விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி : ஒரு பார்வை

பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். பலரோ , ரெஜிஸ்ட்ரியா அதுக்குள்ள போகாதே! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா கம்ப்யூட்டர் பூட் ஆகாது , என்று பயப்படுபவர்களே அதிகம். ரெஜிஸ்ட்ரியைச் சுற்றி இது போன்ற பூச்சாண்டி கதைகள் நிறைய உண்டு. உண்மையில் ரெஜிஸ்ட்ரி என்ன கம்ப்யூட்டரில் அபாயமான ஏரியாவில் உள்ளதா? ஏன் அதை எடிட் செய்யக் கூடாது என்று சொல்கின்றனர்?

உண்மைதான். ரெஜிஸ்ட்ரியில் நேரடியாக எதேனும் மாற்றங்களைச் செய்தால் அது கம்ப்யூட்டர் செயல்பாட்டினைப் பாதிக்கும்; அல்லது மேம்படுத்தும். எனவேதான் கம்ப்யூட்டரைப் பயன் படுத்தும் அனைவரும் ரெஜிஸ்ட்ரி எடிட்டிங் குறித்து தெரிந்து கொள்வதும் இல்லை; பயன்படுத்துவதும் இல்லை.

ஆனால் ரெஜிஸ்ட்ரியை பேக் அப் செய்வது என்றால் என்ன? பழுதாகிவிட்ட ரெஜிஸ்ட்ரியை சரி செய்து மீட்பது எப்படி? என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது. இதனால் நாம் பெரிய இழப்புகளைச் சந்திக்காமல் இருக்கலாம்; அல்லது சந்திக்கும் வேளைகளில் அவற்றை தைரியமாக எதிர்கொள்ளலாம். விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கிட ரெஜிஸ்ட்ரி தான் முதுகெலும்பாக செயல்படுவதால் ரெஜிஸ்ட்ரி மற்றும் அது செயல்படும் விதம் குறித்துப் பொதுவாக தெரிந்திருப்பது நல்லது.

ரெஜிஸ்ட்ரி என்பது என்ன?

ரெஜிஸ்ட்ரி என்பது பலவகையான தகவல்கள் அடங்கிய குறிப்பிட்ட வரிசைக் கிரமப்படி அடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் இயங்க இங்கிருந்துதான் அடிப்படைக் கட்டளைகள் செல்லும். கம்ப்யூட்டர் தொடங்கிய நேரத்திலிருந்து ரெஜிஸ்ட்ரி தொடர்ந்து இயக்கத்தில் இருந்து கொண்டே இருக்கும். கம்ப்யூட்டர் இயங்குவதற்குத் தேவையான தகவல்கள் மறைத்து வைக்கப்படும் பைனரி பைல்களில் இருக்கும். இந்த பைல்களை பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் ஒரு சிலர் தான் பார்க்க வேண்டியதிருக்கும். கட்டாயம் பார்க்க வேண்டும் என்றால் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் என்னும் சாப்ட்வேர் மூலம் தான் பார்க்க முடியும்.

ரெஜிஸ்ட்ரியுடன் எது செய்தாலும் அது ஆபத்தா?

ரெஜிஸ்ட்ரி கம்ப்யூட்டர் இயக்கத்துடன் முழுமையாகச் சம்பந்தப்பட்டிருப்பதால் இதற்கு ஏதேனும் பிரச்சினையை நீங்கள் உருவாக்கினால் அதன் வரிகளில் மாற்றம் செய்தால் அது கம்ப்யூட்டர் இயங்குவதை முடக்கி விடும். இதனால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரெஜிஸ்ட்ரி குறித்து பெரிய அளவில் எச்சரிக்கையை வழங்கி வைத்துள்ளது. அதே போல் இன்டர்நெட்டின் பல தளங்களில் ரெஜிஸ்ட்ரி குறித்து சற்று அளவுக்கதிகமாகவே எச்சரிக்கைகள் உள்ளன. ஆனால் ஒரு நிலையில் பார்க்கையில் இவை தேவைதான் என்று தெரிகிறது. ஒரு முறை நான் ரெஜிஸ்ட்ரியை சும்மா திறந்து பார்க்கலாம் என்று பார்த்தேன். நானாக ஒரு புள்ளியை அழித்து விட்டதாக எண்ணி அதனை மீண்டும் வைத்தேன். ஆனால் அது ஒரு கமா; விளைவு என்ன தெரியுமா? கம்ப்யூட்டர் இயங்கவில்லை. நல்ல வேளையாக ரெஜிஸ்ட்ரிக்கான பேக் அப் இருந்ததால் பிழைத்தேன். அதனை மீண்டும் காப்பி செய்து கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கினேன்.

எனவே ரெஜிஸ்ட்ரியைத் தொடும் முன் அதற்கான பேக் அப் காப்பி எடுக்க வேண்டும் என்ற விதியைச் சரியாகப் பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால் கவலை இல்லை; அது மட்டுமின்றி பேக் அப் காப்பியை எப்படி ரெஜிஸ்ட்ரியின் இடத்தில் பேஸ்ட் செய்வது என்பதனையும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டு செயல்பாடுகள் குறித்து நன்கு தெரிந்திருந்தால் ரெஜிஸ்ட்ரியைத் தாராளமாக நீங்கள் கையாளலாம்.

பேக் அப் செய்வது எப்படி?

ரெஜிஸ்ட்ரி குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு என்றால் அது ரெஜிஸ்ட்ரியை பேக்கப் செய்திடும் விஷயம்தான். எப்போது நீங்கள் சிஸ்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தாலும், புதிய ஹார்ட்வேர் சாதனத்தை இணைத்தாலும் அல்லது இது போன்று என்ன செய்தாலும் முதலில் ரெஜிஸ்ட்ரி பைலை பேக் அப் செய்துகொள்வது நல்லது. ஏனென்றால் மேற்கண்ட செயல்களில் ஈடுபடுகையில் ரெஜிஸ்ட்ரியைப் பாதிக்கும் வகையில் அவை நடந்து கொண்டால் அது கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கிவிடும். எனவே ரெஜிஸ்ட்ரி பேக் அப் என்பதைக் கட்டாயம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக இது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமான காரியமில்லை.

ரெஜிஸ்ட்ரி பேக் அப் நமக்காக ரெஸ்டோர் புரோகிராமினால் செய்யப்படுகிறது. நீங்கள் எத்தனை கால இடைவெளியில் கம்ப்யூட்டரை ஆப் செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் இது நடைபெறுகிறது. ஏறத்தாழ இது 24 மணி நேர கால அவகாசத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இத்துடன் நீங்களாகவே ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட்டை உருவாக்கலாம். இப்படி நாமாக மேற்கொள்வதும் நல்லது. குறிப்பாக சிஸ்டத்தில் ஏதேனும் புதிய புரோகிராம் மேற்கொள்கையிலும் அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்துகையிலும் இவ்வாறு ரெஸ்டோர் பாய்ண்ட் மேற்கொள்வது நல்லது. ஆனால் ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கி இயக்குவதில் என்ன பிரச்சினை என்றால் அது ரெஜிஸ்ட்ரியை மட்டும் அல்லது ரெஜிஸ்ட்ரியின் சில பகுதிகளை மட்டும் பேக் அப் எடுக்க வழி தராது.

பேக் அப் சாப்ட்வேர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் தொகுப்பிற்கென பேக் அப் சாப்ட்வேர் தந்துள்ளது, இது ஹார்ட் டிஸ்க் அனைத்தையும், ரெஜிஸ்ட்ரி உட்பட, பேக் அப் அல்லது இமேஜ் பைஅலாக எடுத்துத் தரும். இது தவிர பல தேர்ட் பார்ட்டி தரும் சாப்ட்வேர் பல ரெஜிஸ்ட்ரிக்கு என தயாரிக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்திப் பெற்று இயக்கும் புரோகிராம்களும் இவ்வகையில் சிறப்பாக நமக்குத் துணை புரிகின்றன.

ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள்

இணையத்தில் பல தளங்களில் ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்திடும் பணியை மேற்கொள்ளும் புரோகிராம்கள் இருப்பதாகக் காட்டப்படுகின்றன. இந்த புரோகிராம்கள் ரெஜிஸ்ட்ரியில் தேவைப்படாமல் தங்கி இருக்கும் வரிகளை நீக்குகின்றன.

சில புரோகிராம்கள் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாக இயங்குகின்றன. ஒரு சில புரோகிராம்கள் ரெஜிஸ்ட்ரிக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளன. அடிக்கடி சிறு சிறு புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பார்ப்பவர்கள் இது போன்ற புரோகிராம்களை சரி பார்த்து அவற்றின் நம்பகத் தன்மையைப் பிறர் மூலம் அறிந்து இயக்க வேண்டும்.

சாதாரணமாக பெர்சனல் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் இது போன்ற கிளீனர்களை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தினால் போதும். இவ்வகையில் நம்பகமான புரோகிராமாகப் பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் (CCleaner) என்னும் புரோகிராம் ஆகும்.

உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு மிக மிகக் குழப்பம் இல்லாததா? எந்தப் பிரச்னையும் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறதா? அப்படியானால் ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்யாமல் இருப்பது நல்லதுதான். ஏனென்றால் எக்குத் தப்பாக ஏதாவது ரெஜிஸ்ட்ரிக்கு தீங்கு ஏற்படும் வாய்ப்புகள் தடுக்கப்படும். கிளீன் செய்யாததால் ஒன்றும் பிரச்சினை ஏற்படாது.

கருத்துரையிடுக

2 கருத்துகள்