வெப் ஈ-மெயில் சாதகங்களும் பாதகங்களும்

உங்கள் கம்ப்யூட்டரிலிருந்தே இயக்கப்படும் இமெயில் வசதியை ஒரு சிலர் டெஸ்க் டாப் இமெயில் வசதி என்றும் இணைய தளம் சென்று இயக்கும் வசதியை வெப் அடிப்படையிலான இமெயில் வசதி என்றும் அழைக்கின்றனர். டெஸ்க்டாப் இமெயில் புரோகிராம்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் வாங்கும்போதே பதிந்து தரப்படுகின்றன.

இவற்றில் உங்கள் அக்கவுண்ட் தகவல்களைக் கொடுத்து இயக்க வேண்டியது உங்கள் வேலை. அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மொஸில்லாவின் தண்டர்பேர்ட் மற்றும் இடோரா போன்றவை டெஸ்க் டாப் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களாகும். இதற்கு நேர் மாறாக உள்ள இணையம் சார்ந்த இமெயில் சேவைகள் என எடுத்துக் கொண்டால் யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவற்றை எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். இந்த வசதியைப் பெற நீங்கள் இந்த இணைய தளங்களுக்குச் சென்று அதில் புதிய அக்கவுண்ட் திறந்திட தகவல்களைத் தர வேண்டியதுதான்.













அந்த
தளங்கள் கேட்கும் சில கேள்விகளுக்குப் பதில் தர வேண்டியதிருக்கும். அதன்பின் உங்களுக்கான மெயில் பாக்ஸும் இமெயில் வசதியும் தரப்படும். உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட்டில் இணைத்து இந்த தளம் சென்று உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து உங்களுக்கான மெயில் பாக்ஸைத் திறந்து உங்களுக்கான கடிதங்களைப் படிக்கலாம்; பதில் அளிக்கலாம்; அழிக்கலாம்; வேறு ஒரு போல்டருக்கு மாற்றலாம். ஆனால் இந்த செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். ஆனால் டெஸ்க் டாப் இமெயில் மற்றும் இணைய இமெயில் ஆகிய இரண்டிலும்









பல விஷயங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். இன் பாக்ஸ், அவுட் மற்றும் ட்ராஷ் பாக்ஸ், எழுத்து செட் செய்வது, பிழை திருத்தி, கடிதம் எழுதி சேவ் செய்து அனுப்புவது என அனைத்து வசதிகளும் ஒன்றாகத்தான் இருக்கின்றன; கிடைக்கின்றன; செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும் வெப் சார்ந்த இமெயில் சேவை முழுமையானதுதானா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. அவற்றை இங்கு ஆய்வு செய்திடலாம்.


சாதகங்கள்


1. வெப்மெயில் சார்ந்து பயன்படுத்த எந்த சாப்ட்வேர் புரோகிராமினையும் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. எத்தனை ஆண்டுகள் அந்த இமெயில் சேவையைப் பயன்படுத்தினாலும் எதனையும் டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் பதிய வேண்டியதில்லை. எல்லாமே நம் வெப் பிரவுசர் தொகுப்பு வழியாக நடைபெறுகிறது. இதனால் சில நாச வேலை செய்திடும் ஸ்பைவேர்களிலிருந்து தள்ளி நிற்க முடிகிறது.


2. வெப் மெயில் பயன்படுத்துவதால் நம் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சப்படுகிறது. அனைத்து இமெயில்களும் உங்கள் பிரவுசர் வழியாக ஆன் லைனில் இணைய வெளியில் இயங்கும் சர்வர்களில் சேர்த்து வைக்கப்படுகிறது. இத்தனை இமெயிலா! இவை நம் ஹார்ட் டிஸ்க்கில் இடம் எடுத்துக் கொள்ளுமே என்ற கவலை இல்லாமல் இயங்கலாம்.


3. உங்கள் இமெயில் கடிதங்களை எல்லாம் பேக் அப் எடுத்து வைக்க வேண்டுமே என்ற கவலை இன்றி இருக்கலாம். எல்லாம் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் தொலை தூர இணைய சர்வர்களில் இருக்கும். விரும்பும்போது அவற் றை எடுத்துப் பயன்படுத்தலாம்.


4. கட்டணம் வாங்கிக் கொண்டு இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் ஒன்றில் இந்த சேவையைப் பயன்படுத்தும்போது தரும் இமெயில் முகவரிகளை மற்ற நிறுவனங்களுக்கு மாறுகையில் பயன்படுத்த முடியாது. ஆனால் வெப் தளங்களில் இயங்கும் இமெயில் சர்வர்கள் உங்கள் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரைக் கட்டுப்படுத்த முடியாது. இணைய இமெயில் சர்வீஸ் தரும் தளங்கள் தரும் இமெயில் முகவரிகள் என்றும் மாறாமல் வைத்துக் கொள்ளலாம்.


5. உங்கள் வெப் சார்ந்த இமெயில்களை எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் அணுகிப் பெற்று கையாளலாம். உங்கள் வீட்டு கம்ப்யூட்டரிலிருந்துதான் அவற்றைப் பார்க்க முடியும் என்பதில்லை. அடுத்தவர் வீட்டில், அலுவலகத்தில், காபி ஷாப்பில், நூலகத்தில், ஏன் உலகில் எந்த மூலையில் இணைய இணைப்பு உள்ள கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் இமெயில்களைப் பார்வையிடலாம்; கையாளலாம்.


பாதகங்கள்


1. உங்கள் இணையம் சார்ந்த இமெயில்களைப் பார்வையிட்டு அவற்றைப் பயன்படுத்த நீங்கள் இன்டர்நெட் இணைப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் டெஸ்க்டாப் இமெயில் சேவையினைப் பெற்றிருந்தால் இணைய இணைப்பு இல்லாமலேயே கம்ப்யூட்டரில் இமெயில் கடிதங்களைத் தயார் செய்திடலாம். வந்த மெயில்களை கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து, இன்டர்நெட் இணைப்பினைத் துண்டித்த பின்னர் படிக்கலாம்; பதில் கடிதங்களைத் தயார் செய்திடலாம். பொறுமையாகப் பழைய கடிதங்களைப் படித்து மகிழலாம்.


2. இன்டர்நெட் சார்ந்த இமெயில் சேவையினைப் பயன்படுத்துகையில் இன்டர்நெட் இணைப்பு அல்லது அந்த சர்வரில் கோளாறு இருப்பின் அதனால் இமெயில்கள் கிடைப்பது பாதிக்கப்படலாம்.


3. இமெயில் வசதி தரும் நிறுவனம் தன் சர்வரை முடக்கி நிறுவனத்தை மூடிவிட்டால் உங்கள் இமெயில்களெல்லாம் அவ்வளவுதான். இந்த ஆபத்து என்றும் உண்டு. ஆனால் இன்றைய நிலையில் கட்டணம் செலுத்தி இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரிடம் இணைப்பு பெற்றவர்களும் வெப் சார்ந்த இமெயில் வசதியையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஜிமெயில், யாஹூ மற்றும் ஹாட்மெயில் போன்றவை தரும் இலவச வசதிகள்,


குறிப்பாக அளவு கடந்த ஸ்டோரேஜ் இடம் காரணமாக இவ்வகை இமெயில் பயன்பாட்டினையே விரும்புகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்