தங்க மழை ரகசியம்

ஒலிம்பிக் சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப் பிரம்மாண்டமான வகையில் 29வது ஒலிம்பிக் போட்டியை நடத்தி சாதனை படைத்துள்ளது சீனா. திபெத் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், மீடியா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு என சர்ச்சைகள் ஒருபக்கம் மிரட்டினாலும், வண்ணமயமான தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிட்டன. எல்லா வகையிலும் படு நேர்த்தியாக போட்டிகளை நடத்தி முடித்த விதம், சீனாவுக்கு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஒப்பற்ற ஒலிம்பிக் போட்டியை நடத்திக் காட்டியதோடு அல்லாமல், அதிகபட்சமாக 51 தங்கப்பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது சீனா. ஒலிம்பிக்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த அமெரிக்காவை 2வது இடத்துக்கு தள்ளியதே மிகப் பெரிய சாதனை.

இந்த ‘தங்கப் புதையல்’ ஏதோ மந்திரத்தால் கிடைத்த மாங்காய் இல்லை. துல்லியமான திட்டமிடுதலும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கூடிய செயலாக்கமுமே இந்த வெற்றிக்கு காரணம். ஒலிம்பிக் போட்டியை நடத்த பெய்ஜிங் தேர்வு செய்யப்பட்ட உடனேயே சீனா முழு வேகத்தில் களமிறங்கிவிட்டது. அரசு மட்டுமல்ல ஒட்டு மொத்த நாடும் ‘ஒரு உலகம் ஒரு கனவு’ என்ற முழக்கத்துடன் ஒலிம்பிக் வேள்விக்கான ஒத்திகையில் இறங்கியது.

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை, சீனாவுக்கு சுமையாக இல்லை. அத்தனை கைகளும் இணைந்து நின்றதில், ஒலிம்பிக் மலையை ஒற்றை விரலில் சுமந்து காட்டியிருக்கிறது சீனா. போட்டியை சிறப்பாக நடத்தினால் மட்டும் போதாது, பதக்கங்களையும் ஒட்டுமொத்தமாக அள்ளிவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தது.

இதற்கான தயாரிப்புகள் பற்றி கேட்டாலே மலைப்பாக உள்ளது. சீனா முழுவதும் ஆயிரக் கணக்கான சிறப்பு விளையாட்டு பள்ளிகள், லட்சக் கணக்கில் ஸ்டேடியங்கள், ஆண்டுதோறும் பிரம்மாண்டமான தேசிய விளையாட்டுப் போட்டிகள், அவற்றில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் இலவசம் என்று முடுக்கிவிட்டதன் பலன்தான் இந்த 51 தங்கப்பதக்கங்கள்.

ஒலிம்பிக் போட்டிக்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதில் எந்தவிதமான பாரபட்சமோ, ஊழலோ தலைகாட்ட முடியாத அளவுக்கு மிகக் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடித்துள்ளனர். 1995ம் ஆண்டில் இருந்தே, மக்களின் உடல்தகுதியை மேம்படுத்தும் திட்டத்தில் தீவிரம்காட்டத் தொடங்கிவிட்டது சீனா. இதற்காக தனி சட்டம் போடப்பட்டதுடன், ‘சீன தேசிய உடல்தகுதி கொள்கை’ 1996ம் ஆண்டு இயற்றப்பட்டது.

சட்டம் போட்டதோடு நின்றுவிடாமல் பள்ளி, கல்லூரிகளில் உடற்பயிற்சிக் கல்வி நூறு சதவீதம் அமல்படுத்தப்படுவதில் மிகக் கண்டிப்பாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள 44 ஆயிரம் விளையாட்டுப் பள்ளிகளில், இன்று 4 லட்சம் பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களில் இருந்து 47 ஆயிரம் பேர் தொழில் முறை விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கைநிறைய சம்பளம், பயிற்சிக்கான வசதிகள், உணவு என சகலவிதமான உதவிகளையும் சீன அரசு கொடுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் உலகத் தரத்தையும் மிஞ்சுவதே இவர்களின் ஒரே லட்சியம். இப்படி, அரசு கோடு போட... வீரர், வீராங்கனைகள் ‘ரோடு’ போட்டு காட்டியுள்ளனர்.

இவர்களை வழிநடத்த 25 ஆயிரம் முழுநேர பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தேசிய அளவில் நடந்த போட்டிகளில் அசத்திய 16 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் சர்வதேச போட்டிகளில் ஜொலித்த 3,222 பேரை ஒலிம்பிக் களத்தில் இறக்கியது சீனா. இப்படி படிப்படியாக பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்தான், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கவேட்டை நடத்தின.

ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் திறமை காட்டிய சீன பொடிசுகளின் சாகசத்தை வைத்தே, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் தன்மையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஒலிம்பிக்கை வெறும் விளையாட்டாகப் பார்க்காமல் தேசத்தின் கவுரவமாக நினைத்து செயல்பட்டதால்தான், இன்று அவர்கள் ‘தங்க மழை’யில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு... ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவியை, அபாண்டமாக ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கவைத்து பெய்ஜிங் போகவிடாமல் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியது இந்திய விளையாட்டு ஆணையம். இந்தியா ஏன் ஒலிம்பிக்கில் இவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே பதம். ?

கருத்துரையிடுக

0 கருத்துகள்