நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். அப்பா கிருஷ்ணராவ், அம்மா ருக்மணி. சமூகத்தில் பெயர் தெரியும் அளவுக்கு முன்னேறிய பிறகே வீட்டிற்கு வருவேன் என்று கூறிவிட்டு நாகேஷ் வந்து இறங்கிய இடம், சென்னை. ரயில்வேயில் முதலில் சிறிய வேலை. நமது இடம் இதுவல்ல என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.
தனக்கான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளாத அந்த நேரத்தில் கம்ப ராமாயணம் நாடகத்தை நாகேஷ் பார்க்க நேர்கிறது. நாடகத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள அவரது மனம் விழைகிறது. முதல் வேஷம் வயிற்று வலிக்காரன். அவரது நடிப்பை மேடையில் புகழ்ந்து பேசுகிறார் நாடகத்துக்கு தலைமை வகித்த எம்.ஜி.ஆர். இலக்கு தெரிய வந்தபிறகு அவர் தேங்கி நின்றதேயில்லை, குடிப் பழக்கத்துக்கு ஆளாகும் வரை.
எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருடனும் ஒரே நேரத்தில் பல படங்கள் நடித்திருக்கிறார் நாகேஷ். இது அன்று அதிசயம். இருவேறு திசைகளில் பயணித்த அவர்களின் படங்களில் நாகேஷ் தொடர்ந்து இடம்பெற்றதற்கு அவரது திறமையும், மக்களை வசீகரிக்கும் தன்மையுமே காரணம். இதற்கு சிறந்த உதாரணம், பாலசந்தர்.
நடிகர்களின் ஆதிக்கம் திரையுலகில் கோலோச்சியிருந்த நேரத்தில் அதனை மறுத்து, பிரபல நடிகர்கள் இல்லாமலே திரைப்படங்களை உருவாக்கியவர் பாலசந்தர். அவரின் இந்த மறுதலிப்புக்கு ஆயுதமாக பயன்பட்டவர் நாகேஷ். நாகேஷின் குணச்சித்திர நடிப்பை வெளிக்கொண்டு வந்ததில் பாலசந்தருக்கு பெரும் பங்குண்டு.
அவருக்குப் பிறகு கமல் ஹாசனின் சில படங்கள் அவரது தனித்தன்மையை வெளிப்படுத்தின. அபூர்வ சகோதரர்கள், நம்மவர், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
நாகேஷின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை எளிதாக இல்லை. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து மணந்ததால் வீட்டை பகைத்துக் கொள்ள நேர்ந்தது. மூன்று மகன்கள் இருந்தும் அவர் தனிமையில் வசிப்பதையே விரும்பினார். மூவரில் ஒருவரான ஆனந்தபாபுவின் போதைப் பழக்கம் அவரை பெருமளவு பாதித்தது. பெருளாதார நெருக்கடியால் தனது திரையரங்கை விலைபேசும் நிலைக்கு நாகேஷ் தள்ளப்பட்டார்.
சோதனைகளை எல்லாம் நடிப்பின் வாயிலாகவே அவர் கடந்திருக்கிறார். நடிப்பு அவருக்கு தொழிலாக மட்டும் இருக்கவில்லை. அது வாழ்க்கை. உடல் ஒத்துழைக்கும்வரை அவர் நடிப்பை விடவில்லை. அவரது நடிப்பில் வெளியான கடைசிப் படம் சென்ற ஆண்டு வெளியான தசாவதாரம்.
படங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை அவர் ஆயிரத்தில் ஒருவன். அடுத்தவரை புண்படுத்தாத நகைச்சுவையில் கலைவாணருக்கு அடுத்தபடி நினைவில் வருகிறவர் நாகேஷ். ஆனால், கலைவாணரின் பிரதிபலிப்பல்ல நாகேஷ். அவரது நகைச்சுவை தனித்துவமானது. யாரையும் புண்படுத்தாதது. நகைச்சுவையின் வடிவில் போதனைகள் எதையும் அவர் செய்வதில்லை. சினிமாவில் துடுக்குத்தனமான வெள்ளந்தி இளைஞர் அவர். உடல்மொழியும், மானுட அபத்தங்களுமே அவரது நகைச்சுவையின் ஆதாரங்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையாவுக்கு தனது திரைப்படத்தின் கதையை விளக்கும் அந்த ஒரு காட்சியே போதும்.
நாகேஷின் நடிப்பை, அவரது நகைச்சுவையின் வீச்சை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், யாருக்காக அழுதான் படங்களில் அவர் வெளிப்படுத்திய குணச்சித்திர நடிப்பின் பரிமாணத்தை தொகுத்து அளிப்பது, தமிழர்களைப் பொறுத்தவரை வீண் வேலை. நாகேஷ் என்ற கலைஞனை யாருடைய அறிமுகமும் இல்லாமல் இருண்ட திரையரங்குகளில் கண்டு பரவசப்பட்டவர்கள் அவர்கள்.
நகைச்சுவை திலகம் என்பதைவிட புறக்கணிப்பின் நாயகன் என்ற பட்டம் அவருக்கு பொருத்தமாக இருக்கும். உலகின் எந்த நகைச்சுவை நடிகருடனும் ஒப்பிடக் கூடிய தகுதியும், திறமையும் கொண்ட அவருக்கு இதுவரை ஒரு தேசிய விருதுகூட வழங்கப்பட்டதில்லை. மாநில அளவில்..? யோசித்தால் கலைமாமணி போன்ற கூட்டத்தோடு கும்மியடிக்கும் ஏதாவது விருது தேறலாம். மற்றபடி...?
இந்திய அளவில் புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களின் பட்டியலை தயாரித்தால் முதலிடத்தில் இருப்பார், நாகேஷ். அரசின் தடித்த சுயநல தோலை கடந்து அங்கீகாரத்தை கைப்பற்றும் எந்த சூட்சுமங்களும் அறியாத அப்பாவி கலைஞன் அவர். அவரைப் போன்று புறக்கணிக்கப்படும் கலைஞர்களுக்கு நியாயமான அங்கீகாரம் கிடைக்க என்ன செய்யப் போகிறோம்? இந்த சிந்தனையே நாகேஷுக்கு நாம் செலுத்தும் நேர்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
2 கருத்துகள்
நல்ல பதிவு..
பதிலளிநீக்குஎன் நண்பன் ஒருவன் சொன்னது:
கல்லூரி விடுமுறை நாட்களில், எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு டூரிங் கொட்டகையின் அருகிலுள்ள வாய்க்கால் மதகில் நண்பர்களுடன் அமர்ந்து, திருட்டு தம் அடித்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்பது வழக்கம்.
அதுபோல் ஒருநாள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது, வெகு தொலைவிலிருந்து ஒரு ஆள் வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தார். எங்களைத் தாண்டிப் போனவர், நின்று, எங்களிடம் வந்து, 'படம் ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆகுதுங்களா' என்று கேட்டார். 'இல்லைப்பா.. கால் மணி நேரம்தான் ஆகியிருக்கும்' என்றோம். 'இந்தப் படத்திலே நாகேஷ் இருக்கானா?' என்றார். 'ம்.. இருக்கான்' என்றோம். தியேட்டரை நோக்கி தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
என்ன படம் என்று கேட்கவில்ல; தான் இதற்கு முன் பார்த்ததா, பார்க்காததா என்ற சிந்தனைக்கும் இடம் தரவில்லை. அவர் எதிர்பார்ப்பு, அந்த படத்தில் நாகேஷ்நடித்திருக்கவேண்டும். அவ்வளவுதான். அது போதும்.
காலத்தால் அழிக்க முடியாத பாதிப்புகளை விட்டுச் செல்லும், விரல்விட்டு எண்ணக்கூடிய சாதனையாளர்களுள் ஒருவரான திரு.நாகேஷ், சமுதாயத்தில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்திற்கான சான்றுதான் மேலே உள்ள சிறு நிகழ்ச்சி.
இவருக்கு மதிப்பளித்த ஒரே தமிழ் நடிகர் கமலஹாசன்...
தவறாமல் அவரது ஒவ்வொரு படங்களிலும் இவர் நடித்து வந்தார்.
தென் இந்தியா நடிகர் என்பதால் இந்தியா அரசு அவருக்கு உண்மையான அங்கீகாரம் தரவில்லை..
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளார்.
பிழைப்புக்காக அவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார். இதுவே பின்னர் அவர் நாயகனாக நடித்த சர்வர் சுந்தரம் காதையானது என்று கூட திரையுலகில் கூறுவார்கள்.
தமிழ் திரையுலகில் அவர் சாதித்தவை எண்ணிலடங்காது. நடிப்பில் நகைச்சுவையிலிருந்து குணசித்திர மற்றும் வில்லத்தனமான வேடங்களிலும் தனது திறனை நிலைநாட்டியவர்.
அவரது பூத உடல் வேண்டுமானால் மறைந்திருக்கலாம்.. ஆனால் அவர் விட்டுச்சென்ற எண்ணற்ற நினைவலைகள்
என்றுமே பசுமையானவை, இனிமையனவை...
Many ppl doesnt get what they deserve.
பதிலளிநீக்குNagesh deserves a lot..but...