ஈ-மெயில் அனுப்பினால் பணம் வருமா???

இமெயில் உலகில் எத்தனை வகை வகையான மெயில்கள் நமக்கு நாம் விரும்பாமலே கிடைக்கின்றன. பார்வேர்ட் செய்திடச் சொல்லி ஒரு சில இமெயில்கள் நம்மைக் கட்டாயப்படுத்தும். இந்த மெயிலைப் பார்வேர்ட் செய்தால் போற வழிக்குப் புண்ணியம் என்று ஒரு சில வரும்.

ஒரு சில மெயில்கள் இது கடவுள் காரியம்; பார்வேர்ட் செய்யாவிட்டால் பாவம் என்று எச்சரிக்கும். நீங்களும் மெனக்கெட்டு உங்கள் நண்பர் ஒவ்வொருவருக்கும் அனுப்புவீர்கள். சென்ற வாரம் எனக்கொரு மெயில் வந்தது. ஒரு குழந்தைக்குத் தீராத நோய் என்று சொல்லி அக்குழந்தையின் குடும்பத்தின் ஏழ்மை குறித்து ஒரு சிறிய விளக்கம். பின் ஒருவர் அந்தக் குழந்தைக்காக எழுதியதாக ஒரு கவிதை. அதன்பின் இந்த மெயிலை ஜஸ்ட் பார்வேர்ட் செய்திடுங்கள். யாராவது பார்த்து பணம் அனுப்புவார்கள். அந்த பணம் அக்குழந்தைக்கு உதவுகையில் உங்களுக்கு கூகுள் நிறுவனம் பணம் கொடுக்கும் என்று எழுதப்பட்டிருக்கும்.

இது போன்று வரும் கடிதங்கள் அனைத்துமே பொழுது போகாதவன் யாராவது செய்திடும் இன்டர்நெட் சில்மிஷங்கள். இதில் எதுவும் உண்மை இருக்காது. எந்த நிறுவனமும் அனைத்து இமெயில்களையும் தேடி யாருக்கும் பணம் அனுப்ப முடியாது. எனவே இது போன்ற இமெயில்கள் வந்தால் தொடர்ந்து அனுப்பும் வேலையை மேற்கொள்ளாதீர்கள். சரி, உண்மையிலேயே நல்ல விஷயம் குறித்த இமெயில் வந்தால் என்ன செய்வது? அது அந்தக் கடிதத்திலேயே தெரிந்துவிடும். உங்களுக்கு உற்ற நண்பர்கள் என்றால் அதன் உண்மை தெரிய இன்னொரு இமெயில் அனுப்பிக் கேட்கலாம். அல்லது www.snopes.com என்ற தளத்திற்குச் சென்று உங்கள் இமெயில் குறித்த சில சொற்களை அமைத்து தேடினால் தற்போது இது போல வரும் இமெயில்கள் குறித்த பட்டியலைத் தரும்.

நான் தேடிய போது கிடைத்த சுவாரஸ்யமான பரிசுகள்.

இந்த இமெயில் 2 லட்சம் பேருக்கு அனுப்பப்படுகையில் அனைவருக்கும் ஒரு பீர் பாட்டில் பரிசு.

குறைந்தது 11 பேருக்கு அனுப்பு; இல்லையேல் உனது கூகுள் இமெயில் முடக்கப்படும்.

இந்த மெயிலை அனுப்பும் 1000 ஆவது ஆளாக நீங்கள் இருந்தால் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் இருவருக்கு இலவச டிக்கெட்.

மனித மாமிசம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது. உங்கள் நண்பர்களுக்கு மட்டும் இதனைத் தெரிவியுங்கள். இந்த விஞ்ஞானி எழுதியுள்ளார்.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகிறது. இதனைப் படித்தாலே இவை அனைத்தும் எவ்வளவு பெரிய மோசடி என்று தெரியும். எனவே அடுத்த முறை ஏதாவது ஒரு இமெயிலை தொடர்ந்து பார்வேர்ட் செய் என மெயில் வந்தால் உடனே அதனை அழித்துவிடுங்கள்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்