பாப் அப் ( Pop-Up )விளம்பரங்களைத் தடுப்பது எப்படி ?

ஆர்வத்துடனும் தேடும் நோக்கத்துடனும் நாம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நமக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் விளம்பரங்கள் திடீர் திடீரென தலை தூக்கி அது வேண்டுமா? இது வேண்டுமா? எனக் கேட்டு நம் ஆப்ஷனையும் கேட்டு தொல்லை கொடுக்கும். ஆரம்பத்தில் இவை வரத் தொடங்கிய போது தகவல்களுடன் நாம் இவற்றையும் ரசித்தோம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த விளம்பரங்கள் அதிக எண்ணிக்கையில் வருகையில் இணைய தொடர்பை மூடிவிடும் உச்ச நிலை வரை சென்று வந்தோம்.

இதற்காகவே பல பிரவுசர்களில் இந்த பாப் அப் விளம்பரங்களைத் தடுக்கும் டூல்கள் தரப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் இவற்றைத் தடுக்கும் வகையில் நமக்கு என்ன என்ன வசதிகள் உள்ளன என்று காணலாம்.

1. விண்டோஸ் + சர்வீஸ் பேக் 2+ இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

இந்த மூன்றின் இணைப்பில் விளம்பரங்களைத் தடுக்க வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிலேயே தடை செய்திடும் டூல் தரப்பட்டுள்ளது. இதனை எளிதாக செட் செய்திடலாம். Tools மெனு சென்று மீது popup blocker கிளிக் செய்து பாப் அப் பிளாக்கர் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். சில தளங்கள் தரும் விளம்பரங்கள் மற்றும் பிற தகவல்களை நாம் விரும்பலாம். அதற்கேற்ற வகையில் popup blocker கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நம் விருப்பம் போல எந்த தளங்களுக்கான தடைகளை நீக்கலாம் என்பதனையும் செட் செய்திடலாம். இது சர்வீஸ் பேக் 2 நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் டவுண்லோட் செய்து இயக்கி இருந்தால் மட்டுமே கிடைக்கும். இந்த சர்வீஸ் பேக் தரும் அருமையான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வசதி இதுவாகும்.

2. வேறு பிரவுசர்கள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் சர்வீஸ் பேக் 2 மூலமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் பாப் அப் பிளாக்கர் டூலினைத் தருவதற்கு முன்பே பல பிரவுசர்களில் பாப் அப் பிளாக்கர்கள் தரப்பட்டன. எனவே அந்த பிரவுசர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த வகையில் அதிகம் புகழப் பெற்ற மொஸில்லாவின் பயர்பாக்ஸ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பயர்பாக்ஸ் வெளிவந்த போது இதன் பல புதிய வசதிகளுக்காக பலரின் பாராட்டைப் பெற்றது. பாப் அப் பிளாக்கர், டேப் பிரவுசிங் ஆகியவை மிக அதிகமாகப் பேசப்பட்டன. அவற்றின் செயல்பாடும் நிறைவைத் தருகின்றன. 2002 ஆம் ஆண்டு வெளியான கிரேஸி பிரவுசர் (Crazy Browser) தொகுப்பும் திறமையாகச் செயல்படும் பாப் அப் பிளாக்கரைக் கொண்டுள்ளது. இதிலும் இந்த டூல் மிகத் திறமையாகச் செயல்படுகிறது.

3. பிரவுசர் டூல்பார்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புடன் இணைந்து செயல்படும் வகையில் பல டூல் பார்களைத் தருவது இன்றைய இணைய தளங்களின் ஒரு செயலாக உள்ளது. அந்த வகையில் பல தளங்களில் பாப் அப் பிளாக்கர்கள் கிடைக்கின்றன. கூகுள், எம்.எஸ்.என். மற்றும் யாஹூ இவற்றில் குறிப்பிடத்தக்கன. இவற்றை எளிதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்துவிடலாம்.

இவற்றை இணைக்கையில் இந்த தளங்கள் லைசன்ஸ் ஒப்பந்தம் என்று சொல்லி நீளமான ஒரு டாகுமெண்ட் ஒன்றைத் தருவார்கள். அதனைச் சிரமப்பட்டுத்தான் படிக்க வேண்டும். படித்த பின் கண் டாக்டரிடம் நிச்சயம் செல்ல வேண்டும். அவ்வளவு சிறிய அளவிலான எழுத்துக்களில் இவை இருக்கும்.இவை விளம்பரங்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்டாலும் இன்னொரு சின்ன பிரச்சினை உள்ளது. இந்த டூல்பார்கள் உங்களின் இணையத் தேடல் குறித்த தகவல்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கும். மேலும் உங்கள் பெர்சனல் தகவல்களையும் எடுத்து தனக்குப் பயன்பட வைத்துக் கொள்ளும். இந்த விபரங்கள் தான் அந்த லைசன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும். பரவாயில்லை என்றால் இந்த டூல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

4. பாப் அப் பிளாக்கர் சாப்ட்வேர்

பல சாப்ட்வேர் நிறுவனங்கள் கூடுதல் வசதிகள் பலவற்றுடன் பாப் அப் பிளாக்கர் சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரித்து இணையம் வழியே விற்பனை செய்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள், இவற்றை இலவசமாகப் பயன்படுத்தும் உரிமையும் வழங்கப்படும். எனவே இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்காவிட்டாலும் இலவச காலத்தில் பயன்படுத்தி இவற்றின் தன்மையைப் பார்க்கலாம்.

5. இணைய சேவை நிறுவனம் தரும் வசதிகள்

இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவும் கூடுதல் கட்டணம் பெற்றும் இத்தகைய பாப் அப் பிளாக்கர் புரோகிராம்களைத் தருகின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். இவ்வாறு தடைகளை ஏற்படுத்திய பின்னர் குறிப்பிட்ட தளங்களைப் பார்க்கையில் அவை தரும் பாப் அப் விண்டோவினை அப்போது மட்டும் பார்க்க வேண்டும் என விரும்பினால் அதற்கும் பிரவுசர்களில் வசதி தரப்படுகிறது. சில பிரவுசர்கள் இந்த தளம் ஒரு பாப் அப் விண்டோவினைத் தருகிறது. அதனை அனுமதிக்கவா? என்று கேள்வி எழுப்பும். பார்க்க விரும்பினால் அப்போதைக்கு மட்டும் அனுமதிக்கலாம்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்