக் மற்றும் பிளே பேக் கண்ட்ரோல்களும் தரப்பட்டன.

ஐபாடின் அளவை சிறியதாக்கி, உள்ளே ஹார்ட் டிரைவின் அளவைப் பெரியதாக்கி, புதிய வசதிகளை இணைத்துத் தரும் பணியில் தொடர்ந்து ஆப்பிள் மேற்கொண்டு வருகிறது. இன்னும் பல மாறுதல்களை நாம் எதிர்பார்க்கலாம்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. அருமைங்க!

    iPod ல் FM என்பது அட்டகாசம். நான் iPod Touch பயன்படுத்துகிறேன் அதில் FM இல்லாதது எனக்கு பெரிய குறை

    பதிலளிநீக்கு