டூயல் பூட் ( Dual Boot ) என்றால் என்ன ?

டூயல் பூட் என்பது எதனைக் குறிக்கிறது? இரண்டு வகையில் ஒரு கம்ப்யூட்டரை ஏன் பூட் செய்திட வேண்டும். தேவையில்லையே? என்று சில வேளைகளில் நீங்கள் எண்ணியிருக்க கூடும்.ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம்.

இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத் தலாம். இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது.

எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக்கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது. அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல். இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனப்டுகிறது.

எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விஸ்டா பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் எக்ஸ்பியையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது. இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம். கூடுதலாக விண்டோஸ் விஸ்டா மட்டுமின்றி, விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்