இந்தியன் பிரிமீயர் லீக் அமைப்பின் முதலாவது டுவென்டி 20 சாம்பியன் போட்டியில் 2வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. கிங்ஸ் ரசிகர்கள் கிளப் என்று அதற்குப் பெயர் சூட்டியுள்ளனர்.
ரசிகர் மன்றங்களுக்குப் பெயர் போனது தமிழ்நாடு. சூப்பர் ஸ்டார் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் வரை ரசிகர் மன்றம் இல்லாத நடிகர்களே இல்லை. ஏன், நடிகையருக்கும் கூட இப்போதெல்லாம் மன்றம் வைத்து மங்களகரமாக ஆதரவு தந்து கொண்டிருக்கிறது தமிழகம்.
இந்த நிலையில் ஐபிஎல் டுவென்டி 20 சாம்பியன் போட்டியின் முதலாவது பதிப்பில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் கிளப் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மன்றத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதற்கு கிங்ஸ் கிளப் என பெயரிட்டுள்ளனர். இங்கிலீஷ் கால்பந்து லீக்கில் உள்ளதைப் போன்ற கிளப் அது (நம்ம ஊர் ரசிகர்கள் மாதிரி டோணி கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்ய மாட்டார்கள்).
ஏற்கனவே ஏகப்பட்ட பாப்புலாரிட்டியில் மிதந்து கொண்டிருக்கும் அணிக்கு மேலும் பூஸ்ட் கொடுக்கும் வகையிலேயே இந்த ரசிகர் கிளப் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென லோகோவையும் உருவாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன செயல் தலைவர் டி.எஸ்.ரகுபதி, இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் (இவர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடரும் கூட) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஸ்ரீகாந்த் பேசுகையில், கடந்த ஆண்டு முழுவதும் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சுற்றுப்பயணத்தில் இரு்நதேன். சந்தேகமே இல்லாமல், சென்னை அணிதான் ஐபிஎல் அணிகளிலேயே பாப்புலரான அணி.
சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்த வரவேற்பு செமத்தியானது. சென்னை அணி கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் அரங்கம் நிரம்பியிருந்தது.
இந்த அணியின் தலைவராக இருந்தவர் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் கிங் டோணி என்பதால்தான் இந்த ஆதரவு கிடைத்தது.
மேலும், அணியின் அம்பாசடர் என்பதால், நானும், நிறைய டிப்ஸ்கள் கொடுத்து அணிக்கு பக்கபலமாக இருந்தேன். ஒரு கேப்டனாக நான் இந்திய அணியில் செயல்பட்டதை விட அதிக அளவிலான அனுபவமும், பெயரும், புகழும் சூப்பர் கிங்ஸின் அம்பாசடராக எனக்குக் கிடைத்தது என்றார்.
ரகுபதி பேசுகையில், இந்த ரசிகர் கிளப், அணி வீரர்களுக்கும், அணியின் ரசிகர்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த உதவும். தாங்களும் இந்த அணியின் உறுப்பினர்களில் ஒருவர் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் இது ஏற்படுத்தும் என்றார்.
நிகழ்ச்சியில் டிரம்ஸ் சூப்பர் ஸ்டார் சிவமணியும் கலந்து கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் சிவமணியின் டிரம்ஸ் மழை பொழிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது நினைவிருக்கலாம்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், வரவிருக்கிற சாம்பியன்ஸ் லீக் போட்டித் தொடருக்காக அருமையான தீம் சாங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக உருவாக்கியிருக்கிறோம் என்றார்.
0 கருத்துகள்